Published:Updated:

`கொலுசை அடமானம் வைத்துக் குடிக்கலாமா?' - விழுப்புரத்தில் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்

அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில், சித்ராவே 108 அவசர ஊர்திக்குப் போன் செய்திருக்கிறார்.

Representational Image
Representational Image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (35). கொத்தனார் வேலை செய்துவரும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

தீக்காயங்களுடன் செந்தில்
தீக்காயங்களுடன் செந்தில்

மதுப்பழக்கம் உடையவரான செந்தில், வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், குடும்பச் செலவுகளுக்காக சித்ரா கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்ற சித்ரா மாலையில் வீடு திரும்பியிருக்கிறார். சிறிது நேரத்தில் தலைக்கேறிய போதையுடன் வீட்டுக்கு வந்த செந்திலிடம், `வேலைக்குச் செல்லாமல் குடிப்பதற்கு மட்டும் எப்படிப் பணம் வந்தது?' என்று சித்ரா கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது பீரோவில் வெள்ளிக்கொலுசு இல்லாததைக் கண்டு கோபம் அடைந்தார் சித்ரா. அந்தக் கொலுசை ரூ.1,500-க்கு அடகு வைத்துதான் செந்தில் குடித்திருக்கிறார் என்று தெரிந்ததும், கணவனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மதுபோதையில் இருந்த செந்தில் அதுகுறித்துக் கவலைப்படாமல் உள்ளே சென்று படுத்துவிட்டார். ஆனாலும், ஆத்திரம் அடங்காத சித்ரா, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து செந்தில்மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

Representational Image
Representational Image

உடல் முழுவதும் தீப்பிடித்ததால் அலறியடித்துக் கூச்சல் போட்டிருக்கிறார் செந்தில். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில், சித்ராவே 108 அவசர ஊர்திக்குப் போன் செய்திருக்கிறார்.

அதன் பிறகு அவர்களின் உதவியுடன் தன் கணவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் சித்ரா. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.