Published:Updated:

`30 வீடியோக்கள்; தவறான புகைப்படம்!' -திருமணமான 2 மாதத்தில் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரி

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

ஒருமுறை அவர் இல்லாத நேரத்தில் அவரின் செல்போனை எடுத்துப் பார்த்தேன். அதில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் ஒன்றாக இருக்கும் தவறான புகைப்படங்கள் இருந்தன.

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி இரண்டே மாதங்களில் தன் கணவரின் நடவடிக்கைகள் குறித்து போலீஸில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருச்சி மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. விராலிமலை இந்தியன் வங்கிக் கிளையில் கேஷியராகப் பணிபுரிந்து வருகிறார், எட்வின். திருமணம் முடிந்ததும் இருவரும் மணப்பாறையிலேயே வசித்து வந்துள்ளனர். எட்வின் ஜெயக்குமார், தினமும் மணப்பாறையிலிருந்து விராலிமலையில் உள்ள வங்கிக்கு வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில், எட்வினுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போன் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. எட்வினும் நீண்ட நேரம் போனில் பேசிவந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மனைவி, எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை அவர் இல்லாத நேரத்தில் பார்த்திருக்கிறார். அதில், பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம், வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இதுகுறித்து எட்வினிடம் கேட்டபோது, `இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. இதையும் மீறி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார். இதனால மனமுடைந்தவர், போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

எட்வினின் மனைவியுடன் பேசினோம். `` டிசம்பர் மாசம் எனக்கும் எட்வின் ஜெயக்குமாருக்கும் திருமணம் நடந்தது. தொடக்கத்திலிருந்தே அவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தின. நள்ளிரவில் பெண்களுக்கு போன் செய்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். அப்போது அவர் ரொம்பவே ஆபாசமாகப் பேசுவார். ஒருமுறை அவர் இல்லாத நேரத்தில் அவரின் செல்போனை எடுத்துப் பார்த்தேன். அதில் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் ஒன்றாக இருக்கும் தவறான புகைப்படங்கள் இருந்தன.

அவர் பல பெண்களைத் தவறான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்திருந்தார். கல்யாணமாகி இரண்டே மாதத்துக்குள் இப்படிப்பட்ட நபரையா கல்யாணம் செய்து கொண்டோம் என அதிர்ச்சியடைந்தேன். மேலும், அவரது நட்பு வட்டத்தில் உள்ள பெண்களுக்குப் போன் செய்து, தவறான போட்டோக்களை அனுப்பச் சொல்வார். அவர்கள் மறுத்தால், என்னிடம் இருக்கும் போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவார். அவரின் செயலை என் குடும்பத்தினரிடம் கூறி அழுதேன்.

1,35,000 வீடியோக்களை நீக்கியது டிக் டாக்! - காரணம் என்ன?

என் கணவர் போனில் இருந்த பெண்களின் போன் நம்பரை தெரிந்துகொண்டு சிலருக்குப் போன் செய்து கேட்டேன். அதில் ஒருவர் அவருடன் வங்கியில் தற்காலிகமாகப் பணிபுரிபவர் எனத் தெரிந்தது. மற்றொருவர், `எட்வினுக்குக் கல்யாணம் ஆனது எனக்குத் தெரியாது, என்னுடன் தவறாகப் பழகியதில் நான் கர்ப்பமானேன், அதைக் கலைத்து என்னையும் ஏமாற்றிவிட்டார்' என அழுதார். நான் அவரைப் பற்றி விசாரிப்பதை தெரிந்துகொண்ட எட்வின், என்னை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடுவேன் என மிரட்டினார்.

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் நைஸாகப் பேசி ஏமாற்றி அவர்களை வலையில் விழவைத்து பின்னர் அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுப்பார். பின்னர் அதை வைத்து மிரட்டியே அவர்களிடம் தவறாக நடந்துகொண்டு வந்துள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு அருகில் உள்ள வீடுகளில் பெண்கள் துணி துவைக்கும்போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். என்னால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதற்கு அவர் வீட்டில் உள்ளவர்களும் உடந்தையாக இருப்பதுதான் பெரும் வேதனையைத் தந்தது.

`இரவில் வரும் மிஸ்டுகால்; 4 பெண்களுடன் கல்யாணம்!'- கணவனின் செயலால் `ஷாக்'கான மனைவி

அதன்பிறகு நான் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டேன். மேலும், வங்கி கேஷியர் என்ற போர்வையில் பல பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி அவர்களின் வாழ்கையை சீரழித்துக் கொண்டிருப்பவரைப் பற்றி வெளியே தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே தஞ்சை மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தேன். ஆனால், அவர்கள் புகாரை வாங்கவில்லை. எல்லா ஆதாரமும் இருந்தும் வழக்கு பதியாதது எனக்கு மனவேதனையைத் தந்தது. அதன் பிறகு டி.ஐ.ஜி லோகநாதனைச் சந்தித்துப் புகார் கூறிய பிறகே போலீஸார் வழக்கை பதிவு செய்தனர்" என வேதனைப்பட்டவர்,

`` நான் போலீஸில் புகார் கொடுக்கச் செல்லும் தகவலை அறிந்ததால், முன்ஜாமீன் பெற்றிருந்தார் எட்வின். அதை ரத்து செய்ய வேண்டும் என அவர் மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் ஆதாரமாகக் கொண்டு மனுத்தாக்கல் செய்தேன். இதைப் பார்த்த நீதிபதி, இப்படிப்பட்ட ஒருவர் மீது சாதாரண இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். இதுதான் என்னுடைய போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி. பெண்களை சீரழிக்கும் எட்வினைப் போன்றவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். அவரது வேலையைப் பறிக்க வேண்டும்" என்றார் கொந்தளிப்புடன்.

இப்படிப்பட்ட ஒருவர் மீது சாதாரண இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடுமையான பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்யுங்கள்.
நீதிபதி

இளம்பெண்ணின் வழக்கறிஞர் ஜீவகுமார் நம்மிடம், `` எட்வின் ஜெயக்குமார் மீது பெண்களைத் துன்புறுத்துதல், ஆபாசப் படம் எடுத்து மிரட்டுதல், கொலை மிரட்டல், வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீஸார் கைது செய்த பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும்" என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக எட்வின் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டோம். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

அவர் பணிபுரியும் வங்கியிலும், ` சில நாள்களாக வேலைக்கு வருவதில்லை' என்ற தகவல் சொல்லப்பட்டது. தன் மீது சொல்லப்படும் புகார்களுக்கு எட்வின் தரப்பில் விளக்கம் அளித்தால், அதை உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு