Published:Updated:

உடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண்! - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி

மனைவி அசிலா
மனைவி அசிலா

யூசுப்பின் வீடு மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் வல்லம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே காரில் சென்ற நபரை வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று கடந்த 25-ம் தேதி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் பிரிந்து வாழ்ந்த மனைவியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அந்த விசாரணையில் கூலிப்படை மூலம் அந்த மனைவியே கணவனைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட யூசுப்
கொலை செய்யப்பட்ட யூசுப்

தஞ்சையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை எஸ்.ஐ கண்ணன் தலைமையில் கொண்ட போலீஸார் குழு அமைக்கப்பட்டது. யூசுப்பின் வீடு மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தலைமையிலான போலீஸார். மூன்று நாள்களில் கொலையாளிகளைப் பிடித்ததை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ``குவைத் நாட்டில் ஜோசப் (45) என்பவரும் இலங்கை நாட்டைச் சேர்ந்த அசிலா (40) என்கிற ரசியாவும் பணிபுரிந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்துவ மதத்திலிருந்து ஜோசப் இஸ்லாமிய மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை யூசுப் என்றும் மாற்றிக்கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சாவூர் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

`தாயைக் கொல்லக் கூலிப்படை... தந்தை தற்கொலையிலும் சந்தேகம்!'- கேரளாவை மிரட்டும் பீர்ஜூ

குவைத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரில் அப்பார்ட்மென்ட் வீடுகள் மற்றும் சொத்துகள், விவசாயப் பண்ணை எனப் பலவற்றை யூசுப் பெயரிலேயே வாங்கியதுடன் அங்கேயே இவர்கள் வசிக்கத் தொடங்கினர். வீடுகளை வாடகைக்கு விட்டது உட்பட பலவற்றின் மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. அதை வைத்து சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.

இதையடுத்து யூசுப் மட்டும் மீண்டும் குவைத்தில் உள்ள ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். தஞ்சையிலேயே அசிலா குழந்தைகளுடன் இருந்து வந்தார். இதற்கிடையே யூசுப்புக்கும் அசிலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அசிலாவின் நடத்தையில் யூசுப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், குவைத்திலிருந்து வந்த யூசுப் விளார் சாலையில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் சொத்துப் பத்திரம், பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு மீண்டும் குவைத் சென்றுவிடுகிறார்.

கொலை செய்யப்பட்ட யூசுப்
கொலை செய்யப்பட்ட யூசுப்

அதன்பின்னர், அசிலா அந்தத் தனியார் வங்கியின் மேனேஜரை கையில் வைத்துக்கொண்டு யூசுப் அனுமதி இல்லாமல் லாக்கரில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றை உடைத்து எடுக்கிறார். குவைத்திலிருந்து வந்த யூசுப் வங்கிக்குச் சென்று பார்த்த பிறகு லாக்கரில் இருந்த எல்லாமும் எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் வங்கி மேனேஜர் மற்றும் தன் மனைவி அசிலாவின் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதில் அசிலா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வருகிறார்.

புதுச்சேரி: முதல்வர் அலுவலகத்தில் கொரோனா; தனிமையில் நாராயணசாமி

பிறகு வீட்டுக்கு வந்த அசிலாவிடம் பேசிய யூசுப், `உனக்கு சொத்து, பணம் உள்ளிட்ட எதுவும் கிடையாது. நீ ஒழுங்கானவள் கிடையாது' எனக் குழந்தைகளுடன் அடித்து வீட்டைவிட்டு வெளியே துரத்திவிடுகிறார். அதன்பிறகு திருச்சியைச் சேர்ந்த சகாயம் என்பவர் உதவியுடன் திருச்சியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடியேறுகிறார்.

யூசுப் மனைவி அசிலா
யூசுப் மனைவி அசிலா

இந்நிலையில் அசிலாவை வீட்டைவிட்டு அனுப்பிய பிறகு யூசுப்புக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு தினமும் ஒரு பெண் என ஜாலியாக வாழத் தொடங்குகிறார். மேலும், இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு ஒன்றும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சொத்துகளையும் ஒவ்வொன்றாக விற்று தன்னிடம் தொடர்பில் இருக்கும் பெண்களுக்கு கொடுத்து வருகிறார். திருச்சியில் இருந்தாலும் யூசுப்பின் ஒவ்வொரு அசைவையும் அசிலா கவனித்து வந்தார்.

யூசுப் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் பெண்களிடம் பேசும் ஆடியோ என அனைத்தும் அசிலாவின் கையில் உள்ளன. தன்னையும் பிள்ளைகளையும் தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு பெண்களுடன் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருந்த யூசுப்பின் செயல்கள் அசிலாவுக்குக் கடும் கோபத்தை வரவைத்துள்ளது.

கொரோனா: `அப்பா, என்னால் சுவாசிக்க முடியவில்லை!’ -கலங்க வைத்த வீடியோ

இந்நிலையில், யூசுப்பைத் தீர்த்துக்கட்ட விளார் சாலையில் உள்ள கூலிப்படையினர் மூலமாகத் திட்டம் தீட்டுகிறார். இதற்காகக் கூலிப்படைக்கு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட அந்தக் கூலிப்படையினர் யூசுப்பை கொல்லவில்லை. இப்படியே பல மாதங்கள் சென்றுவிட்டன. பிறகு சகாயம் என்பவரிடம் இதைப் பற்றிக் கூறுகிறார். `இதற்கு ஏன் தஞ்சையில் உள்ளவரிடம் பணம் கொடுத்தாய்... இங்கேயே பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறி திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினர் கும்பலை அறிமுகம் செய்கிறார்.

அவர்களிடம் யூசுப்பை கொலை செய்ய 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யூசுப் கதையை முடித்த பிறகு, பாக்கி பணத்தைத் தருவதாகப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடங்குவதற்கு முன்னரே இவை திட்டமிடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் என்ற இடத்தின் மேம்பாலத்தில் கார் மூலம் யூசுப் சென்று கொண்டிருந்தபோது திருச்சியிலிருந்து இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் யூசுப்பை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொன்றுவிட்டு கல்லணை வழியாகத் திருச்சிக்கு தப்பியோடிவிட்டனர்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அசிலாவைப் பிடித்து விசாரித்தோம். போலீஸாரை திசைதிருப்பி தப்பிப்பதற்காக முதல்முறை பணம் கொடுத்த கூலிப்படையினர்தான் இதை செய்திருக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், அவர்கள் இதைச் செய்யவில்லை எனக் கண்டுபிடித்ததுடன் இந்தக் கொலையை செய்த திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த சகாதேவன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும், கொலைக்கான பல ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறோம் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் யூசுப் உறவினர்களோ, ``அசிலாவுக்கும் சில ஆண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால்தான் இருவருக்கும் இடையே பிரச்னையே ஏற்பட்டது. பின்னர் யூசுப்பும் தவறான பாதையில் செல்லத் தொடங்கினார். தற்போது யூசுப் கொல்லப்பட்டுவிட்டார். அசிலாவின் வாழ்க்கையும் சீரழிந்துவிட்ட நிலையில் 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு