Election bannerElection banner
Published:Updated:

மும்பை: `நல்லது நடக்கும்!’- ரத்தன் டாடாவின் போலி கார் நம்பருடன் சுற்றிய பெண்

போலி நம்பர் பிளேட்டுடன் பிடிபட்ட கார்
போலி நம்பர் பிளேட்டுடன் பிடிபட்ட கார்

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கார் நம்பரின் போலி நம்பர் பிளேட்டுடன் பி.எம்.டபிள்யூ காரில் சுற்றிய பெண் மும்பையில் பிடிபட்டார்.

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு, போக்குவரத்து விதிகளை மீறிவிட்டதாகக் கூறி டிராஃபிக் போலீஸார் அண்மையில் நோட்டீஸ் அனுப்பி, அபராதம் கட்டும்படி கூறியிருந்தனர். நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரத்தன் டாடா, தனது டிரைவரிடம் இது குறித்து விசாரித்தார். ஆனால், யாரும் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என்று தெரிவித்தனர். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. ரத்தன் டாடாவின் கார் எண் 111. அதே நம்பர் பிளேட்டுடன் சென்ற கார் மாதுங்கா பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. கண்காணிப்பு கேமரா உதவியுடன் கார் நம்பரைக் கண்டுபிடித்து இ-செலான் அனுப்பப்பட்டது. டாடாவின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் இது குறித்து விசாரித்து போலி நம்பர் பிளேட்டுடன் கார் வைத்திருக்கும் நபர் யார் என்பதைக் கண்டுபிடித்தனர்.

முன்னாள் ஊழியர் குடும்பத்துடன் ரத்தன் டாடா
முன்னாள் ஊழியர் குடும்பத்துடன் ரத்தன் டாடா

கீதாஞ்சலி ஷா என்ற பெண் தனது பி.எம்.டபிள்யூ காரில் தனது கார் நம்பரான 1110 என்ற நம்பரில் `0’ வை நீக்கிவிட்டு, 111 என்ற எண்ணை மட்டும் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது 111 நம்பரைப் பயன்படுத்தினால் தனக்கு நல்லது நடக்கும் என்று கருதி பயன்படுத்தியதாகத் தெரிவித்தார். அந்தப் பெண்ணைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது வழக்கு பதிவு விசாரித்துவருகின்றனர்.

முன்னாள் ஊழியரிடம் நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடா!

திருமணமே செய்துகொள்ளாமல் வாழும் ரத்தன் டாடா, முதுமை காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முழு நேர கம்பெனி பொறுப்பிலிருந்து விலகி ஆலோசகராக மட்டும் இருந்துவருகிறார். டாடா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ரத்தன் டாடாவுக்குத் தெரியவந்தது. புனேவிலிருக்கும் அந்த ஊழியரைப் பார்த்து நலம் விசாரிக்க ரத்தன் டாடா புறப்பட்டுச் சென்றார். அவர் தன்னுடன் பாதுகாவலர் யாரையும் அழைத்துச் செல்லாமல், தான் மட்டும் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியரைச் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. டாடா நிறுவனத்தில் பணியாற்றும் யோகேஷ் தேசாய் என்ற ஊழியர் சமூக வலைதளத்தில் இதைத் தெரிவித்து, ரத்தன் டாடா உடல்நலம் பாதித்த முன்னாள் ஊழியரின் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்தார். ரத்தன் டாடாவின் செயலை சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கானோர் பாராட்டி, கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

`எல்லோருக்கும் நன்றி!' - 7 லட்சம் ஊழியர்களுக்கு டாடா சன்ஸ் தலைவர் உருக்கமான கடிதம்

இதற்கு முன்பு மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்த தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் 80 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று நலம் விசாரித்தார் டாடா. மேலும், அவர்கள் குழந்தைகளின் முழு படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாகவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு ஏற்றுக்கொள்வதாகவும், கம்பெனியில் வாங்கியிருந்த கடன் தள்ளுபடி போன்ற சலுகைகளையும் ரத்தன் டாடா அறிவித்திருந்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு