Published:Updated:

பிரிந்து சென்ற கணவர்; உறவினர் வீட்டில் மகள்! -ஊரடங்கால் தற்கொலை முடிவெடுத்த பெண்

தற்கொலை
தற்கொலை ( மாதிரிப் படம் )

கணவர் பிரிந்து சென்று விட்டதால் மகளுடன் வசித்து வந்த இளம்பெண், வேலைக்காக சென்னை வந்தார். தனிமையில் தவித்த அவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மேடவாக்கம், புஷ்பா நகரில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஜெயா (36) என்பவர் குடியிருந்து வந்தார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 7 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் ஜெயாவின் கணவர், அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மகளை வளர்க்க வேலை தேடி ஜெயா சென்னை வந்தார். சென்னையில் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவரின் மகள், உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறாள்.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், 17-ம் தேதி ஜெயா மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயாவின் சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெபசிங் வழக்குபதிந்து விசாரித்தார்.

தற்கொலை -என்ன காரணம்?

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் கூறுகையில், ``சென்னை கிண்டியைச் சேர்ந்த பானுவின் மகளும் ஜெயாவும் தோழிகள். இருவரும்தான் ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர். 16-ம் தேதி பானுவின் மகளுக்கு உடல்நலம் சரியில்லாததால், அவளை பானு கிண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஜெயாவையும் கிண்டிக்கு அழைத்தபோது அவர் செல்லாமல் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அதன்பிறகு 17-ம் தேதி ஜெயாவைச் சந்திக்க பானு, அவரின் மகள் ஆகியோர் மேடவாக்கத்திற்கு வந்துள்ளனர். நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது சேலையில் ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் கதவை உடைத்து ஜெயாவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

`20 வீடுகளுக்குப் பூட்டு; ரூ.62 லட்சம் கொள்ளை!’ - சென்னை ஆடு வியாபாரிகள் அதிர்ச்சி

கணவரைப் பிரிந்து ஜெயா வாழ்ந்ததாலும் ஊரடங்கால் தன்னுடைய குழந்தையைப் பார்க்காமல் இருந்ததாலும் மனஉளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு காவல் நிலையங்களில் தற்கொலை தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. அதனால் ஊரடங்கு பணியிலும் தற்கொலைச் சம்பவங்களை விசாரிப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு