Published:Updated:

கள்ளக்குறிச்சி: தேவியானந்தல் கிராமத்து மாணவி சரஸ்வதி கொலையில் நடந்தது என்ன?

``என் மனைவி, `ஐயோ... என் மகளே...' எனக் கதறி அழுதபோதுதான் பதறியடித்து ஓடி வந்தேன். இடியே விழுந்ததுபோல இருந்தது. கழுத்தில் இறுக்கப்பட்ட தழும்புடன் மர்மமான முறையில் என் மகள் சரஸ்வதி இறந்துகிடந்தாள்." - பெண்ணின் தந்தை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி (19) எனும் இளம்பெண், திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்காததால், இந்த மாதம் கடந்த 2-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அரசியல் தலைவர்கள் சிலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்காக தேவியானந்தல் கிராமத்துக்கு நேரில் சென்றோம்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே 22 கி.மீ தொலைவிலுள்ளது அந்த கிராமம். சில மணி நேரத்துக்கு ஒரு முறை பேருந்துகள் இயங்கும் ஒரு சிறிய கிராமம் அது. ஊரின் உட்புறமாக, மௌனம் நிலவியபடி இருந்த ஓர் குடிசை வீட்டுக்கு வழிகாட்டினார்கள் அந்தப் பகுதி மக்கள். மழை நேரங்களில் ஒழுகாமல் இருக்க வீட்டின் கூரைமீது தார்ப்பாய் அமைக்கப்பட்டிருந்தது. அதுவே, கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் வீடு. மகள் பிரிந்த துயரத்திலிருந்து வெளிவர முடியாதபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்த அவரின் பெற்றோரைச் சந்தித்தோம், ஆறுதல் கூறுவதற்கும் வார்த்தைகளின்றி.

சரஸ்வதியின் வீடு
சரஸ்வதியின் வீடு

``என் பெயர் வீரமணி (42). என் மனைவி பெயர் ஜெயகாந்தி (36). நான் லாரி டிரைவராக வேலை செய்துவருகிறேன். என் மனைவி துப்புரவுப் பணியாளராக இருக்கிறார். மூன்று பொண்ணுங்க, ஒரு பையன் என எனக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்தவள்தான் சரஸ்வதி (19). படிப்புல ரொம்ப கெட்டிக்காரி. அவளுக்கு, டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. அது முடியாமல் போகவே பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் சென்னையிலுள்ள நர்ஸிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்ஸிங் படித்துவந்தாள்.

என் மகள் தப்பானவள் கிடையாது. அவ மீது எங்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. படிக்கிற பழக்கவழக்கத்தைவெச்சு அந்தப் பசங்ககூடப் பேசியிருக்கிறாள். அவனுங்களாகவே வந்து, `உன்னை லவ் பண்ணுகிறேன்' எனக் கூறி பாப்பாவை மிரட்டி கொன்னுருக்கானுங்க. அவனுங்க இதே ஊர்தான். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ரங்கசாமி, அவன் தம்பி கோவிந்தசாமி (தம்பியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது), நண்பன் ரவீந்திரன் மூவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள். என் மகள் சரஸ்வதியின் சம்மதத்தோடு ஒரு இடத்துல சம்பந்தம் பேசி, பத்திரிக்கை அடித்து, வைகாசி 3-ம் தேதி கல்யாணம் நடப்பதாக இருந்தது. அதற்குள் இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டுவிட்டது" எனக் கூறியபடி கண்ணீர் வடித்தார்.

தன் வருத்தங்களை மறைத்துக்கொண்டு மீண்டும் நம்மிடம் பேசத் தொடங்கினார். இது நடந்தது இந்த மாதம் 2-ம் தேதிதான். அன்று இரவு பிள்ளைகள் உள்ளே தூங்கிக்கிட்டு இருந்தாங்க. நானும் மனைவியும் வீட்டின் வெளிப்பகுதியில் படுத்திருந்தோம். காலை நான்கு மணி அளவில் குளிர்க்காற்று அடித்ததால் உள்ளே எழுந்து சென்றேன். அப்போது என் மகன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வெளியில் வந்தான். அவனை வெளியில் அழைத்து வந்து விட்டுவிட்டு, மூத்த மகளைக் காணவில்லை என வீட்டின் பின்புறமாக உள்ள பகுதிகளில் தேடி அலைந்தேன். எங்கள் பாத்ரூம் அருகே என் மகள் சரஸ்வதி கிடப்பதைக் கண்ட என் மகன், என்னுடைய மனைவியிடம் கூறியிருக்கிறான். என் மனைவி, 'ஐயோ... என் மகளே...' எனக் கதறி அழுதபோதுதான் பதறியடித்து ஓடி வந்தேன். இடியே விழுந்ததுபோல இருந்தது. கழுத்தில் இறுக்கப்பட்ட தழும்புடன் மர்மமான முறையில் என் மகள் இறந்துகிடந்தாள். இறப்பில் சந்தேகமாக இருந்ததால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன்.

சரஸ்வதியின் பெற்றோர்
சரஸ்வதியின் பெற்றோர்

நான் கோபக்காரன் என்பதால், `நான்தான் கொன்றிருப்பேன்' என, என்மீது போலீஸ் முதலில் சந்தேகப்பட்டது. அப்புறமா போன் நம்பர்வெச்சு தேடி வந்தார்கள். கெடிலம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மாமா அவனுடைய செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணியிருக்காரு. அவரை விசாரிச்சதுக்கு அப்புறமாக மூன்று நாள்களுக்கு முன்னாடி அந்த மூன்று பசங்களையும் போலீஸ் கைது பண்ணிச்சு. ஊர்ல மத்தவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா... அவங்களைக் காப்பாத்த ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடியிருக்கேன். ஆனா, அன்னைக்கு என் பிள்ளையை என்னால காப்பாத்த முடியாமப் போச்சு. என் பொண்ணு இறப்பதற்கு முன்னாடி அவ அம்மாகிட்ட, `இந்த மாதிரி பிரச்னைனு' ஏதாவது கூறினாளோ.. என்னவோ... தெரியலை. சரஸ்வதியின் இழப்பைத் தாங்கிக்க முடியாம இப்போ என் மனைவியும் மனசளவுல பாதிச்சுப் பேச முடியாம இருக்கா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் நல்லா சம்பாதிப்பேன். ஆனா, காசு பணமெல்லாம் சேர்த்துவைக்கலை. பசங்களை நல்லபடியா வளர்த்து என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா படிக்கவெச்சேன். சிறுவயதிலிருந்தே தனியார் பள்ளிகளில்தான் படிக்கவெச்சேன். என்னுடைய கல்யாணத்துக்கு முன்னாடி வரை, வேறு ஏதாவது குழந்தைகளை தூக்கினா கையில சிறுநீர் போயிடும்னு தூக்கவே மாட்டேன். ஆனால், முதன்முதல்ல என் கையில தூக்கினது என்னுடைய பொண்ணைத்தான். ஆனா இன்று என் மகள் இல்லை. எனக்கு இப்படி நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..." எனக் கறியபடி கண்ணீர் வடித்தார் வீரமணி. பின், அவருக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அதைத் தொடர்ந்து, திருநாவலூர் காவல் நிலையத்துக்குச் சென்றோம். காவல் ஆய்வாளர் ஸ்ரீநிவாசனுக்குக் காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக விடுப்பில் இருந்ததால், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``இருவரும் சுமார் மூன்று வருட காலமாக காதலித்துவந்ததாகச் சொல்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சரஸ்வதியின் வீட்டில், அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த மாப்பிள்ளையைப் பார்த்து திருமண ஏற்பாடு செய்துவந்துள்ளனர். இது பற்றித் தெரிந்துகொண்ட ரங்கசாமி, சம்பவத்துக்கு 10 தினங்களுக்கு முன்பாக அந்தப் பெண் பயின்றுவரும் சென்னைப் பகுதிக்குச் சென்று சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறான். சம்பவத்துக்கு முன்பும், `வா... நாம் ஓடிச்சென்று திருமணம் செய்துகொள்வோம்' என அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறான். சம்பவத்தன்று இரவும், `வா... நாம் ஓடிப் போய்விடுவோம்' என மீண்டும் பேசியிருக்கிறான். `இல்லை, என் வீட்டில் சொல்பவர்களைத்தான்...' என அந்தப் பெண் கூறவே, ஆத்திரத்தில் தன் தம்பி மற்றும் நண்பர்களுடன் இணைந்து அந்தப் பெண்ணை கொலை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை ட்ராக் செய்து கண்டுபிடித்தோம். கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் இருந்தார்கள். அவர்களைக் கைதுசெய்து விசாரித்ததில் மேலே கூறிய அந்த உண்மைகள் தெரியவந்தன. ரங்கசாமியின் தம்பி மைனர் என்பதால் அவனை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், ரங்கசாமி மற்றும் ரவீந்திரனை கடலூர் மத்திய சிறையிலும் அடைத்துள்ளோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு