Published:Updated:

`நெயில் பாலிஷ் விலையோ ரூ.388; பறிபோனதோ ரூ.92,446!’ -சினிமா பாணியில் இளம்பெண்ணுக்கு வந்த அதிர்ச்சி

நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷ் ( Pixabay )

மொபைல் எண்ணைக்கொடுத்த சில மணி நேரங்களில் இளம்பெண்ணின் இரண்டு வெவ்வேறு தனியார் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.90,946 ஐந்து தவணையாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்திகள் மொபைலுக்கு வந்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி தன்னுடைய மொபைல் வழியாக இணையத்தில் நெயில் பாலிஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். நெயில் பாலிஷின் விலையான ரூ.388-ஐ தனியார் வங்கிக் கணக்கு ஒன்றிற்குப் பறிமாற்றம் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் டெலிவரி ஆக வேண்டிய தினத்தில் வரவில்லை என்பதால் இணையதளத்திற்குச் சொந்தமான வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

இதுதொடர்பாக சேவை மையத்தினர் இளம்பெண்ணிடம் பேசும்போது, ``ஆர்டருக்கான பணம் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்பதால் ஆர்டர் உங்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை. ஒருவேலை பணம் வந்தால் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பறிமாற்றம் செய்கிறோம்” என்று கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருடைய தொடர்பு எண்ணையும் கேட்டு வாங்கியுள்ளனர்.

நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷ்

மொபைல் எண்ணைக் கொடுத்த சில மணி நேரங்களில் இளம்பெண்ணின் இரண்டு வெவ்வேறு தனியார் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90,946-ஐ ஐந்து தவணையாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்திகள் மொபைலுக்கு வந்துள்ளன. அவருடைய பொதுவங்கி கணக்கு ஒன்றிலிருந்தும் ரூ.1500 எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை மீட்பதற்கு அவர் செய்த பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை அப்பகுதியிலுள்ள வாகட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, ``கடந்த டிசம்பர் மாதம் 17 முதல் 30-ம் தேதிக்குள் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் கணக்கிலிருந்து மொத்தமாக ரூ.92,446 எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வங்கிக்கணக்கு தொடர்பான எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை என அவர் கூறுகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இணையதளத்தில் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்து வங்கிக் கணக்கிலிருந்து மிகப்பெரிய தொகையை இழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`ஒரு வருஷம்தான் சிரமம், அப்புறம் மாசம் இரண்டரை லட்சம் சம்பளம்!'- சினிமாவை விஞ்சிய சென்னை சீட்டிங்
அடுத்த கட்டுரைக்கு