Published:Updated:

தி.மலை: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்? ; மூதாட்டி இறுதிச்சடங்கில் அவலம்! - நடந்தது என்ன?

பாதிக்கப்பட்ட தரப்பினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர்.

சம சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஊராட்சி மன்றத் தேர்தலில் ஆதரவு அளிக்காததன் விளைவாக ஏற்பட்ட பிரச்னையின் தொடர்ச்சியாக மூதாட்டி ஒருவரின் இறுதிச்சடங்கை முறையாக நடத்த முடியாத அவலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.

ஒரு குழந்தை பிறக்கும்போது அழுகையுடனே பிறக்கிறது. அதே குழந்தை இந்த உலகில் வளர்ந்து, தன் வாழ்நாட்களின் பயணத்தை முடித்து இறப்பைத் தழுவும்போது, அந்த உடலுக்குச் சுற்றமும், நட்பும், ஊர் மக்களும் ஒன்றிணைந்து துக்கத்தை அனுசரித்து ஒரு துளி கண்ணீரேனும் சிந்தி இறுதிச்சடங்கைச் செய்து முடிப்பார்கள். ஆனால், இறுதிச்சடங்கின்போது மேளம் அடிப்பதற்கோ, உடலைப் புதைப்பதற்கோ, பாடை கட்டுவதற்கோ ஒருவரும் வராமல், ஊர் மக்களும் பங்குகொள்ளாமல் இறந்தவரின் வீட்டைப் புறக்கணிக்கும்போது... அந்தக் குடும்பத்தினர் மட்டும் யார் துணையுமின்றி, தாங்களே அந்த உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலநிலையை என்னவென்று சொல்ல முடியும்... அப்படி ஓர் அவலமான சம்பவம்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.

சேட்டு, தாசில்தாரிடம் பேசியபோது.
சேட்டு, தாசில்தாரிடம் பேசியபோது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள மங்கலம் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (54). கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மேத்தா ரமேஷ் (48). விசிக கட்சியில் இருப்பவர். இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மேத்தா ரமேஷ் என்பவர் தன்னுடைய மனைவி கதிஜாவை உள்ளாட்சித் தேர்தலின்போது ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். அதே தேர்தலில், அரிதாஸ் (முன்னாள் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்) எதிர் வேட்பாளராக போட்டியிட்டிருக்கிறார். இவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். எனவே, கட்சி சார்ந்து சேட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தச் செயலே இன்றளவும் தொடரும் பிரச்னைக்குத் தொடக்கமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.

சம சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, தனக்கு ஆதரவு தராமல் மாற்று சமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால், மேத்தா ரமேஷுக்கும் - சேட்டு தரப்புக்கும் பிரச்னை ஏற்படத் தொடங்கியுள்ளது. அந்த ஊராட்சி மன்றத் தேர்தலில், மேத்தா ரமேஷின் மனைவி கதிஜா வெற்றிபெற்று, தற்போது தலைவராக இருக்கிறார். கிராமப்புறங்களில் நாட்டாமை அல்லது பஞ்சாயத்து என இருப்பதுபோல, அந்த கிராமத்திலும் ஐந்து நபர்கள் இருக்கிறார்கள். மேத்தா ரமேஷ், தங்கம், சேட்டு, பாலு, துரை என்பவர்கள் அந்த ஐந்து பேர். கதிஜா தலைவராகப் பொறுப்பேற்ற சில தினங்களில், சேட்டுவின் சகோதரர் வீட்டில் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் நான்கு மாதகாலமாக இன்னலுற்றுவந்த அந்தக் குடும்பத்தினர், கடந்த வருடம், செப்டம்பர் மாதம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேத்தா ரமேஷ்
மேத்தா ரமேஷ்

வட்டார வளர்ச்சி அலுவலரும் நேரில் வந்து தண்ணீர், மின் இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சாலையோரமாக சேட்டு வைத்திருந்த தள்ளுவண்டிக் கடையையும் அகற்றும்படி கூறியுள்ளனர். இப்படியாக காலம் போய்க்கொண்டிருக்க, சேட்டுவின் உறவினர் ஒருவர் முன்பு இறந்தபோது, இப்போது நடந்தது போலவே அப்போதும் ஊர் மக்கள் யாரும் அங்கு போகவில்லையாம். இதனால் ஆத்திரம் கொண்ட சேட்டுவின் தரப்பைச் சேர்ந்தவர் மேத்தா ரமேஷ் என்பவரை தாக்க, இருன்தரப்புக்கும் மேலும் பிரச்னை ஏற்பட்டு வழக்கும் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி சேட்டுவின் சித்தி அஞ்சலாட்சி(60) உடல்நலக் குறைவு காரணமாக இறந்துள்ளார். இறுதிச்சடங்கு செய்வதற்காக மேளம் அடிப்பவர், சடங்கு செய்பவர், உடல் அடக்கம் செய்யக் குழி தோண்டுபவர் என யாரை கூப்பிட்டாலும் அங்கு வருவதற்கு மறுத்துள்ளனர். 'அவர்கள் ஊரைவிட்டு தள்ளிவைக்கப்பட்டதாகவும், அங்கு யாரும் போகக் கூடாது' என மேத்தா ரமேஷ் தரப்பு ஊர் மக்களை மிரட்டிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உடலைப் புதைப்பதற்கும் இடையூறு இருப்பதாகக் கூறி 15-ம் தேதி வட்டாட்சியரை நாடியிருக்கிறார் சேட்டு. வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், `தனக்கு இதில் உடன்பாடு இல்லை எனவும், ஊரில் உள்ள நான்கு முக்கிய நிர்வாகிகள் விரும்பினால் சடலத்தை புதைக்கலாம்' என்றும் கூறிவிட்டு மேத்தா ரமேஷ் அங்கிருந்து வெளியேறிச் சென்றாராம். அப்போது அங்கு வந்த சேட்டுவின் ஆதரவாளர்களும், மேத்தா ரமேஷின் ஆதரவாளர்களும் கூட்டமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேத்தா ரமேஷுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர்.
மேத்தா ரமேஷுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர்.

ஊர் மக்களும், சடங்கு செய்பவர்களும், மேளம் அடிப்பவர்களும் விருப்பமில்லை எனக் கூறியதால் அந்தக் குடும்பத்தினர் மட்டுமே இணைந்து 15-ம் தேதி மாலை இறுதிச்சடங்கை செய்து முடித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டதாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மொத்தமாக 62 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது கீழ்க்கொடுங்காலூர் காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு