Published:Updated:

`வேலூர் கோட்டையில் கத்தி முனையில் காதலன்!’ -3 பேர் கும்பலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

வேலூர் கோட்டையில், காதலனுடன் அமர்ந்திருந்த இளம்பெண்ணை 3 பேர் கும்பல் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கம்பீரமாகவும் அழகிய கலைநயம் மிக்கதாகவும் திகழும் வேலூர் கோட்டையைத் தொல்லியல் துறை சரியாகப் பராமரிக்காமல் விட்டதால், மதில் சுவரின் உட்புறத்தில் மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளன. சிலர் புதர் மறைவிலும், மதில் சுவரின் இடைவெளியிலும் அமர்ந்துகொண்டு முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்.

கோட்டை நுழைவு வாயில் பூங்கா
கோட்டை நுழைவு வாயில் பூங்கா

கோட்டை நுழைவு வாயிலின் இரண்டு பக்கமும் உள்ள பூங்காவிலும், அகழிக்கு அருகில் உள்ள பெரியார் பூங்காவிலும் அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபடுகிறார்கள். செயின் பறிப்பு, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுபவர்களும் அச்சுறுத்தும்வகையில் கோட்டையில் சுற்றித்திரிகிறார்கள்.

குற்றச்செயல்களில் தொடர்புடைய நபர்களும் போதையில் ஆங்காங்கே அமர்ந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகளும் காதலர்களும் அச்சமடைகிறார்கள். இந்த நிலையில், காதலனுடன் கோட்டைக்கு வந்திருந்த 24 வயது இளம்பெண்ணை 3 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோட்டை நுழைவு வாயில் பூங்கா
கோட்டை நுழைவு வாயில் பூங்கா

வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்துவரும் அந்தக் காதல் ஜோடி நேற்றிரவு 9.30 மணியளவில், சாரதி மாளிகை எதிரே உள்ள கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளது. இளம்பெண்ணின் தங்க கம்மலைப் பறித்த அந்தக் கும்பல், கொடூரமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, வேலூர் வடக்குக் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில், ஒருவன் சிக்கியுள்ளான்.

கோட்டை மதில் சுவரின் உட்புறப் பகுதி
கோட்டை மதில் சுவரின் உட்புறப் பகுதி

அவனிடம், காவல்துறையினர் தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். கோட்டையில் நடைபெறும் அநாகரிகமான செயல்களைத் தடுத்து சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கக் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு