Published:Updated:

ஒருதலைக் காதல்... பழிவாங்க பெண்ணின் தங்கைக்குத் தாலி கட்டிய இளைஞன்! - அரக்கோணத்தில் அதிர்ச்சி

விக்னேஷ்
விக்னேஷ்

கொலை வழக்கில், இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இளைஞர் ஒருவர், திடீரென ஊர் திரும்பியபோது, காதலியின் தங்கைக்குத் தாலி கட்டிய புகாரில் சிக்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கீழ்க்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரோட்டா மணி என்கிற மணிகண்டன் 2019-ம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் வேலூர்பேட்டை அருந்ததிபாளையத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (22) என்ற இளைஞரை அரக்கோணம் நகர போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். தந்தை கோபி, தாய் சரளா ஆகியோருடன் விக்னேஷ் தலைமறைவாகிவிட்டார். பெங்களூரில் அவர்கள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கில் சிக்குவதற்கு முன்பு அருந்ததிபாளையத்திலுள்ள தனது உறவுக்காரப் பெண் ஒருவரை விக்னேஷ் காதலித்துவந்திருக்கிறார். அதுவும், ஒருதலைக் காதல். இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விக்னேஷின் குடும்பத்தார் சொந்த ஊரான அருந்ததிபாளையத்துக்குக் கடந்த வாரம் ரகசியமாக வந்திருக்கின்றனர். போலீஸாரிடம் சிக்காமலிருக்க வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார் விக்னேஷ்.

கொலை
கொலை

இந்தநிலையில், விக்னேஷ் காதலித்த இளம்பெண் வீட்டுக்குச் சென்ற அவரின் பெற்றோர், தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பெண் கேட்டுள்ளனர். ``கொலை வழக்கில் தேடப்படும் உங்க பையனுக்கு எங்க பொண்ணைத் தர மாட்டோம். உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா, இப்படியொரு பையனுக்குப் பொண்ணுத் தருவீங்களா?’’ என்று பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இது குறித்து, விக்னேஷிடம் அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தங்களை அசிங்கப்படுத்திவிட்டதாக நினைத்த மூன்று பேரும் இளம்பெண்ணின் குடும்பத்தினரைப் பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம்... வீட்டில் கன்னி பூஜை நடப்பதாகவும், அதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இளம்பெண் வீட்டுக்குச் சென்று குடும்பத்துடன் அழைத்திருக்கிறார் விக்னேஷின் தாயார் சரளா. உறவினர்தானே என்று அவர்களும் வருவதாகக் கூறியுள்ளனர். அந்தச் சமயம், வீதியில் விளையாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் தங்கையான 14 வயது சிறுமியை கையைப் பிடித்து தன்னுடனேயே வீட்டுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார் சரளா.

அந்தச் சிறுமி நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறார். வீட்டுக்குள் அழைத்துச் சென்றதும், மறைந்திருந்த விக்னேஷ் கையில் வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்ட முயன்றார். சுதாரித்துக்கொண்ட சிறுமி அங்கிருந்து தப்ப முயன்றபோது, விக்னேஷின் தந்தை ஓடிச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டியிருக்கிறார். விக்னேஷின் தாய், சிறுமியின் கையைப் பின்பக்கமாக மடக்கிப் பிடித்து மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து, விக்னேஷ் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டு, ``இனிமேல், நீதான் என் பொண்டாட்டி. நான்தான் உன் புருஷன். நானொரு கொலைகாரன்னு உன் அக்கா கட்டிக்க மாட்டேன்னு சொன்னாளாம். உன் அப்பாவும், அம்மாவும் ஓவரா பேசுனாங்களாம். இப்ப என்ன செய்ய முடியும்?’’ என்று மிரட்டியிருக்கிறார். சிறுமி கத்திக் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டு கதவைத் தட்டியிருக்கிறார்கள். எதையோ சாதித்துவிட்ட திமிருடன் விக்னேஷின் குடும்பத்தினர் கதவைத் திறந்து வெளியே வந்திருக்கிறார்கள். அங்கு ஓடி வந்த சிறுமியின் பெற்றோர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

சிறுமியும் தனது கழுத்திலிருந்த தாலிக் கயிற்றை கழற்றி வீதியில் தூக்கி வீசினார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்கள், ``உன்னதான் போலீஸ் தேடிக்கிட்டிக்கே? நீ எப்படி வீட்டுக்குள்ள இருக்கே?’’ என்று சத்தம்போட, திகைத்துப்போய் நின்றிருக்கிறார் விக்னேஷ். உடனடியாக, அரக்கோணம் நகர போலீஸாருக்குத் தகவல் சென்றது. அவர்கள் விரைந்து வந்து கொலை வழக்கில் விக்னேஷைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

கட்டாயத் தாலி கட்டியது தொடர்பாகவும் சிறுமியின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். `போக்சோ’ சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், கட்டாயத் தாலி கட்ட உடந்தையாக இருந்த விக்னேஷின் தாய், தந்தையைக் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர். கொலை தொடர்பாக நகர போலீஸார் விசாரணை நடத்திவரும் நிலையில், போக்சோ வழக்கு சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீஸாரும் விக்னேஷைக் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு