Published:Updated:

`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு!' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர்

பலியான ஏகேஷ் படத்துடன் பெற்றோர்
பலியான ஏகேஷ் படத்துடன் பெற்றோர்

ஆட்டோவில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர், இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமூகத்தில் அநீதி நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்.. ஆட்டோவில் இளம் பெண்ணைக் கடத்தியவர்களைத் துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர் இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று, மப்பேடு அருகே ஷேர் ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளர். இவர், நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென்று கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் இருந்த சக பயணிகள் இறங்கிக்கொள்ள, ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மட்டும் தனியாகப் பயணம் சய்துள்ளார்.

பலியான ஏகேஷ்
பலியான ஏகேஷ்
`அவரின் சுயரூபம் தெரிந்தபோதே விலகியிருக்க வேண்டும்!' -கற்பூர வியாபாரி கொலையில் கதறியழுத இளம்பெண்

இந்தநிலையில், திடீரென ஆட்டோ நரசிங்கபுரம் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். கொண்டஞ்சேரி வளைவில் சில இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அந்த இளம்பெண், தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக, இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆட்டோவைத் துரத்தியுள்ளனர்.

சாலையில், எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுக்க ஆட்டோவின் வேகத்தை டிரைவர் குறைத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த இளம்பெண் ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பிவிட்டார்.

பின்தொடர்ந்த, இளைஞர்களில் ஏகேஷ் என்பவர் மட்டும் ஆட்டோ டிரைவரைப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டிரைவர், ஆட்டோவைக் கொண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஏகேஷ், சாலையோரத்தில் சரிந்தார். பின்னர், அவருடைய நண்பர்கள், ஏகேஷை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

'உயிர் பிழைப்பது கடினம்' என்று டாக்டர்கள் கைவிட்டதால், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகேஷ் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தார். மகனின் இறப்பால் பெற்றோர் தியாகராஜன் - பத்மாவதி தம்பதி, மனமொடிந்துபோனார்கள். பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர் குறித்து மீடியாக்களில் செய்தி வெளியானதால், ஏராளமானோர் ஏகேஷ் வீட்டுக்குச்சென்று புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.

வாழவேண்டிய வயசுல என் மகனைப் பறிகொடுத்துவிட்டேன். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காம போலீஸார் பார்த்துக்கணும்.
ஏகேஷின் பெற்றோர்
`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..!' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்

ஏகேஷின் தாயார் பத்மாவதியிடம் பேசியபோது, ''என்னோட கடைசிப் புள்ள அவன். எல்லா மக்களுக்கும் அவனால முடிஞ்ச உதவியைச் செய்வான். என் மகனோட இந்தக் குணமே அவனுடைய உயிரைப் பறிக்கும்னு நினைக்கலையா. அவன் காப்பாத்தப் போன பொண்ணு யாருனே தெரியாது. ஆனா, அவனோட உயிர் போயிடுச்சு. பெத்த மனம் என்ன பாடுபடும்'' என்று கண்கலங்கினார். தியாகராஜன் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். ஏகேஷ்தான் கடைக்குட்டி. வயது 22 தான் ஆகிறது.

கொண்டஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏகேஷ் டெக்னிஷியனாகப் பணிபுரிந்துவந்துள்ளார். சொந்தக் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

ஏகேஷ் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி கூறுகையில், "வீட்டில் வசதியில்லாததால், பத்தாம் வகுப்பு வரைதான் ஏகேஷ் படித்துள்ளார்.

ஏகேஷுக்கு தமிழக அரசு விருது அளித்து கௌரவிக்க வேண்டும்
கொண்டஞ்சேரி கிராம மக்கள்

ஆனால், எனக்கு எந்த அளவுக்கு வேலை தெரியுமோ... அந்த அளவுக்கு அவருக்கும் தெரியும். என் மகனைவிட ஏகேஷுக்குதான் நான் அதிக தொழில் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்துள்ளேன். வருங்காலத்தில் சிறந்த தொழிலதிபராக வருவான் என்று கருதினேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இளம் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரைப்பலி கொடுத்த ஏகேஷுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென கொண்டஞ்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் கூறுகையில், ''கொண்டஞ்சேரி இளைஞர் ஏகேஷுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு