Election bannerElection banner
Published:Updated:

மதுரை: இளம்பெண் தற்கொலை... கல்விக்கடன் பெற்றுத்தருவதாக ஏமாற்றியதா மோசடிக் கும்பல்?

தாரணி
தாரணி

`கடன் தொகை தயாராகிவிட்டது, அதற்கான சேவை வரி ரூ. 26,604 செலுத்த வேண்டும். செலுத்திய 5 நிமிடத்தில் கடன் தொகை உங்கள் கணக்கில் வரவாகிவிடும்' என்று தெரிவித்துள்ளனர்.

``நீங்கள் கேட்ட கல்விக்கடன் ரூ. 6,65,100 தயாராகிவிட்டது. 5 நிமிடத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு முன் வங்கிப் பரிமாற்றத்துக்கான 4% சேவை வரி ரூ. 26, 604 எங்கள் வங்கிக் கணக்கில் உடனே செலுத்தவும்'' என்று தனியார் நிறுவனத்திடமிருந்து மெசேஜ் வரவும், கடைசியாக அந்தத் தொகையையும் செலுத்தியுள்ளார் தாரணி.

இந்த நிலையில்தான், தாரணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suicide Prevention (Representational Image)
Suicide Prevention (Representational Image)
Image by Daniel Reche from Pixabay

கல்விக் கடனுக்காகத் தனியார் ஏஜென்சி மூலம் விண்ணப்பித்து, கடனும் கிடைக்காமல், சொந்த பணத்தையும் இழந்த விரக்தியில் இந்த முடிவை தாரணி எடுத்துவிட்டார் என்று உறவினர்கள் கூறி வரும் நிலையில், தாரணியின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்று கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.

மதுரை, தெப்பக்குளம் அருகே தேவிநகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த காசிராஜன் - செல்வராணி தம்பதியின் மகள் தாரணி. தன் கணவர் காசிராஜன் மரணமடைந்த நிலையில் பெட்டிக்கடை வருமானத்தில் தாரணியைப் படிக்க வைத்தார் செல்வராணி. 2019-ல் தாரணி 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற நிலையில் கடந்த ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்கவில்லை. பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் விண்ணப்பித்துள்ளார்.

கல்விக் கட்டணம் ரூ. 2,00,000-க்கு மேல் வரும் என்று அந்தக் கல்வி நிறுவனம் கூறியதால், தன்னால் அவ்வளவு பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்த தாரணியை, கல்விக் கடனை தாங்களே ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி நிதி நிறுவனத்தின் தொடர்பு எண்ணைக் கல்வி நிறுவனத்தினர் மாணவியிடம் வழங்கியுள்ளார்கள்.

தாரணியிடம் ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட அந்த நிதி நிறுவனத்தினர், பல்வேறு கட்டணங்கள் எனக்கூறி அவ்வப்போது வங்கிக் கணக்கில் பணம் செலுத்த கூறியுள்ளார்கள். இதற்காகப் பலரிடமும் கடன் வாங்கியுள்ளனர். இந்நிலையில்தான் மூன்று நாள்களுக்கு முன், `கடன் தொகை தயாராகிவிட்டது, அதற்கான சேவை வரி ரூ. 26,604 செலுத்த வேண்டும், செலுத்திய 5 நிமிடத்தில் கடன் தொகை உங்கள் கணக்கில் வரவாகிவிடும்' என்று தெரிவித்துள்ளனர்.

தாரணி
தாரணி

ஏற்கெனவே ரூ. 1,00,000 வரை பல்வேறு காரணங்களைச் சொல்லி தாரணியை பணம் செலுத்த வைத்த நிலையில், கடைசி கட்டமாகத் தன் தாயைக் கட்டாயப்படுத்தி ரூ. 26,604 பெற்று அந்த நிதி நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியுள்ளார் தாரணி. ஆனால், அதன் பின்னும் கடன் தொகை இவர் வங்கிக்கணக்கில் வரவாகவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்து போனார்.

தாய் செல்வராணி வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டுக்குத் திரும்பிய செல்வராணி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதற, அருகில் வசிப்பவர்கள் வந்து பார்த்து காவல்துறைக்குத் தகவல் சொன்னார்கள். உடலை மீட்ட தெப்பக்குளம் காவல்துறையினர், தாரணியின் தாயாரிடம் விசாரணை நடத்திவிட்டு செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. மேலும், தாரணி யார் மூலம் கடனுக்கு முயன்றார், எந்த வங்கிக்கணக்கில் பணம் செலுத்தினார், கடைசியாக யாருடன் பேசியுள்ளார், அவருக்கு வந்த மெசேஜ்கள் குறித்து தகவல்தொழில்நுட்ப பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது சம்பந்தமாகத் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியனிடம் பேசினோம். ``தற்கொலை செய்துகொண்ட பெண் பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்திருக்கிறார். அவர் கல்லூரியில் சேர்ந்ததாகத் தெரியவில்லை. கடன் வாங்க தனியார் நிறுவனம் மூலம் முயன்றிருக்கிறார். அது கல்விக் கடனா, வேறு வகையான கடனா என்று தெரியவில்லை. இடைத்தரகர் யாரும் இவரிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்களா என்பதை விசாரித்து வருகிறோம். தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.

Suicide
Suicide
Representational Image (Pixabay)

தாரணியின் தற்கொலைக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், ``கடன் வாங்க நினைப்பவர்கள் நேரடியாக வங்கிகளை அணுகலாம். அதைவிடுத்து இடைத்தரர்களிடம் செல்லக் கூடாது. வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பிடுங்கும் மோசடி நிறுவனங்கள் இணையதளங்களில் பரவிக் கிடக்கின்றன. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்கிறார்கள் காவல்துறையினர்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு