Published:Updated:

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

மதன்
பிரீமியம் ஸ்டோரி
மதன்

ஆன்லைன் விளையாட்டுகளில், உயிர்களைக் காவு வாங்கிய பப்ஜி போன்ற ஆபத்தான கேம்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

ஆன்லைன் விளையாட்டுகளில், உயிர்களைக் காவு வாங்கிய பப்ஜி போன்ற ஆபத்தான கேம்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது

Published:Updated:
மதன்
பிரீமியம் ஸ்டோரி
மதன்
இணையம் என்பது ஒருபக்கம், புதிய அறிவுக் கதவுகளை எல்லோருக்குமாகத் திறந்துவிட்டிருக்கிறது. மற்றொரு பக்கம், சிலர் அதில் தங்கள் வக்கிர நடத்தைகள் மூலம் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து பணம் சம்பாதிப்பதோடு, குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான இரண்டாம் வகை நபர்தான் மதன். பிரபல யூடியூபரான இவன், தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக்கொண்டு, செய்யத் தகாத பல செயல்களையும் பேசக் கூடாத பேச்சுகளையும் பேசி, பல இளம்சிறார்கள் மனதில் விஷ விதைகளை விதைத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!
செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!
செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

பாலியல் சொற்களால் சிறுவர்களுக்கு மூளைச்சலவை

ஆன்லைன் விளையாட்டுகளில், உயிர்களைக் காவு வாங்கிய பப்ஜி போன்ற ஆபத்தான கேம்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதைச் சட்டவிரோதமாக வெவ்வேறு பெயர்களில் சிறுவர், சிறுமிகள் இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பப்ஜியைக் குழுவோடு சேர்ந்து விளையாடி, அதை லைவாக யூடியூபில் ஒளிபரப்பி, பணம் சம்பாதிக்கும் ஒரு யூடியூப் சேனலை மதன் எனும் நபர் நடத்திவருகிறான். அவனது சேனலுக்கு எட்டு லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். நண்பர்களுடன் மதன் பப்ஜி விளையாடும்போது, லைவாக அதைத் தன் சேனலில் ஒளிபரப்புவான். பத்தாயிரம் பேர் லைவாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அதில் விளையாடும் பெண்களை மிகவும் இழிவான, தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவான்; திட்டுவான். பொத்தாம் பொதுவாகப் பெண்களைக் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் கேட்க முடியாத பாலியல் சொற்களில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். பப்ஜியின் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸைக் கற்றுக்கொள்ளலாம் என்ற உந்துதலில் இதைப் பார்க்க இணைந்த மாணவர்களும், இவனது இந்த அருவருப்பான பாணியால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக ரசிக்கத் தொடங்கியதுதான் இதன் விபரீதம். பள்ளி வகுப்பு போர்டுகளில் ‘மதன் OP’ (Over Powered) என்று எழுதி செல்ஃபி எடுத்து அவனுக்கு மாணவர்கள் அனுப்ப, அதை அவனும் பெருமையாகத் தன் சமூக வலைதளங்களில் பகிர்வது வரை போயிருக்கிறது நிலைமை.

லைவாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே அவனது பேச்சுக்கு மயங்கி, சிலர் அவனுக்குப் பணம் அனுப்புகிறார்கள். அதற்கு வசதியாக ஸ்கிரீனில் அவனது ‘கூகுள் பே’ மற்றும் பே.டி.எம் எண்களை கொடுத்து வைத்திருக்கிறான். ‘சூப்பர் சாட்’ எனப்படும் முறையில் பணம் வந்ததும், அனுப்பியவர்களின் பெயரைச் சொல்வான் மதன். அவன் தங்கள் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே வீட்டுக்குத் தெரியாமல் பணம் அனுப்புகிறவர்கள் ஏராளம். லைவ் முடிந்ததும் அந்த வீடியோவையும் தன் சேனலில் பதிவேற்றம் செய்து, அதன் மூலமும் லட்சக்கணக்கில் சம்பாதித்துவருகிறான் மதன்.

மதன் ஆர்மிக்கு பயம்... குவியும் புகார்கள்!

அவனது தொடர் நடவடிக்கைகள், சமூகத்தில் பல சின்னஞ் சிறுவர்களையும் கெடுப்பதை கவனித்த தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஜெய்சன் சாமுவேல் என்பவர், அவனது ஆபாசப் பேச்சுகளையும், அதில் மயங்கி சிறுவர், சிறுமியர் தவறான பாதைக்குச் செல்வதையும் சமீபத்தில் ஆதாரங்களோடு சமூக வலைதளங்களில் பதிவுசெய்தார். இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லக் கோரிப் பலரும் அந்தப் பதிவுகளை ஜூனியர் விகடனுக்கும் மென்ஷன் செய்திருந்தார்கள். இதையடுத்து ஜெய்சன் சாமுவேலிடம் பேசினோம்.

‘‘27 வயதான மதனின் முழுப்பெயர் மதன்குமார் மாணிக்கம். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ளார். சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பேசிவரும் யூடியூபர் மதன், தன் தனிப்பட்ட தகவல்கள் வெளியில் தெரியாதவாறு செயல்பட்டுவருகிறார். யூடியூப் லைவிலேயே மாணவிகளிடம் ‘உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால், சந்தோஷமாக வைத்துக்கொள்கிறேன்’ என்றெல்லாம் பேசுவார். அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் சரளமாக அவர் வாயில் வந்துவிழும். 12 முதல் 20 வயது வரையுள்ள லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் அவரைத் தொடர்கின்றனர். அவரின் ஆபத்தான போக்கைக் கண்டிக்கும் சக யூடியூபர்களை முடக்கும் வண்ணம், `மதன் ஆர்மி’ என்ற பெயரில் பலரும் ‘ஸ்பாம்’ செய்வார்கள். இதனாலேயே பலரும் அவருக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தயங்குகிறார்கள். மதனின் இந்த விபரீத நடவடிக்கைகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்றுதான் நான் பொதுவில் அவரது அட்டூழியங்களை அம்பலப் படுத்தினேன். இதுவரை அவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி 159 பேர் புகாரளித்திருக்கிறார்கள். மதன் பிடிபட்டால், அவருக்குப் பின்னணியில் இருப்பவர்களின் விவரங்கள் தெரியவரும்’’ என்றார்.

மதன்மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவுக்குச் சென்றோம். உயரதிகாரி ஒருவரைச் சந்தித்தபோது, ‘‘அது தொடர்பாக நிறைய புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்பதால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவிலும் சிலர் புகாரளித்திருக்கிறார்கள். இது தவிர, ஒவ்வொரு மாவட்ட சைபர் பிரிவிலும் மதன்மீது புகார்கள் ஆன்லைன் மூலம் வந்துகொண்டிருக்கின்றன’’ என்றார் சுருக்கமாக.

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

ஆன்லைனில் வக்கிர விவாதங்கள்

காவல்துறையிலுள்ள சோர்ஸ் ஒருவரைச் சந்தித்துப் பேசியபோது, ஆன்லைனில் வந்திருந்த புகார் மனுக்களை நமக்குக் காண்பித்தார். தமிழகம் முழுவதுமிருந்து மதன்மீது பல புகார்கள் வந்திருந்தன. அது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவரும் தகவல்களையும் நம்மிடம் சொன்னவர், மதன் குறித்து இன்னொரு முக்கியத் தகவலையும் பகிர்ந்துகொண்டார். ‘‘செல்போன்களில் குழந்தைகள் விளையாடத்தானே செய்கிறார்கள் என்று சாதாரணமாகப் பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆனால், மதன் போன்றவர்கள் நடத்தும் யூடியூப் சேனல்களில் குழந்தைகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தகவல் உறுதியாகியிருக்கிறது. மதன் நடத்திய யூடியூப் சேனலில், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு வக்கிர விவாதங்கள் நடந்திருக்கின்றன.

சிறுவர், சிறுமிகளிடம் மதன் ஆபாசமாகப் பேசி அவர்களைக் கடுமையாக மூளைச்சலவைச் செய்திருக்கிறான். லைவில் பேசியதைவிட ஆபாசமாகத் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களின் மெசெஞ்சர்களில் பேசி வந்திருக்கிறான். அது தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்திருக்கிறோம். விரைவில் மதனிடம் விசாரணை நடத்தி, அவன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நன்கொடை என்ற பெயரில் பலரிடம் பணத்தையும் பறித்திருக்கிறான். தன்னுடைய சுயவிவரங்களைக் காட்டிக்கொள்ளாமல், தன்னால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண் ஒருவரின் வங்கிக் கணக்கின் மூலமாகவே சமூக வலைதளங்களில் மதன் செயல்பட்டுவந்திருக்கிறான். அவர் மூலம்தான் மதன் குறித்த விவரங்களைச் சேகரித்திருக்கிறோம்” என்றார்.

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!
செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

“எதுக்குடி வந்த?” - வாயைத் திறந்தாலே செக்ஸ் பேச்சு!

கடும் முயற்சிகளுக்குப் பிறகு, மதன்மீது புகாரளித்த சில மாணவிகளிடம் பேசினோம். ‘‘பப்ஜி கேம் தடைசெய்யப்பட்ட பிறகு, ‘ஃப்ரீ ஃபயர்’ என்ற பெயரில் அந்த விளையாட்டு வெளிவந்தது. அதைச் சட்டவிரோதமாகப் பலர் விளையாடிவருகிறார்கள். இந்த இரண்டு கேம்களையும் விளையாடும் பலருக்கும் மதன்தான் ஹீரோ. லைவில் ‘வாட்ஸ்அப் பேபி... கமான் பேபி...’ என்றெல்லாம் அவன் கொஞ்சும் குரலில் செக்ஸியாகப் பேசுவான். மதனின் இந்தப் பேச்சுகளால் பலர் கவர்ந்திழுக்கப்பட்டு அவரின் வலையில் வீழ்ந்துகிடக்கிறார்கள். மதனின் லைவ் நிகழ்ச்சியை மணிக்கணக்கில் ஏராளமானவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். லைவின்போது பணம் செலுத்துபவர்களின் பெயர்களைக் கூறி மதன் உற்சாகப்படுத்துவான். அவன் எங்கள் பெயரைக் கூறியதும் ஒருவிதமான புத்துணர்வு ஏற்படும். அடுத்தநாள் பள்ளியில் நாங்கள்தான் பேசுபொருளாக இருப்போம். அதற்காகவே பணத்தைச் செலுத்தி மதனின் குரலில் எங்கள் பெயர் சொல்ல ஆசைப்படுவோம். நான்கூட வீட்டுக்குத் தெரியாமல் பணத்தைச் செலுத்தியிருக்கிறேன். லைவிலேயே சில சிறுமிகளிடம் மதன் ஆபாசமாகப் பேசுவான். அதை ஆமோதிப்பவர்களிடம் ‘இந்த லைவ் முடிந்ததும் இன்ஸ்டாகிராமில் ஓப்பனா பேசுவோம் பேபி’ என மதன் தூண்டில் போடுவான். அவனின் தூண்டிலில் சிக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். சில பெண்கள் லைவிலேயே மதனைத் தட்டிக்கேட்டால், ‘அதான் 18 ப்ளஸ்னு போட்டிருக்குல்ல... எதுக்குடி வந்த?’ என்று சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவான். இந்த வலையில் வீழ்ந்தவர்கள் மீள்வது சிரமம். ஒரு அக்காதான், எங்கள் பெற்றோர் மூலமாக இது எவ்வளவு ஆபத்து என்று ஒரு வாரமாக எங்களுக்கு எடுத்துரைத்தார். பெற்றோர்களும் சம்மதிக்கவே, மதன்மீது புகாரளித்திருக்கிறோம்’’ என்றார்கள்.

சைபர் க்ரைம் பிரிவின் உயரதிகாரி ஒருவர் பேசும்போது, ‘‘அவனது ஆபாசப் பேச்சுகள் அடங்கிய வீடியோ தொகுப்பை, எங்களுக்கும் மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் அனுப்பிவருகிறார்கள்.ஆபாசம், கொலை மிரட்டல் என அவனது பேச்சைக் கேட்கக் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறது. மதன் விரைவில் கைதுசெய்யப்படுவான். அவனது சேனலை முடக்கவும் யூடியூப் நிறுவனத்துக்குப் பரிந்துரைத் திருக்கிறோம். அவனை ஆஜராகச் சொல்லி அறிவித்ததை அடுத்து அவன் தலைமறைவானதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் பிடிபடுவான்’’ என்றார்.

மதனோடு மட்டும் முடியாது இந்த விஷயம். சைபர் க்ரைம் போலீஸார் களமிறங்கி இதைப் போன்ற எல்லா சேனல்களுக்கும் பூட்டுப் போட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது!

*****

இது குறித்து உளவியலாளர் ஹேமமாலினி லக்‌ஷ்மி நரசிம்மனிடம் பேசினோம். ``மதனுடைய சேனலைத் தொடர்கிறவர்கள் பெரும்பாலும் இளம் பருவத்தினர். பருவ வயதிலிருப்பவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்கவும் கேட்கவும் ஆர்வம் அதிகமாக இருக்கும். பருவ வயதிலிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர், தினமும் தங்கள் குழந்தைகளோடு பேசி அவர்களின் ஆர்வம் எதிலிருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை தவறான பாதையில் செல்வதை அறிந்தால், நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களின் மொபைல்போன் வழியாக எப்போது வேண்டுமானாலும் ஒரு தவறான பாதை திறக்கலாம், எனவே கவனம்” என்றார்.

செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!

‘‘உள்நோக்கத்தோடு மதன் சொல்லியிருக்கிறார்!’’

மதனுடன் ஒரு வீடியோவில் லைவாகப் பேசும் நிர்மல்குமார் எனும் மாணவன், தனது தந்தை எம்.எல்.ஏ ஆகிவிட்டார் என்று சொல்லி, 10,000 ரூபாய் சூப்பர் சாட்டில் அனுப்பியுள்ளார். நிர்மல்குமார் குறித்து விசாரித்தபோது அவர் மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவனின் மகன் என்பது தெரிந்தது. கதிரவனிடம் கேட்டதற்கு, ‘‘ஆன்லைன் கேம் விளையாட்டில் யூடியூபர் மதன் கேட்டதால், அவன் நன்கொடையாகப் பணம் கொடுத்திருக்கிறான். அதை உள்நோக்கத்தோடு மதன் லைவ் வீடியோவில் சொல்லியிருக்கிறார். சட்டப்படி பார்த்தால் நான்தான் மதன்மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism