Published:Updated:

ஏன் இவ்வளவு அவசரம்? - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்...

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

ஏன் இவ்வளவு அவசரம்? - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம்...

கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

Published:Updated:
மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என, முதலில் அறிவித்தது பள்ளிக்கல்வித் துறை.

‘இப்போதைய சூழலில் தேர்வு நடத்துவது சரியான முடிவல்ல’ என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜூன் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். இப்போதும், ‘கொரோனா தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்வு அவசியமா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு , வீரபெருமாள், முருகையன் பக்கிரிசாமி, மார்ட்டின் கென்னடி
பிரின்ஸ் கஜேந்திரபாபு , வீரபெருமாள், முருகையன் பக்கிரிசாமி, மார்ட்டின் கென்னடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்துப் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, பள்ளிகள் திறப்பதற்கான சூழல் ஏற்பட்டவுடன் குறைந்தபட்சம் 15 நாள்கள் வகுப்புகளை நடத்திவிட்டு, அதன் பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாம். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள் உளவியல் சிக்கலில் இருப்பார்கள். அதிலிருந்து மீள்வதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, இப்போதைய பாடநூல் இந்த ஆண்டு மாற்றப்பட்ட புதிய பாடநூல். புதிய பாடத்திட்டத்தில் முதன்முறையாக தேர்வு எழுதுவதே மாணவர்களுக்கு ஒருவித பயத்தைக் கொடுக்கும். அதைப் போக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நேரமாக 15 நாள்கள் வகுப்புகளை வைத்து, பிறகு தேர்வு நடத்தலாம்’’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீரபெருமாள்,

‘‘ஒரே நாளில் நோய்த்தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் சூழலில், தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்?

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்த அனுப்ப முடியுமா? மாணவர்களுக்கு மனத்தெளிவு ஏற்படுத்தவும், வலிமையுடன் அவர்களை அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்தவும், கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற முனைவர் முருகையன் பக்கிரிசாமி, ‘‘ஒரு மாணவருக்குக்கூட நோய்த்தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதத்தை, தமிழக அரசால் தர முடியுமா? பல பள்ளிகள் பேரிடர் மையங்களாகப் செயல்பட்டுவருகின்றன. தமிழக அரசு அந்தப் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தி வைத்துள்ளதா? ‘ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு பள்ளிகள் திறந்து பத்து நாள்களுக்குப் பிறகுதான் தேர்வு வைக்கப்படும்’ என்று மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தை மேற்கோள்காட்டும் தமிழக அரசு, இந்த விஷயத்தில் முரண்பட்டிருப்பது ஏன்?’’ என்று கேள்விகளை எழுப்புகிறார்.

மாணவர்கள்
மாணவர்கள்

தேர்வு எழுதவுள்ள மாணவர் ஒருவரின் தந்தையான எம்.ஏ.என்.சலீமுதீன், ‘‘பேரிடர் காரணமாக பெரும்பாலானோருக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் படும் துயரங்களை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள், எவ்வாறு தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள்? மே 31-ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கினால்கூட, அடுத்த சில நாள்களுக்கு கூட்ட நெரிசல் இருக்கும். அந்த நெரிசலில் அவர்களை நோய்த்தொற்று ஏற்படாதவாறு எவ்வாறு அழைத்து வர முடியும்?’’ என்றார்.

இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் கென்னடியிடம் பேசினோம். ‘‘நான்காம்கட்ட ஊரடங்கில் இருக்கிறோம். அதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் சிறிது சிறிதாக தளர்வுகளைச் செய்துவருகின்றன. அந்த வகையில், வரும் ஜூன் மாத இறுதிக்குள் தேர்வுகள் மற்றும் கல்வித்துறை தொடர்பான பணிகளை முடித்துவிட்டு, ஜூலை மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் எனத் தெரிகிறது. அதன் அடிப்படையில், தற்போது தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்திருக்கலாம். தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். இதற்கிடையில் நோய்த்தொற்று தீவிரம் காரணமாக தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தேதி தள்ளிப்போனாலும் அதையும் எங்களுடைய அமைப்பு வரவேற்கும்’’ என்றார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் மனநிலையையும் குடும்பச் சூழ்நிலையையும் அரசு கவனத்தில்கொண்டு, தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும். கல்வி என்பது மாணவர்களுக்கு அவசியம்தான். அது அவர்களை அவஸ்தையில் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடாது!