Published:Updated:

“பிரதீபாவோட அப்பாவ கட்டிக்கிட்டு கதறி அழத்தான் முடியும்... வேறென்ன பண்ண..!?’’ அனிதாவின் அண்ணன்

“பிரதீபாவோட அப்பாவ கட்டிக்கிட்டு கதறி அழத்தான் முடியும்... வேறென்ன பண்ண..!?’’  அனிதாவின் அண்ணன்
“பிரதீபாவோட அப்பாவ கட்டிக்கிட்டு கதறி அழத்தான் முடியும்... வேறென்ன பண்ண..!?’’ அனிதாவின் அண்ணன்

``பிரதீபாவின் தற்கொலை செய்தி காதுல வந்து விழுந்ததும் துடிச்சுப்போயிட்டேன். அழக்கூட முடியலை. கையாலாகாத இந்த அரசாங்கத்தை எதிர்த்து எதுவுமே பண்ணமுடியாத கோழையா உட்காந்துருக்கோம்”

"அனிதா இப்பவும் எங்க வீடு முழுக்க நிறைஞ்சு இருக்கா. தினமும் காலையில் எழுந்ததும் அம்மா படத்தையும் அனிதா படத்தையும் பார்த்துட்டுத்தான் பேப்பர் படிக்கிறது, டி.வி நியூஸ் பார்க்கிறதுனு வேற எதையும் செய்வேன். ஆனால், திங்கள்கிழமை நீட் ரிசல்ட் என்கிற பதைபதைப்பு மனசு முழுக்க இருந்துச்சு. அனிதாவின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கண் முன்னாடி வந்து அலைமோதிச்சு. சாப்பிட முடியலை, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியலை. அனிதா மாதிரி வேறு எந்தத் தங்கையும் தம்பியும் முடிவெடுத்துடக் கூடாதேன்னு நியூஸ் பக்கமே போகாமல் ஓடி ஒளிஞ்சேன். ஆனாலும், தங்கை பிரதீபாவின் தற்கொலை செய்தி காதுல வந்து விழுந்ததும் துடிச்சுப்போயிட்டேன். அழக்கூட முடியலை. கையாலாகாத இந்த அரசாங்கத்தை எதிர்த்து எதுவுமே பண்ணமுடியாத கோழையா உட்காந்துருக்கோம்” எனக் கண்ணீரும் ஆதங்கமுமாகப் பேசுகிறார் மணிரத்தினம். கடந்த ஆண்டு நீட் தேர்வை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த, அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன்.

"அம்மா இல்லாத எங்களுக்கு அனிதா எல்லாமுமா இருந்தா. நாங்க அண்ணன் தம்பிங்க நாலு பேரு. அம்மாவும் அப்பாவும் பொம்பளைப் பிள்ளை வேணும்னு தவம் இருந்து கிடைச்சவள்தான் அனிதா. அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவங்களுக்குச் செய்ய ஆசைப்பட்டதையெல்லாம் அனிதாவுக்குச் செஞ்சு அழகு பார்ப்போம். எங்க ஒவ்வொரு நிமிஷத்தையும் அனிதாவுக்காகவே செலவு பண்ணினோம். 'டாக்டருக்குத்தான் படிப்பேன் அண்ணா'னு அவள் ஆசையா சொன்னதும், நிலத்தை அடமானம் வெச்சோம். 'எப்படியும் நீட் எக்ஸாம்ல ஜெயிச்சிடுவா. செலவுக்குப் பணம் தேவைப்படும்னுதான் அடமானம் வெச்சோம். அப்போ வெச்ச நிலத்தைப் போன மாசம்தான் மீட்டோம். எப்படியோ கஷ்டப்பட்டு நிலத்தை மீட்டாச்சு. ஆனா, தூக்கி வளர்த்த தங்கத்தைப் பறிகொடுத்துட்டோமே. இப்பவும் எந்த இடத்துல அவளைப் பறிகொடுத்தோம்னு உணரவே முடியலை. அதுக்குள்ளே அடுத்த நீட் வந்து ரிசல்ட்டும் வெளியாகிடுச்சு. கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே ரெண்டு உயிரை இழந்தாச்சு.

நாம அனிதாவுக்காகவோ, பிரதீபாவுக்காகவோ போராடறோம்னு நினைக்கிறோம். ஆனால், அவங்க ரெண்டு பேரும் நம் ஒட்டுமொத்த மக்களுக்குமான கல்வி உரிமை மறுக்கப்படுறதை வலியுறுத்தி இருக்காங்க. 'எனக்கு எல்லா தகுதியும் இருந்தும் கிடைக்கவேண்டியதை தர மறுக்கிறியே'னு அதிகாரத் திமிர் பிடிச்ச ஆட்சியாளர்களைப் பார்த்துக் குமுறி, தங்கள் உயிரையே ஆயுதமாக்கி இருக்காங்க. அனிதாவுக்காகவும் பிரதீபாவுக்காகவும் இந்த அரசை எதிர்த்துப் போராட முடியாமல் நானும் தவிக்கிறேன். ஏற்கெனவே தங்கச்சியைக் கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் போய் நியாயம் கேட்டேன். தனி மனுஷனா போராடின எனக்கு அங்கே எந்த நியாயமும் கிடைக்காமல் நீதிமன்றத்துக்குப் போனோம். அங்கேயும் கழுத்தறுக்கப்பட்டு நின்னதால் நம்பிக்கையும் போயிருச்சு. பிரதீபா குடும்பத்தைப் போய் பார்க்கணும். அவங்க அப்பாவைக் கட்டிப் புடிச்சு அழணும். அனிதாவுக்காக ஒட்டுமொத்தத் தமிழகமும் குரல் கொடுத்துச்சு. பிரதீபாவுக்காக நான் குரல் கொடுக்க முடியாட்டாலும் ஆறுதலாவது சொல்லிட்டு வரணும்” - இந்த அரசின் மீதிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கிறார் மணிரத்தினம்.

"அனிதாவின் மரணத்துக்கு அரசு தருவதாகச் சொன்ன இழப்பீட்டுத் தொகை கிடைத்துவிட்டதா? அனிதாவுக்காக நீங்கள் கட்டும் நினைவு நூலகம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது'' என்று கேட்டோம். 

"தங்கள் மேல் இருக்கும் குற்றச்சாட்டையும் இயலாமையும் மறைக்கிறதுக்காக இந்த அரசு கொடுத்த 7 லட்சத்தை ஆரம்பத்தில் வாங்கவே மறுத்தேன். ஆனாலும், அது மக்கள் பணம். அதை மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நூலகம் கட்டலாமேன்னு முடிவுப் பண்ணி வாங்கிக்கிட்டோம். 'அனிதா நினைவு நூலகம்' முக்கால்வாசி முடிஞ்சாச்சு. சீக்கிரமே அது கம்பீரமா எழுந்து நிற்கும். அந்த நூலகத்தின் மூலமா பல ஏழை மாணவர்கள் படித்துப் பயன்பெறணும். தம்பிக்கு அரும்பாக்கத்தில் உள்ள சித்தா மருத்துவமனையில் அரசு வேலை கொடுத்திருக்காங்க. மற்ற ரெண்டு தம்பிகளில் ஒருத்தன், இன்ஜினீயரிங் முடிச்சுட்டான். இன்னொருவன் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் போயிருக்கான். நான் இப்போ யூ.பி.எஸ். சி தேர்வுக்குத் தயாராகறேன். எனக்கான வெற்றி இனி வரக்கூடிய ஏழைப் பிள்ளைகளின் கல்விக்குக் கிடைக்கும் வெற்றியாக மாறும்னு நம்பிக்கை இருக்கு. யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராவதால்தான் பிரதீபாவின் இறுதிச் சடங்கிலும் கலந்துக்க முடியலை. சீக்கிரமே அவங்க குடும்பத்தைச் சந்திப்பேன். என்னால் இந்த அரசைத்தான் எதிர்த்து நிற்க முடியாதே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக இருக்க முடியும். அதை யாராலும் தடுக்க முடியாது” 

மணிரத்தினத்தின் வார்த்தைகளில் வேதனையை மிஞ்சி நிற்கிறது அதிகாரத்துக்கு எதிரான எழுச்சி.

அடுத்த கட்டுரைக்கு