Published:Updated:

நினைவு நூலகம், சிலை... 'நீட்' அனிதா வீட்டில் என்ன நடக்கிறது?

"நான் இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்டவன். அனிதாவையும் பலர் அப்படியே நினைக்கிறார்கள். ஆனால், அவளுடைய போராட்டம் அனைத்துத் தரப்பினருக்குமானது. அது சித்தாந்தங்களைக் கடந்தது. அவளைப்போலவே இந்த நூலகமும் சித்தாந்தங்களைக் கடந்ததாக இருக்கணும்"

நினைவு நூலகம், சிலை... 'நீட்' அனிதா வீட்டில் என்ன நடக்கிறது?
நினைவு நூலகம், சிலை... 'நீட்' அனிதா வீட்டில் என்ன நடக்கிறது?

``தோழர், அனிதா நினைவு நூலகத்தைப் பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு கட்டி முடிச்சுட்டோம். செப்டம்பர் முதல் தேதி குழுமூரில் நூலகத்தின் திறப்பு விழா. நீங்க கண்டிப்பா வரணும்” என்ற தகவலுடன் அழைப்பிதழை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார் மணிரத்தினம்.

அந்த அழைப்பிதழைப் பார்த்ததும், அனிதாவின் நினைவுகள் மனதில் எழுந்தன. எத்தனை போராட்டம், எப்படிப்பட்ட அலைக்கழிப்புகள்... அனைத்துக்கும் சளைக்காமல் ஆளும் அரசை எதிர்த்துப் போராடியவர், மாணவி அனிதா. ஆனால், அதிகாரம் பொருந்திய அரசுக்கு முன்னால், ஏழை பெண் என்ன செய்துவிட முடியும். தான் விரும்பிய டாக்டர் படிப்பு கனவாகக் கரைந்ததில் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார். அன்று மண்ணில் விழுந்தது அனிதாவின் உடல் மட்டுமே. அவரின் கனவுகள் இப்போது மெள்ளத் துளிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறது.

``அனிதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். அதிகாரம்கொண்ட இந்த அரசுக்கு முன்னால் போராட முடியாத இனம் அது. அதுதான் அவளின் துரதிர்ஷ்டம். ஆனால், மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட்டா. அந்தத் தாக்கம் எல்லாத் தரப்புக்கும் சொந்தமானது. அனிதா எல்லோருக்குமானவளா இருக்கணும்னு முடிவுபண்ணி ஒரு நூலகத்தைக் கட்ட ஏற்பாடு செஞ்சோம். புத்தகம்தான் இந்தச் சமூகத்துக்குப் பயனுள்ளதா இருக்கும். அடித்தட்டு மக்களை உசுப்பி மேல்நோக்கி முன்னேறவைக்கும். நூலகம்தான் காலா காலத்துக்கும் அனிதாவின் பெயரைச் சொல்லிட்டிருக்கும். அனிதாவின் இறப்புக்குப் பிறகு அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையை வேற எதுக்கும் பயன்படுத்திடக் கூடாது என இருந்தேன். அப்பாவிடமும் தம்பிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுக்கு வந்தேன். ஏற்கெனவே அம்மாவுக்குச் சொந்தமான நிலம் இருந்துச்சு. அதிலேயே தங்கையின் நினைவு நூலகத்தை எழுப்ப முடிவுசெஞ்சோம்'' என நெகிழ்வுடன் தொடர்கிறார் மணிரத்தினம்.

``மொத்தம் 1600 சதுர அடி கட்டடம். அதில், 900 சதுர அடியில் வாசிக்கும் அறை, நிர்வாக அறை. அதுபோக, சிலம்பப் பயிற்சிக்காகவும் கொஞ்சம் இடம் ஒதுக்கியிருக்கோம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள் அனைத்துக்கும் முதல் மாடியில் ஏற்பாடு செய்திருக்கோம். பா.இரஞ்சித் அண்ணா அனிதாவின் உருவச்சிலையைச் செய்துகொடுக்கிறதா சொல்லியிருக்கார். அந்தச் சிலையை நூலகத்தின் மத்தியில் நிறுவ முடிவுபண்ணியிருக்கோம். அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ், கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களை உள்ளே வைக்கப்போறோம். நான் இடதுசாரி சித்தாந்தம் கொண்டவன். அனிதாவையும் பலர் அப்படியே நினைக்கிறாங்க. ஆனால், அவளுடைய போராட்டம் அனைத்துத் தரப்பினருக்குமானது. அது சித்தாந்தங்களைக் கடந்தது. அவளைப் போலவே இந்த நூலகமும் சித்தாந்தங்களைக் கடந்ததாக இருக்கும். இங்கே பகவத்கீதை, குரான், பைபிள் போன்ற நூல்களும் இடம்பெறும்” என்கிறார்.

சமீபத்தில், குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

``அது குழந்தைகளுக்கான கல்வி விழிப்புஉணர்வு நிகழ்ச்சி. இனியன் ராமமூர்த்தி அண்ணா, என்னோடு ஒரு மாதம் தங்கியிருந்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நாடகங்கள் நடத்தினோம். புத்தகங்கள் குறித்த ஈடுபாட்டை கதைகள், பாடல்கள் மூலமாக அவர்களிடம் விதைத்தோம். அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ரொம்பவே உற்சாகமாகிட்டாங்க. `அண்ணா, நான் ஒரு கதை எழுதியிருக்கேன். அதை நீங்க கட்டும் நூலகத்துல வைப்பீங்களா?' என்று ஆர்வமாகக் கேட்டாங்க. `அடுத்து எப்போ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துவீங்க?' எனப் பெற்றொர்கள் கேட்டுட்டே இருக்காங்க. இதுதான் எங்களுக்கு வேணும். இந்த மாற்றம், அனிதா மூலம் நடப்பது பெரிய விஷயம். ஒரு அண்ணனா அவளுக்குச் செய்யும் சமர்ப்பணம் இதுதான் என நினைக்கிறேன். 

சமூக நீதிக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் கி.வீரமணி ஐயா தலைமை தாங்க, ஆ.ராசா முன்னிலை வகிக்க, தலைவர் தொல்.திருமாவளவன் நூலகத்தைத் திறந்து வைக்கப்போறார்'' என்கிற மணிரத்தினம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். 

``நூலகத்தின் திறப்பு விழாவுக்கு வர்றவங்க தங்களால் முடிஞ்ச புத்தகத்தைக் கொண்டுவந்தா சிறப்பா இருக்கும். அது எல்லோருக்கும் பயனுள்ளதாவும் இருக்கும் தோழர்” என்கிறார். 

இனி, ஒவ்வொரு புத்தகங்கள் வாயிலாக அனிதா உயிர்த்தெழுவாள்.