Published:Updated:

`முதல் முயற்சியிலேயே சோர்ந்துவிடாதீர்கள்!’ - ஆறாவது முயற்சியில் வென்ற பாலசந்தர் IAS

`முதல் முயற்சியிலேயே சோர்ந்துவிடாதீர்கள்!’ - ஆறாவது முயற்சியில் வென்ற பாலசந்தர் IAS
`முதல் முயற்சியிலேயே சோர்ந்துவிடாதீர்கள்!’ - ஆறாவது முயற்சியில் வென்ற பாலசந்தர் IAS

ஒவ்வோர் ஆண்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விண்ணப்பிக்கின்றனர். இதில் முதல் முயற்சியிலேயே வெற்றி வாகை சூடுபவர்களும் உண்டு; ஐந்து, ஆறு முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அரியணை ஏறுபவர்களும் உண்டு. ``முதல் தடவை வெற்றி கிடைக்கவில்லை என்றால் சோர்ந்துவிடாதீர்கள். தொடர் முயற்சியால் நிச்சயம் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியும்" என்கிறார் சிவில் சர்வீஸ் தேர்வில் ஆறாவது முயற்சியில் வெற்றியை எட்டிப்பிடித்த பாலசந்தர் IAS.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான ஓராண்டு பயிற்சி, 27.08.2018 அன்று தொடங்கியது. அதில் பங்கேற்கத் தயாராகிக்கொண்டிருந்தவர்களிடம் பேசினோம்... 

அகில இந்திய அளவில் 129-வது ரேங்க் பெற்றிருக்கும் பாலசந்தர், ``சொந்த ஊர் தூத்துக்குடி. வேலை தேடி திருப்பூருக்கு அப்பா இடம்பெயர்ந்து 25 வருஷம் ஆகுது. குடிசைத்தொழில் அளவுக்கு பிரின்ட்டிங் கடை வெச்சிருக்கோம். காவல்துறை வேலையில சேரணும்னு அப்பா எவ்வளவோ முயன்றார். ஆனா, அவருக்கு வாய்ப்பு கிடைக்கலை. எனக்கும் அதே நிலைமைதான். `நீ ஏன் முயற்சி பண்ணக் கூடாது'னு அடிக்கடி கேட்பார். அது அப்படியே மனசுல நின்னுருச்சு. அரசுப் பள்ளியில 12-ம் வகுப்பு வரைக்கும் தமிழ்லதான் படிச்சேன். 

மாவட்ட அளவுல அதிக மதிப்பெண் பெறவே, அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, கடன் வாங்கித்தான் கல்லூரியில சேர்ந்தேன். படிச்சு முடிச்சதும் தகவல் தொழில்நுட்பத் துறையில நல்ல வேலைவாய்ப்பு கிடைச்சாலும் `வேண்டாம்'னு சொல்லிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். வெற்றி கிடைக்கலை. 

வங்கித்தேர்வு எழுதி வெற்றிபெற்றேன். கடந்த அஞ்சு வருஷமா வங்கி உதவி மேலாளரா வேலை செஞ்சுக்கிட்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஒவ்வொருமுறையும் நேர்முகத்தேர்வு வரைக்கும் போவேன். ஆனா, வெற்றி கிடைக்காது. ஆறாவது தடவையா வெற்றி கிடைச்சிருக்கு. தொடர் முயற்சியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்கிறதுக்கு நானே உதாரணம்" என்றார். 

மிகப்பெரிய துக்கத்துக்கிடையே முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன். ப்ளஸ் டூ தேர்வில் வேலூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற சந்தோஷமான நாளில், தந்தை விபத்தில் இறக்க, என்ன செய்வது எனத் தடுமாறினார் கலைவாணன். இவர், தந்தை மரணமடைந்த சோகத்தைச் சுமந்தாலும், நிச்சயம் ஒருநாள் அதிகாரியாக மாறுவேன் என்று படித்து, தேசிய அளவில் 277-வது  இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர், ``பத்தாம் வகுப்பு படிக்கும்போது, காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு எழுதிய `நீங்களும் ஐ.பி.எஸ் ஆபீஸர் ஆகலாம்' என்ற புத்தகத்தைப் படித்ததன் தாக்கம், மனதில் இருந்துகொண்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெட்ரானிக்ஸ் பாடப் பிரிவில் படிக்க இடம் கிடைத்தது. 2016-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், ஒரு வருடப் பயிற்சியால் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்திருக்கிறது. இனி, காவல் துறையின் மிடுக்கான அதிகாரியாகக் களம் இறங்கக் காத்திருக்கிறேன்" என்றார். 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவகிருஷ்ணமூர்த்தி, 207-வது ரேங்க் பெற்றிருக்கிறார். இவர், ``அப்பா, சென்னைத் துறைமுகக் கழகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றுகிறார். நான்கு சகோதரிகள். மூத்த சகோதரிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் வேலை கிடைத்தது. இதுவே நானும் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால், அரசு வேலை கிடைக்குமா... கிடைக்காதா என யோசித்து, ப்ளஸ் டூ முடித்தவுடன் இன்ஜினீயரிங்கில் தகவல் தொழில்நுட்பப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், நான்காவது வருடத்தில் எனக்கு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள ஆர்வம் இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானேன். முதல் முறை வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இரண்டாவது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன்" என்றார். 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த லட்சுமணப்பெருமாள், தமிழ் மொழியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி 238-வது ரேங்க் பெற்றிருக்கிறார். ``அப்பா மில் தொழிலாளியாக இருந்தவர். போதுமான வருமானம் இல்லாததால், பத்திரம் எழுதும் தொழிலைச் செய்துவருகிறார். அம்மா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். 

பொறியியல் பட்டம் பெற்று டி.சி.எஸ் நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலைபார்த்தேன். அம்மா அவ்வப்போது, `நான் இளநிலை உதவியாளராக இருந்துகொண்டே நிறைய சேவை செய்ய முடிகிறது. நீயும் அரசு அதிகாரியானால் மக்களுக்கு நிறைய சேவை செய்யலாம்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். 2015-ம் ஆண்டில் ஐ.டி வேலையிலிருந்து விலகி, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். மூன்றாவது முயற்சியில் வெற்றி கிடைத்திருக்கிறது.

மற்ற மொழியில் தேர்வு எழுதுவதைவிட, தாய்மொழியில் எழுதும்போதுதான் நம்முடைய எண்ணங்களை எளிதில் பிரதிபலிக்க முடியும் என்பதால், தமிழ்மொழியில் தேர்வு எழுதினேன். தமிழ்மொழியில் தேர்வு எழுதிய எனக்கு நிறைய மதிப்பெண்ணுடன் வெற்றியும் கிடைத்திருப்பது, தமிழ்மொழிக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்" என்றார். 

பயிற்சி முடித்து, மக்களுக்குச் சிறந்த அரசு சேவையாற்ற வாழ்த்துகள்!