Published:Updated:

``இவர்களிடம் இத்தனை `இல்லை' மட்டுமே இருக்கிறது!" #RememberingAnitha

பால் விற்றுக்கொண்டு, கீரை விற்றுக்கொண்டு, கறிக்கடைகளில் வேலை பார்த்துக்கொண்டு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் குழந்தைகளையும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு ஆசிரியரிடம் சிறப்புப் பயிற்சி பெற்று mock test எழுதித் தயாராகும் குழந்தையையும் எப்படி ஒரே தராசில் ஒப்பிட முடியும்? 

``இவர்களிடம் இத்தனை `இல்லை' மட்டுமே இருக்கிறது!" #RememberingAnitha
``இவர்களிடம் இத்தனை `இல்லை' மட்டுமே இருக்கிறது!" #RememberingAnitha

``நம்ம பாப்பாவும் இங்கதான் படிக்கிறாங்களா?” 

``ஆமா மா.” 

``நல்லா படிக்கவைங்க. அதுவும் பொம்பளைப் பிள்ளைகளுக்குப் படிப்பு ரொம்ப முக்கியம்”

``எல்லாம் சரிதான்மா. அதுக்குப் பள்ளிக்கூடம் வேணுமில்ல?” 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தபோது ஓர் அம்மா என்னிடம் கூறிய வார்த்தைகள் இவை. அந்த அம்மா சொன்ன, `பள்ளிக்கூடம் வேணுமில்ல?' என்ற வார்த்தை ஏதோ செய்தது எனுக்குள். பதில் பேசமுடியாமல் நான் அமைதியாக மட்டுமே நின்றுகொண்டிருந்தேன். மேல்நிலைப் பள்ளிக்கு அந்த ஊர் மாணவர்கள் 15 கிலோமீட்டர் செல்ல வேண்டும். இதில், அந்தத் தூரம் பிரச்னை இல்லை. அந்த 15 கிலோமீட்டர் தூரத்தையும் அவர்கள் பேருந்து இல்லாமல் கடக்க வேண்டும் என்பதுதான் பிரச்னை. இதுபோல எக்கச்சக்க பிரச்னைகள் அந்த மாணவர்களைச் சூழ்ந்திருந்தன.

அப்போதுதான், வசதியான ஓரிடத்தில் இருந்துகொண்டு, மற்றவர்களின் இடத்தைப் பற்றியும், பின்னணியைப் பற்றியும் புரிந்துகொள்ளாமல் பேசுவது, விமர்சிப்பது எவ்வளவு பெரிய உணர்ச்சியற்ற செயல் என்று உணர முடிந்தது. சரியாக ஓராண்டுக்கு முன்னால் அனிதா மரணமடைந்தபோது எழுந்த சில எதிர்வினைகளை நினைத்துப் பார்த்துக்கொண்டேன். 

``என்னதான் இருந்தாலும் அந்தப் பொண்ணு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது”

``இன்னொரு முறை அந்தப் பொண்ணு எழுதி இருக்கலாம்”

``ஸ்டேட் போர்டுல இவ்வளவு மதிப்பெண் எடுத்த பொண்ணால ஏன் நீட் தேர்வுல ஜெயிக்க முடியல?”

இதுமாதிரி பல விமர்சனங்கள் ஒலித்துக்கொண்டேதான் இருந்தன. தமிழகத்தின் எழுத்தறிவு சதவிகிதம் 80.09%. அனிதாவின் அரியலூர் மாவட்டத்தில் எழுத்தறிவு சதவிகிதம் 71.34%. அனிதா போன்றதொரு குழந்தை, அங்கிருந்து மருத்துவம் பயிலச் சென்றிருந்தால் அந்த ஊருக்கே அது எத்தனை பெரிய பாய்ச்சலாக இருந்திருக்கும். அவளைப் பின்தொடர்ந்து எத்தனை பெண்குழந்தைகள் நம்பிக்கையோடு படித்திருப்பார்கள். எத்தனை பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளைப் படிக்க வைத்திருப்பார்கள்!

உலகின் 19% குழந்தைகள் வாழும் இடம் இந்தியா. அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு நிறைந்த ஒரு கற்றல் சூழல், அவர்கள் அனைவரையும் சாதிரீதியாக, சமூக- பொருளாதார ரீதியாக, பாலின ரீதியாகச் சுரண்டாத ஒரு வகுப்பறை; மதிப்பெண்களாலும், தரவரிசைப் பட்டியலாலும் `கரும்புள்ளி செம்புள்ளி' குத்தாத பயிற்றுமுறை; `வேலைவாய்ப்புப் பண்டம் அல்ல கல்வி, அது சமூக மாற்றத்தின் கருவி' என்று அறம் உரைக்கும் பாடத்திட்டம்; சீருடையாலும், அடையாள அட்டைகளாலும் வேற்றுமை பாராட்டாத ஒரு சூழல்; இவை அனைத்தையும் ஒருசேர தங்கள் நாட்டின் குழந்தைகளுக்குத் தருவதைவிட ஆள்பவர்களுக்கு என்ன வேலை இருக்கப்போகிறது? 

`சுதந்திரமடைந்து 70 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்போது ஏன் இதை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாய்' என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு என்னுடைய பதில் இதுதான்: 

1960 ம் வருடத்துக்குள், 14 வயது நிறைவடையும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று அரசு தனக்கு இலக்கு நிர்ணயித்துக்கொண்டது. ஆனால், 60 வருடங்கள் ஆகியும் அந்த இலக்கு முழுமையாக நிறைவேறவில்லை என்பதுதான் இங்கு ஜீரணிக்க முடியாத உண்மை. தொடக்கக் கல்வி என்பதே இங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையில் கிடைக்கிறது. குளிரூட்டப்பட்ட வகுப்பறையில் `world class education’ கிடைக்கும் குழந்தைக்கும், ஓராசிரியர் பள்ளியில் படிக்கும் கிராமத்துக் குழந்தைக்கும் இங்கு ஆள்பவர்கள் ஒரேமாதிரியான பாதுகாப்பையும், வாய்ப்புகளையும் வழங்குகிறார்களா என்ன? 

பள்ளிக்கும், வீட்டுக்கும் இடையில் உள்ள தூரம், தங்கள் குழந்தையின் வீட்டுப்பாடத்துக்கு உதவும் வகையில் பெற்றோர்கள் படித்திருக்கிறார்களா, பள்ளியில் செலவிடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அந்தக் குழந்தைக்குப் படிப்பதற்கான சூழ்நிலையும், நேரமும் இருக்கிறதா. முக்கியமாக, விளிம்புநிலைச் சமூகங்களிலிருந்து வரும் குழந்தைகளால் பொதுப்படையான ஒரு கல்விமுறையிலும், பள்ளிச் சூழலிலும், புறக்கணிப்புகளை எதிர்கொள்ளாமல், தனித்துவிடப்படாமல் ஒன்றமுடிகிறதா. தொடக்கக்கல்வி குறித்தான இந்தக் கேள்விகளுக்கே நம்மால் இன்னும் முழுமையான, உண்மையான விடைகளைக் கொடுக்க முடியவில்லை. 

இதைத் தாண்டி நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளியிலும் இடைநிற்றல் போன்ற சவால்கள் உண்டு. குழந்தைத் தொழிலாளர்களாகவோ, அல்லது சிறுவயதிலேயே திருமணம் போன்ற சூழல்களுக்குத் தள்ளப்படும் நிலை இன்றுகூட இருந்துகொண்டுதானே இருக்கிறது? 

1960 - 61 போன்ற காலகட்டத்தில், 11-14 வயது உடைய மாணவர்களிடையே இடைநிற்றல் என்பது 78.3% ஆக இருந்தது. 2004-05 ம் ஆண்டில் அதன் அளவு 50.84% ஆகக் குறைந்தது. (காண்க : 2007 ம் ஆண்டு இந்திய அரசால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு). கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இங்கு அனைவருக்கும் கல்வி என்பது பரவலாகக் கொண்டுவரப்படுகிறது. எத்தனையோ நல்ல திட்டங்களாலும், ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எவ்வளவோ குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகள் இந்தப் பள்ளிச் சூழலுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு முழுமையான வாய்ப்பினை வழங்குவதற்கு முன்பே ஏன் இவ்வளவு அரசியல் இங்கு நடக்க வேண்டும்? 

எத்தனை நுழைவுத் தேர்வு மையங்கள் இந்த அரசியலால் பலனடைந்து வருகிறார்கள் தெரியுமா. சி.பி.எஸ்.இ யோ, மாநிலப் பாடத்திட்டமோ, எதில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் இந்த நுழைவுத்தேர்வுக் கூடங்களுக்காகச் சில லட்சங்கள் செலவழித்துவிட்டுதானே தேர்வு எழுதுகிறார்கள்? 

நிறைய நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்குப் பதிலாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு மட்டும் எழுதினால் போதும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வும் இன்று சரியாக நடக்கிறதா. 49 கேள்விகள் சரியாக மொழியாக்கம் செய்யப்படவில்லை. கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவை எல்லாம் கூட இருக்கட்டும். தனியார் வசம் இருக்கும் மருத்துவ இடங்கள், யாரிடம் லட்சங்கள் புரள்கிறதோ அவர்களுக்குத்தானே போய் சேருகின்றன. `26,000 க்கும் மேற்பட்ட அந்தத் தனியார் இடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம்தான் செலுத்த வேண்டும்' என்று சொன்னால் ஒப்புக்கொள்ளுமா நம் கல்வி நிறுவனங்கள். `கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்வது கட்டாயம் அல்ல' என்று சொல்லும் நிலை இனிவரும் காலங்களில் வரலாம். லட்சங்களில் செலவு செய்து படித்து, அதைப்போலவே லட்சங்களில் மருத்துவச் செலவும் செய்வது ஏழைக் குடும்பத்துக்கு மட்டும் அல்ல, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துக்குக் கூட சாத்தியப் படாத ஒன்றாகத்தானே இருக்கும். 

ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பு, அவர்கள் கற்கும் கல்வி மட்டுமே. தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளியைப் போல எல்லா இடத்திலும் அனிதாக்கள், பிரதீபாக்கள் இருக்கிறார்கள். சாதி, பொருளாதாரம், பாலினம், இடை நிற்றல், தனித்துவிடப்படுதல், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமை என்று அனைத்தையும் கடந்து அவர்கள் ஏதேனும் சாதிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஆதாரமாக இருப்பது அவர்களின் கல்வி மட்டும்தான். பால் விற்றுக்கொண்டு, கீரை விற்றுக்கொண்டு, கறிக்கடைகளில் வேலை பார்த்துக்கொண்டு பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் குழந்தைகளையும், ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு ஆசிரியரிடம் சிறப்புப் பயிற்சி பெற்று mock test எழுதித் தயாராகும் குழந்தையையும் எப்படி ஒரே தராசில் ஒப்பிட முடியும்? 

மேலே கூறிய எத்தனையோ தடைகளைத்தான் அனிதாவும் கடக்க முயன்றிருப்பாள். அனிதா போன்ற எத்தனையோ குழந்தைகளுக்கு வாய்ப்புகளும், சம உரிமையும் இன்றும் எட்டாக் கனியாகத்தான் உள்ளன. இங்கு நுழைவுத் தேர்வு என்பது தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்ற நோக்கத்துடன் செயல்பட்டாலும், அதற்குப் பின்னால் இருக்கும் வணிகத்தையும், சுரண்டலையும் கண்டு நாம் மௌனமாக நிற்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.  

``உன் மாதிரி எத்தனை ஆயிஷாக்களை நாங்கள் இழந்திருப்போம். நீ இறந்துபோனாய். வயசுக்கு வந்த நாளோடு பள்ளிக்கூடம் விட்டு ஓடியவர்கள், எங்கேயோ ஒரு ஊரில் யாரோ ஒருவனுக்குத் துவைத்து, சமைத்து, பிள்ளை பெற்று போடுபவர்கள், ஆணின் பாலியல் பசிக்காகத் தன்னை விற்பவர்கள், முப்பது ரூபாய் சம்பளத்துக்காக, வீடு பெருக்கி, சாணி மெழுகுபவர்கள், வயல்கூலிகள், கட்டடங்களுக்குக் கல்லுடைக்கும் பெண்கள் – அவர்களில் எத்தனை ஆயிஷாக்கள் உள்ளனரோ. தன் விஞ்ஞானக் கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விடும் அந்த நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்தப் புத்தகத்தைக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன்” ஆயிஷா நூலின் இறுதியில் பேராசிரியர் நடராசன் அவர்கள் இவ்வாறு முடித்திருப்பார். 

ஆயிஷாவையும், அனிதாவையும் ஏதோ ஒரு புள்ளியில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. சமூகக் கட்டமைப்புகளிலிருந்து வெளியேறி தனக்கென்று ஓர் அடையாளம் சூடி வாழக் கல்வி எவ்வளவு இன்றியமையாததாகிறது. எழுத்தறிவு சதவிகிதம் குறைவாகக் கொண்ட ஒரு மாவட்டத்திலிருந்து வந்து, நம்பிக்கையுடன் போராடிப் படித்து, முதல் தலைமுறை மாணவியான அனிதா பெற்ற மதிப்பெண் 1176. ஆனால் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற அவளால் இயலவில்லை. 

நீட் நுழைவுத் தேர்வுக்கு அனிதாவை பலி கொடுத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், `அனிதா, நீ இருந்திருக்கலாம்' என்பதை மட்டும் மறுபடி மறுபடி சொல்லத் தோன்றுகிறது.