Published:Updated:

"அவள் கொண்டது பேராசையா?" மண்டல்.. மெரிட்.. அனிதா!

"அவள் கொண்டது பேராசையா?" மண்டல்.. மெரிட்.. அனிதா!
"அவள் கொண்டது பேராசையா?" மண்டல்.. மெரிட்.. அனிதா!

"அவள் கொண்டது பேராசையா?" மண்டல்.. மெரிட்.. அனிதா!

"வ்வாறு அனுமானித்துக் கொள்ளுங்கள். மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கும் பிறப்பின்போது ஒரே அறிவுத் திறன் இருந்தாலும், இங்கு நிலவும் சமூக, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் வானளவு வேறுபாடுகளால் ஒரு போட்டித் தேர்வென வரும்போது, மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையை எளிதில் கடந்து செல்லும். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையின் அறிவுப்புலம், ஒரு மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையை விட அதிகமாக இருந்தாலும், மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எந்தவொரு போட்டியிலும் பிற்படுத்தப்பட்டச் சமூக குழந்தை பின்தங்கி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன” மண்டல் குழு அறிக்கையின் அவதானிப்புகளின் ஒன்றான இது, இந்திய சமூகத்தின் ஏற்ற இறக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது நீட். மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் ’ஒரே நாடு ஒரே முறை’ என ஒற்றைத்தன்மையான அணுகுமுறையின் வடிவாக மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டது நீட். தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் இருக்கும் சூழலில், 'நீட் தேர்வு நடைபெறாது' என தமிழக ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியால் நம்பிக்கையுடன் இருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஏமாற்றமாகக் கடந்த ஆண்டுமுதல் நீட் தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. இந்த ஏமாற்றத்தின் முதல் பலி அனிதா.

'நீட் வந்தால் கல்வித் தரம் உயரும். அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் இடம்பெறுவர்' என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் மூன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களில் நான்கு மாணவர்கள் என மொத்தம் ஏழு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் மருத்துவ படிப்பிற்கே இடம் கிடைத்துள்ளது. 'மெரிட் முறை' என சொல்லப்பட்ட நீட் தேர்வுகளிலிருந்து கிடைத்திருக்கக்கூடிய விளைவுகள் இவை.

மெரிட் மதிப்பீடு பற்றி 'சமூகநீதிக்கான அடித்தளம்' எனும் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாதத்தை எடுத்துக்கொள்வோம் ”உண்மையில் ஒரு எலைட் சமூகத்தில், ’மெரிட்’ என நாம் அழைப்பது ஒருவர் பெற்றுள்ள முன்னுரிமைகள் மற்றும் வசதிகளினால் கிடைக்கிற ஒரு கூறு மட்டுமே. ஒரு மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையும் எந்தவொரு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் ’சமம்’ கிடையாது. அவர்களை ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிடுவதும் நியாயமற்றது” இதை ஏற்றுக்கொள்வோமேயானால் நீட் தேர்வு என்பதன் அடிப்படையே தவறாகிறது. நீட் தேர்வு விண்ணப்பம் பெறுவதற்குக் கூட பணம் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் சென்ற மாணவர்களும் இங்கு இருக்கின்றனர். 

மண்டல் குழு அறிக்கையின் முகப்பில் எழுதப்பட்டுள்ள வரிகளில்.. "சமமானவர்கள் மத்தியில்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமற்றவர்களிடம் சமத்துவம் பேசுவது என்பது சமத்துவமின்மையை நீடித்திருக்கவே வழிசெய்யும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்த தேசம் அதில் நிலவும் சீரற்ற கல்விமுறை, சமமற்ற வாய்ப்புகள் என எதிலுமே சமத்துவம் இல்லாத சூழலில் ’சமத்துவம்’ என்கிற பெயரில் ஒரு போட்டியை உருவாக்கி அதில் சமமற்றவர்களை போட்டியிடவிட்டு மத்திய, மாநில அரசுகள் கைகட்டி நிற்கின்றன. ஆம்... ’நீட்’ எனும் இப்படியொரு சமமற்ற போட்டியில்தான் அனிதாவும் தோற்க நேர்ந்தது.
 

அடுத்த கட்டுரைக்கு