Published:Updated:

பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்
பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

பிரீமியம் ஸ்டோரி

“தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்” என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, ‘முறைப்படுத்தி’ என்ற வார்த்தையே பெரும் கேலிக்குரியதுதான்.  காரணம், என்னதான் அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தாலும், அதை அவர்கள் வாங்கப்போவதில்லை. ‘கட்டணக் கொள்ளை’யின் ருசியை அறிந்த தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதலாகத்தான் வசூலிப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்’ என்பதைப்போல, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீசீத்தாராம் வித்யாலயா பள்ளி, கட்டணக்கொள்ளைக்கு ஓர் உதாரணம். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட, அதிகமாக பணத்தை மாணவர்களிடம் வசூலித்தது தொடர்பாக விளக்கம் கேட்க இந்தப் பள்ளிக்குச் சென்றோம்.

“ஊரு ஒலகத்துல கோடி கோடியா ஊழல் பண்ணுறாங்க... அதையெல்லாம் விட்டுட்டீங்க. இந்தச் சில்லறை காசு (ரூ.60 லட்சம்) விவகாரத்தை மோப்பம் பிடிச்சு வந்துருக்கீங்க...” என்று கடுகடுப்புடன் நம்மை வரவேற்றார், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீசீத்தாராம் வித்யாலயா பள்ளியின் முதல்வர் லஷ்மி தேவி.

மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம சமாஜம்’ அறக்கட்டளை செயல்படுகிறது. அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமானதுதான், ஸ்ரீசீத்தாராம் வித்யாலயா பள்ளி’. இந்தப் பள்ளி, 2010-11; 2011-12-ம் கல்வியாண்டுகளில் மாணவர்களிடமிருந்து அதிகக் கட்டணமாக வசூலித்தது ரூ.66 லட்சம்.

இந்தப் பள்ளியின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்த பெரும் முயற்சி செய்தவர், சமூக ஆர்வலர் ரமணி. அவரிடம் பேசினோம். “நான், ஸ்ரீராம சமாஜம் அறக்கட்டளையில் நிர்வாகியாக இருந்தேன். அப்போது, அறக்கட்டளையின் பெயரைச் சொல்லி நிறைய ஊழல்கள் நடப்பது தெரியவந்தது. அது பற்றிக் கேட்டதற்கு, என்னிடம் சண்டைக்கு வந்தனர். அதனால், அந்தப் பதவியைத் துறந்து வந்துவிட்டேன். ‘தனியார் கல்விக் கட்டண நிர்ணயக்குழு’ அறிவித்திருக்கும் கட்டணத்தைவிட, பல மடங்கு அதிகமாக  மாணவர் களிடம் பணம் வசூல் செய்தார்கள். எனவே, தனியார் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் 2012-ம் ஆண்டு புகார் கொடுத்தேன். அதன் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

2010-11-ம் கல்வியாண்டில் படித்த 1,844 மாணவர்கள், மற்றும் 2011-12-ல் படித்த 1,866 மாணவர்களிடமிருந்து 65,90,980 ரூபாய் அதிகமாக வசூலிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டது. அதையடுத்து, ‘கூடுதலாக வசூல் செய்த பணத்தை உடனடியாக மாணவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என 28.12.2017-ம் தேதி, தனியார் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

ஆனால், பள்ளி நிர்வாகம் அந்தப் பணத்தை    மாணவர்களிடம் திருப்பிக் கொடுப்பதாக இல்லை. பள்ளியில் படித்தபோது வழங்கப்பட்ட ஐ.டி கார்டு, அப்போது பணம் கட்டிய ரசீது, பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றைக் காண்பித்து, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, அறிவிப்பு பலகையில் ஒரு வாரம் எழுதி வைத்திருந்தனர். பிறகு, அதை அழித்துவிட்டனர். பள்ளியின் பெயர், பள்ளியின் சீல், முதல்வரின் கையெழுத்து என எதுவுமே இல்லாமல் ரசீது கொடுக்கிறார்கள். படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு, இதுவரை எந்தவொரு தகவலும் பள்ளியின் நிர்வாகத்திலிருந்து கொடுக்கப்படவில்லை.

2012-க்குப் பிறகும், இதேபோல அதிக கட்டணம் மாணவர்களிடத்தில் வசூலிக்கப்பட்டிருக்கலாம். அதை, தனியார் கல்விக் கட்டண நிர்ணயக்குழு ஆய்வுசெய்ய வேண்டும்” என்றார்.

பள்ளியின் முதல்வரான லஷ்மி தேவியிடம் விளக்கம் கேட்கச் சென்றபோதுதான், நமக்கு ‘பலத்த’ வரவேற்பு கிடைத்தது.

“எத்தனை மாணவர்களுக்கு, எவ்வளவு பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்?” என்ற கேட்டவுடன், “ப்ளீஸ் வெயிட்” என்று சொல்லிவிட்டு, யார் யாருக்கோ போன் போட்டார் முதல்வர். சில நிமிடங்களில், ஸ்ரீராம சமாஜத்தின் தலைவர் ரவிச்சந்திரனும், வேறு சிலரும் அங்கு வந்தனர். “என்ன விஷயம்?” என மிரட்டல் தொனியில் கேட்ட ரவிச்சந்திரனிடம் விஷயத்தை விளக்கினோம். ‘‘ஏதோ ஒரு தப்பு நடந்துடுச்சு. அதை உங்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ என்றார் ரவிச்சந்திரன்.

பட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்!’ - இதோ ஓர் உதாரணம்

‘‘மாணவர்களிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கல்விக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவு போட்டுள்ளது. அந்தப் பணத்தை ஏன் நீங்கள் திருப்பிக் கொடுக்கவில்லை?” என்று கேட்டோம். ‘‘அதெல்லாம் சொல்ல முடியாது. நாங்கள் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறோம். இதுக்கு மேல் நீங்கள் கேள்வி கேட்டால், உங்கள்மீது கேஸ் போடுவேன்’’ என்றார் ரவிச்சந்திரன். அருகில் நின்ற முதல்வர், ‘‘இதுவரை 20 லட்சத்தை மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டோம்’’ என்றார். அங்கிருந்த இன்னொரு நபர், “இல்லை... இல்லை. 10 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கோம்” என்றார். இன்னும் குழப்பமாக, ‘‘இல்லை... அஞ்சு லட்சம் கொடுத்திருக்கோம். சீக்கிரம் எல்லா பணத்தையும் கொடுத்துடுவோம்’’ என்றார் ரவிச்சந்திரன்.

கடைசியில் அங்கிருந்து நாம் புறப்பட்டபோது, ‘‘சார், ஒரு நிமிஷம்’’ என்றவாறு, ‘‘இதை வெச்சிக்கோங்க. பாத்துப் பண்ணுங்க’’ என்று ரூபாய் நோட்டுகளை நம் பாக்கெட்டில் செருக முயற்சி செய்தனர்.

“இப்படிச் செய்தால், உங்கள் மீது நாங்கள் புகார் கொடுக்க வேண்டியிருக்கும். முதலில், மாணவர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவாரா கல்வி அமைச்சர் செங்கோட்டையன்?

- ஜெ.அன்பரசன்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு