Published:Updated:

`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்!’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித்து மயில்சாமி அண்ணாதுரை

SAKTHIVEL MURUGAN G
`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்!’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித்து மயில்சாமி அண்ணாதுரை
`இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர்!’ - `ஐஏஎஸ் குரு’ சங்கர் குறித்து மயில்சாமி அண்ணாதுரை

சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாகி சங்கரன் தற்கொலை பலரையும் வேதனையில் ஆழ்த்திருக்கிறது. இவரது மரணம் குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ``முதல் தடவை சந்திப்பில் என்னை ஏமாற்றுபவர் போல்தான் தோற்றமளித்தார். ஆனால், பின்னர் தனக்குள் மிகப்பெரிய திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் செய்தார்" என்று சங்கர் குறித்த நினைவலையைப் பகிர்ந்துகொண்டார்.

``சென்னையில் 2012-ம் ஆண்டில் நடந்த கல்லூரி கருத்தரங்கு நிகழ்ச்சியின்போது சங்கர் என்னைச் சந்தித்தார். முதல் சந்திப்பில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. என்னை ஏமாற்றுபவர் போல்தான் தோற்றமளித்தார். முதல் சந்திப்புக்குப் பின்பு, சங்கர் பல முறை முயற்சி செய்தும் ஐ.ஏ.எஸ் தேர்வில் தோல்வியடைந்ததையும், அவர் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து தன் சகோதரியை ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வைத்ததையும், தன்னுடைய தோல்வியில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்தே பலரையும் ஐ.ஏ.எஸ் ஆக்க முடியும் என்று நம்பியதாகவும் சொன்னார். அதை, ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற வைத்து நிரூபிக்கவும் செய்தார். அவர் முதலில் ஏமாற்றுபவர்போல் தோன்றமளித்தாலும், அவருக்குள் ஏராளமான திறமைகள் புதைந்திருந்தன. அதை மாணவர்கள் வழியே சாதனையாக மாற்றியதையும் தெரிந்துகொண்டேன். 

பின்னாளில் மாணவர்களுடன் உரையாடுவதற்கு நிறைய தடவை என்னை அழைத்துள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி நூல் வெளியிட்டு விழாவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரியை தயாரித்து அதை விழா மேடையிலேயே அறிமுகப்படுத்தவும் செய்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள் போல் உணர வேண்டும் என்று விளக்கம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு அதைச் சாதனையாகவும் மாற்றவும் செய்தார் சங்கர். இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்க வேண்டியவர், தவறான முடிவெடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டது இளைஞர்களுக்குப் பேரிழப்பு" என்றார்.