Published:Updated:

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

வர்கள்தான் வருங்கால மருத்துவர்கள். ஆனால், ஒரு தேர்வு எழுதப் போன இடத்தில் அவர்களின் உயிரையே எடுத்துவிட்டார்கள். தாமதமாக வந்தால் நோ அட்மிஷன், ஹேர் பேண்ட் முதல் கொலுசு வரை எதுவும் அணிந்திருக்கக் கூடாது என எமர்ஜென்சி கால சிறைக் கைதிகளிடம் காட்டப்பட்ட  கெடுபிடிகளை விட, மிக மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அதிகாரம் இந்திய ஆட்சிப் பணி. ஆனால், ஐ.ஏ.எஸ் தேர்வுக்குச் செல்பவர்களைக்கூட இவ்வளவு கடுமையாகச் சோதித்தது இல்லை. அதிகபட்சம் செல்போன் அல்லது எலெக்ட்ரானிக் பொருள்கள் வைத்திருக்கி றார்களா என்று பார்ப்பார்கள். ஆனால், நீட் தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு மாணவ, மாணவிகள் சோதனை செய்யப் பட்ட விதம் வேதனையளிப்பதாக இருந்தது. திருச்சியில் தேர்வெழுதச் சென்ற மாணவி கள் அணிந்திருந்த மூக்குத்திகளையும், தோடுகளையும் கழற்றச் சொல்லி சோதனை நடத்தினர். மூக்குத்தியில் எல்லாம் ‘பிட்’ வைத்து எடுத்துவர முடியுமா? தலைமுடியைக் கலைத்து சோதனை, உள்ளாடைகள் வரை சோதித்த கொடூரம், அணிகலன்கள் அனைத்தையும் கழற்றச் சொன்ன அவலம், துப்பட்டாவை வாங்கி வைத்துக்கொண்டு தேர்வு எழுதச்சொன்ன கேவலம் என கெடுபிடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. சில நம்பிக்கைகளுடன் மாணவ-மாணவிகள் கைகளில் கட்டியிருந்த கயிறுகளையும்  தாயத்துகளையும் அறுத்து, சிலரது பூணூல்களைக் கழற்றிச் சோதனை செய்துள்ளனர். ஒரு மாணவனின் மீசையைப் பிடித்துப் பார்த்துச் சோதனை செய்த கொடுமையையும் செய்தனர். இவை அனைத்தும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சூழ்ந்திருந்த பொது இடங்களில் அரங்கேற்றப்பட்டன. இவ்வளவுக்கும் பிறகு, அவர்களால் எப்படி அமைதியான மனநிலையில் தேர்வு எழுதியிருக்க முடியும்?

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

ஒருவர் தேர்வு எழுதச் செல்லும்போது, நன்றாகப் படித்திருப்பதை விட, அவரின் மனநிலை அமைதியாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். ஆனால், தேர்வு எழுதச்சென்ற மாணவர்களை, ஏதோ தீவிரவாதிகளைச் சோதிப்பது போல சோதனையிடுவது எந்த விதத்தில் நியாயம்?

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

இந்த லட்சணத்தில் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை வைத்து அல்லாடவிட்டு, இயற்கைப் பேரிடர் போன்ற சூழலை ஒரு தேர்வுக்காக ஏற்படுத்தியது இன்னொரு கொடூரம். தமிழகத்தைவிட சிறிய மாநிலமான குஜராத்தில் 10 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் எட்டு நகரங்களில் மட்டுமே. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் தேர்வு மையங்கள் அமையும் என அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்தார்கள். தமிழகத்திலேயே அதிகமான கல்லூரிகள் இருக்கும் இந்த மாவட்டங்களில் ஏன் தேர்வு மையங்கள் அமைக்க முடியாமல் போனது?

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் இயக்குநர் தேவராஜனிடம் பேசியபோது, “தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களில் அலைய விட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இரண்டு நாள்களுக்கு முன் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பி, கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், இப்படி  குளறுபடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் அனுப்பப்பட்டு மே மாதம் தேர்வு நடைபெறுகிறது. எத்தனை பேர் எழுதப் போகிறார்கள் என்பது நான்கு மாதங்களுக்கு முன்பே தெரிந்தும், ஏன் தமிழகத்தில் போதுமான அளவு மையங்களை ஒதுக்கவில்லை? நீட் தேர்வுக்குக் கட்டணமாக ரூ. 1,400 வசூல் செய்துள்ளனர். இது யு.பி.எஸ்.சி தேர்வுக் கட்டணத்தைவிட பல மடங்கு அதிகம். யு.பி.எஸ்.சி தேர்வில்கூட இப்படியெல்லாம் சோதனை செய்யமாட்டார்கள். வட இந்தியாவில் மாணவர்களை இப்படிக் கடுமையாக சோதனை செய்திருப்பார்களா? ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் போன்ற அமைப்புகள் பல லட்சம் பேர் எழுதும் தேர்வுகளை எந்தக் குழப்பமும் இல்லாமல் நடத்துகின்றன. சி.பி.எஸ்.இ அமைப்பு இனிமேல் நீட் தேர்வை நடத்தக்கூடாது என முடிவெடுப்பதுதான் இதற்குத் தீர்வு” என்றார்.

நடந்தது பரீட்சை அல்ல, பாசிசம்.                        
             
- ஆண்டனிராஜ், கே.குணசீலன், ஜெ.அன்பரசன், ஸ்ரீராம்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வீ.சதீஷ்குமார், தே.தீட்சித்

இந்தியில் கேள்வித்தாள்!

துரையில் நீட் தேர்வு எழுத வந்த 120 மாணவ, மாணவிகளுக்குக் கேள்வித்தாளை மாற்றிக்கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தில் விளையாடியுள்ளது சி.பி.எஸ்.இ. மதுரை நரிமேட்டில் அமைந்துள்ள நாய்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 120 பேருக்கு இந்தி கேள்வித்தாள்களைக் கொடுத்துள்ளார்கள். மாணவர்கள் அதிர்ச்சியடைந்து புகார் செய்ததும், அவர்களைத் தனியாக ஒரு வகுப்பறையில் அமர வைத்துள்ளனர். இவர்களில், 24 மாணவர்களுக்கு மட்டும் தமிழ் கேள்வித்தாளை வழங்கி 12 மணிக்குத் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். மீதி 96 மாணவர்கள் தனி அறையில் காத்திருந்தனர். அது, வெளியில் காத்திருந்த பெற்றோர்களுக்குத் தெரியாது. மதியத்துக்கு மேல் தேர்வு எழுதி முடித்தவர்களின் வினாத்தாள்களை ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்து அவர்களைத் தேர்வு எழுத வைத்துள்ளனர். சாப்பிடக்கூட முடியாமல்  பெரும் பதற்றத்தில் இருந்தவர்களிடம், ‘மனச்சோர்வில்லாமல் நாங்கள் தேர்வு எழுதுகிறோம்’ என்று ஒரு பேப்பரில் எழுதிக் கையெழுத்து வாங்கிக்கொண்டார்களாம்.

நம்மிடம் பேசிய திண்டுக்கல் மாணவி டயானா, ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி ஓவியா ஆகியோர், ‘‘மூன்று மணி நேரம் சும்மாவே இருந்தோம். பிறகு, ஒரே ஒரு கொஸ்டீன் பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து ஓ.எம்.ஆர் ஷீட்டில் விடை எழுதச் சொன்னார்கள். இந்தி கொஸ்டீன் பேப்பரில் இருந்த நம்பரைத்தான் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அதுதான் எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது. ஒவ்வொரு கொஸ்டீன் பேப்பருக்கும் ஒரு பார் கோடு உள்ளது, இது ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். இப்போது, ஜெராக்ஸ் எடுத்துக்கொடுத்துள்ளதால் அதை கம்ப்யூட்டர் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது புரியவில்லை’’ என்றார்கள் அச்சத்துடன்.

- செ.சல்மான்

‘‘அப்பா வரலையா அங்கிள்?’’

டந்த ஆண்டு அனிதாவை பலிகொண்ட நீட், இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் உள்பட சிலரின் உயிரைக் காவுவாங்கியுள்ளது.

தமிழக மாணவர்கள் 5,371 பேர் எர்ணாகுளத்தில் தேர்வு எழுதினர். திருத்துறைப்பூண்டியிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ள சிறிய கிராமம் விளக்குடி. அங்கிருந்து, தன் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணசாமி. தம்மம் என்ற இடத்தில் உள்ள நாளந்தா பப்ளிக் ஸ்கூல் தேர்வு மையம் அருகே ஒரு விடுதியில் அவர்கள் தங்கினர்.

நீட்... இது பரீட்சை அல்ல... பாசிசம்!

நம்மிடம் பேசிய நெல்லையைச் சேர்ந்த அப்துல்லா இஸ்மாயில், ‘‘அன்று காலையில் என் மகனைத் தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக, ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, எனக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒரு மாணவன், தமிழில் ஆர்டர் செய்தான். அதனால், அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘எங்க அப்பாவுக்கு காலையில் சுகமில்லா போயிடுச்சு’ என்றான். நானும் அதே மையத்துக்குப் போக வேண்டியிருந்தது. அதனால், அவனை என்னுடன் அழைச்சுட்டுப் போனேன். அங்கே போனதும், ‘அங்கிள்... பையை உள்ளே கொண்டுவரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பா கொஞ்ச நேரத்தில் வந்துடுவார். அவரோட நம்பரை வெச்சுக்குங்க. அப்பா வந்ததும் இந்தப் பையைக் குடுத்துடுங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். தேர்வு தொடங்கி நீண்ட நேரமாக அந்தப் பையனோட அப்பா வரலை. அதனால், போனில் தொடர்புகொண்டேன். அதை லாட்ஜில் உள்ள ஒருவர் எடுத்து, ‘அவருக்கு உடல்நலமில்லாமல் போனதால ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். மாரடைப்பால் அவர் இறந்துட்டார்’ என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிட்டேன். அந்தத் துயரச் செய்தியை அங்கிருந்த மற்ற பெற்றோர்கள்கிட்ட சொன்னேன். தேர்வு முடிஞ்ச பிறகு அந்தப் பையன் வெளியே வந்தான். அவனிடம் பையைக் கெடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, ‘அப்பா  இன்னும் வரலையா அங்கிள்?’ என அப்பாவியாகக் கேட்டான். அதைக் கேட்டு, அங்கிருந்த அனைவருமே வெடித்து அழுதுவிட்டனர். அதனால் அச்சமடைந்த அந்தச் சிறுவன், விறுவிறுவென கூட்டத்துக்குள் நுழைந்து அப்பாவைத் தேடினான். அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும், என் நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்கு’’ என்றார் வேதனையுடன்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், ஆயில் மில் நடத்திவருகிறார். இவரின் இளைய மகளான ஐஸ்வர்யா, மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வெளியே வந்த மகளிடம், வினாத்தாள் பற்றிக் கேட்டார் கண்ணன். ‘ரொம்ப கஷ்டமாக இருந்ததுப்பா’ என்று மகள் கவலையுடன் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவர், பள்ளி வராண்டாவிலேயே மயங்கி விழுந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, ஆட்டோவில் தந்தையை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டார் கண்ணன்.