Published:Updated:

கஜா பாதித்த பள்ளி மாணவர்களின் உடனடி அவசரக் கோரிக்கை! கல்வித் துறையின் கவனத்துக்கு...

கஜா பாதித்த பள்ளி மாணவர்களின் உடனடி அவசரக் கோரிக்கை! கல்வித் துறையின் கவனத்துக்கு...
கஜா பாதித்த பள்ளி மாணவர்களின் உடனடி அவசரக் கோரிக்கை! கல்வித் துறையின் கவனத்துக்கு...

கஜா பாதித்த பள்ளி மாணவர்களின் உடனடி அவசரக் கோரிக்கை! கல்வித் துறையின் கவனத்துக்கு...

``புயலால் இடிந்து வீட்டில் இருப்பதை விட, பள்ளிக்கூடம் வருவது பாதுகாப்பு. ஆனால், பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்க தேவையான பொருள்கள் எல்லாம் கஜா புயலால் சேதமாகிவிட்டன" என்று ஆதங்கத்துடன் பேசுகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் மணிமாறன். திருவாரூர், மேலராதா நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நண்பர்களோடு இணைந்து, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புயல் பாதிப்புக்கான விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கும் பள்ளிகளும் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவற்றைப் பற்றிக் கேட்டேன். 

``ஞாயிற்றுக்கிழமை வரை நிவாரணப் பணிகளில்தான் இருந்தோம். புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்குப் பல மாதங்கள் ஆகும் என்பதுதான் உண்மை. கடந்த திங்கள் கிழமை முதல், டெல்டா மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகளும் இயங்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு முதல்நாள் வரை மக்கள் தங்கும் முகாமாக இருந்தன. இன்னும் பல இடங்களில் பகலில் பள்ளியாகவும், இரவில் முகாமாக மக்கள் தங்கிவருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்குச் சில விஷயங்களை அரசு செய்துகொடுக்க வேண்டியது அவசியம். 

முதலில், டிசம்பர் 10 அன்று தொடங்கவிருக்கும், அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். ஏனென்றால், பல மாணவர்களின் வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வரவில்லை. எப்போது வருமென்றும் தெரியவில்லை. நாங்கள் சென்ற கிளூவத்தூர் மண்ணுக்குமுன்டான் ஊரில், சாலையிலிருந்து மாணவிகள் இருட்டில் நடந்துபோவதைப் பார்த்தோம். அதனால், அவர்கள் தேர்வுக்குப் படிப்பது என்பது மிகவும் சிரமம். மேலும், புயல் பாதிப்பில் உளவியலாகச் சோர்வாக இருக்கும் மாணவர்களை, தேர்வு பயம் இன்னும் மிரட்டி படிப்பதற்கு சிரமம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகங்கள் புயல் மழையில் முற்றிலுமாகச் சேதமாகிவிட்டன. எனவே, அவற்றைத் திரும்பவும் கொடுத்த பின்தான், தேர்வுக்கு அவர்களால் தயாராக முடியும். இது எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம், இரண்டாம் பருவப் புத்தகங்களின் பி.டி.எஃப் -யை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி, பிரின்ட் அவுட் போட்டுக்கொடுக்காவது சொல்லலாம். 

மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுப்பதுபோலவே நோட்டுகள் கொடுப்பதும் அவசியம். 1 முதல் 8 வரை வகுப்புகளுக்குக் குறைவான நோட்டுகளே தேவைப்படும். ஆனால், 10, 11, 12 வகுப்புகளுக்கு அதிக எண்ணிக்கையில் நோட்டுகள் தேவைப்படும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அரையாண்டுத் தேர்வைப் போலவே ஆண்டுத் தேர்வையும் குறிப்பிட்ட காலம் தள்ளி நடத்த வேண்டும். ஏனெனில் 10, 11, 12 வகுப்புகளுக்கு டிசம்பர் மாதத்துக்குள் சிலபஸை நடத்தி முடித்திருப்பார்கள். அதன்பின், பிராக்டிகல் தொடர்பானவை நடைபெறும். கஜா புயலால், புத்தகங்கள் இழந்த நிலையில் இந்த மாதத்துக்குள் சிலபஸ் முடிப்பது சிரமம். எனவே, மாணவர்கள் நலன் கருதி செய்தால் உதவியாக இருக்கும். 

புத்தகம், நோட்டுகளுடன் புத்தகப் பை, காலணியும் கொடுக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், பள்ளி தொடங்கும்போது அரசு தரும் விலையில்லாப் பொருள்களை மீண்டும் தருவது உதவியாக இருக்கும். அடுத்து, உணவு தொடர்பாக முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். பொதுவாக, மாணவர்கள் பள்ளி விட்டுச் சென்றதும் வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால், தற்போது பல இடங்களில் பொதுச் சமையல் நடப்பதால், அதற்கு வாய்ப்பில்லை. எனவே, மாலையில் பிஸ்கட், சுண்டல் போன்றவற்றைக் கொடுக்கலாம். கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கும்பட்சத்தில் வீட்டிலுள்ள தம்பி, தங்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

தனது வீடும் சுற்றுப்புறமும் வழக்கமான நிலையில் இல்லாததாலும் புயல் பாதிப்புகளை நேரடியாகப் பார்த்ததாலும் மனச்சோர்வுற்றிருக்கும் மாணவர்களை இயல்பாக்குவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களை எவ்வாறு கையாள்வது என ஆசிரியர்களுக்கும் பயிற்சி தேவை. பல பள்ளிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்திருப்பதால், இரண்டு வகுப்புகளை ஒரே இடத்தில் வைத்து பாடம் நடத்துவதையும் கேள்விப்பட்டேன். இது இரு வகுப்பு மாணவர்களின் கற்றலையும் பாதிக்கும். எனவே, அதற்கு உரிய மாற்று இடங்களைத் தருவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் மணிமாறன். 

அடுத்த கட்டுரைக்கு