Published:Updated:

“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”

“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”

பச்சிளங்குழந்தைகளை ஃபெயிலாக்கிய ‘பகீர்’ பள்ளி...

``நான் ஃபெயில் ஆகிட்டேனாம். திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம். அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்கூடப் படிக்கமாட்டாங்களா... ஃபெயில்னா என்னங்க அக்கா?” என்று பரிதாபமாகக் கேட்கும் அந்தக் குழந்தைக்குப் பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அடையாறு பாரத் சீனியர் செகண்ட்ரி பள்ளியின், இந்தப் பொறுப்பற்ற அநீதியான அறிவிப்பால், அந்தக் குழந்தையின் பெற்றோர் மூன்று வாரங்களாக மன உளைச்சலில் தவித்து வருகிறார்கள். இதைக் குழந்தையின் மீது நடத்தப்பட்ட உளவியல்ரீதியான தாக்குதல் என்றே கொந்தளிக்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்!

``உங்க குழந்தைக்கு இன்னும் ரீடிங் சரியாக வரல. ஏபிசிடி-யை வரிசையாக மட்டும்தான் எழுதத் தெரியுது. நடுவிலிருந்து கேட்டாலோ, தலைகீழாகக் கேட்டாலோ உங்க குழந்தைக்கு எழுதத் தெரியலை. அவளைத் திரும்பவும் எல்.கே.ஜி படிக்கவைக்கிறதுதான் நல்லது. எல்.கே.ஜி அட்மிஷன்தான் கொடுக்க முடியும். இன்னைக்கு அட்வான்ஸ் கட்டிடுங்க. அப்பத்தான் திரும்பவும் எல்.கே.ஜி படிக்கிறதுக்கான சீட் கன்ஃபார்ம் ஆகும்” என்று தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.

“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”

குழந்தையின் அம்மா ஹேமாவதியிடம் பேசினோம். ``என் வீட்டுக்காரர் டிரைவராக இருக்கிறார். நான் வீட்லதான் இருக்கேன். கஷ்டப்பட்டுத்தான் பள்ளிக்கூடக் கட்டணம் கட்டியிருக்கோம். சி.பி.எஸ்.இ பள்ளியில் குழந்தையப் படிக்கவைக்கணும்னுதான் எங்களுக்கு ஆசை. எல்.கே.ஜி-க்கு 40,000 ரூபாய் கட்டணம் கட்டியிருந்தோம். தேர்வு முடிஞ்சு கடைசி நாள், ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரப் போனப்ப, என் குழந்தைய ஃபெயில் பண்ணிட்டதாகச் சொல்றாங்க. `ஏபிசிடி-யை வரிசையாக மட்டும்தான் எழுதறா... குழப்பிக் கேட்டா எழுதத் தெரியல’ன்னு காரணம் சொன்னாங்க. எங்களுக்கு மூணு வாரமாகத் தூக்கம் இல்லைங்க. `வேற ஸ்கூல்ல சேர்த்துக்குறோம்’னு சொன்னோம். `டி.சி வாங்கிட்டுப் போங்க. ஆனா, பாஸ் பண்ணிட்டதா சர்ட்டிஃபிகேட் தர முடியாது’னு சொல்லிட்டாங்க” என்றார் குழந்தையின் அம்மா ஹேமாவதி.

இதைப்போலவே மேலும் மூன்று குழந்தைகளின் பெற்றோரிடமும் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் நம்மிடம், “இது மிக மோசமான ஒரு துன்புறுத்தல். கிண்டர்கார்டன் பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்புவது, மற்றகுழந்தைகளுடன் பேசி சமூகத்திறன்களைக் கற்றுக்கொள்ளத்தான். ஃபெயில் செய்துவிட்டார்கள் என்று சொல்லும் அந்தக் குழந்தைக்கு, தோற்றுப்போவது குறித்த எந்த ஒரு புரிதலும் இல்லை. தன்னுடன் படித்த குழந்தைகளுடன் மறுபடியும் வகுப்புக்குப் போகமுடியாதா என்பதைத்தவிர, அதற்கு வேறு எந்தப் புரிதலும் இல்லை. ஏறத்தாழ ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருக்கும் இந்தக் குடும்பத்துக்குப் பள்ளி நிர்வாகம் பதில் அளிக்கவேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”

யூ.கே.ஜி-க்குக் குழந்தையை அனுமதிப்பதோடு, கட்டணம் இல்லாமல் அந்தக் குழந்தைக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும். எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்பதைப்பற்றி எல்லாம் அறிந்துகொள்ளாத நிலையில் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன” என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,  ``ஐந்தாம் வகுப்பிலோ அல்லது எட்டாம் வகுப்பிலோ ஒரு குழந்தை தேர்ச்சிஅடையாத நிலையில் இருந்தால்கூட, அவர்களுக்கு அவகாசம் அளித்து மறுதேர்வு நடத்தி, அடுத்த வகுப்புக்கு அனுமதிப்பதுதான் கல்விஉரிமைச் சட்டத்தின் விதி. தனியார் பள்ளிகள், குறிப்பாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இப்படியான தான்தோன்றித்தனமான போக்கு அதிகமாகியிருக்கிறது. இந்தப் பள்ளி இப்போது செய்திருப்பது அநீதி மட்டுமல்ல, இது அந்தக் குழந்தையின்மீதான வன்முறை. அந்தப் பகுதியின் குழந்தைகள் நல அலுவலர், சி.பி.எஸ்.இ-யின் மண்டல அலுவலர், குழந்தைகள் மாநில உரிமை ஆணையம் என அனைத்து அமைப்புகளும் குழந்தைகளுக்கு எதிரான மனரீதியான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இத்தகையப் பள்ளிகள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள்தான், குழந்தைகளின் கல்வி உரிமையைப் பெற்றுத்தரும் முதல்படியாக இருக்க முடியும்” என்றார் அழுத்தமாக.

“திரும்பவும் எல்.கே.ஜி படிக்கணுமாம்!”

பாரத் சீனியர் செகண்ட்ரி பள்ளி நிர்வாகத்தின் தரப்பை அறிய தொடர்புகொண்டபோது, ``இது சாதாரண நடைமுறை. இதைப்பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்ற ஒற்றை வரி பதிலுடன் உரையாடல் துண்டிக்கப்பட்டது. தொடர்புகொள்வதற்காகத் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி இயல்பாகப் பெறவேண்டிய உரிமைகளுக்குக்கூட ஒவ்வொரு முறையும் போராடும் நிலைதான் இங்கே இருந்துவருகிறது. என்ன செய்கிறது இந்த அரசு?

- ம.குணவதி
படம்: ப.பிரியங்கா