Published:Updated:

10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்களா... உண்மை என்ன?

10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்களா... உண்மை என்ன?
10, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்களா... உண்மை என்ன?

`10, 12-ம் வகுப்புகளின் பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் இருக்காது. இப்போதுள்ள பாடங்களே தொடர்ந்து இருக்கும். புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடநூல் இந்த ஆண்டு கிடையாது’ என்று வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவிவருகின்றன. நாளிதழ்களிலும் `10, 12-ம் வகுப்புகளின் பாடத் திட்டங்களில் மாற்றங்கள் இல்லை’ என்ற  செய்தியால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புப் பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதில் பாடப் பகுதிகள் மிகுதியாக இருப்பதால் கணிதப் பிரிவிலும், அறிவியல் பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் `பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு, பழைய பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் `10, 12-ம் வகுப்புகளுக்கு, பழைய பாடத் திட்டங்களே தொடரும்’ என்று செய்தி பரவிவருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

``கடந்த வாரம் இதுகுறித்து தெளிவான அரசாணை வெளியிட்டுள்ளோம். மேலும், 2017-ம் ஆண்டிலேயே ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இரண்டு உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்துகளும் பெறப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவானது.

2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையிலேயே 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 2018-19-ம் ஆண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கவும், 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் வழங்கவும், 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை 2020-21 கல்வியாண்டில் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள வகுப்புகளில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. முதல் பருவத்துக்கான புத்தகங்கள் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் முடிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறோம். இந்த நேரத்திலேயே 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குரிய புத்தகங்களும் தயாராகிவிடும். முதல் பருவத் தேர்வுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கியவுடன், இரண்டு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுக்கான பாடப் புத்தகங்களும் தயாராகிவிடும். ஆகையால், அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த வேண்டிய பாடநூல்களை இந்த ஆண்டே வழங்கவும் தயாராகிவருகிறோம். இதற்கான அனுமதியையும் பெற்றுள்ளோம்.

இந்த ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே 10, 12-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். இதில் எந்த வகையிலும் மாற்றமில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். கூடுதலாக, இந்த ஆண்டே 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடப் புத்தகங்களை வழங்கவும் விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

மேற்கண்ட வதந்திகள் பரவியது எப்படி என்பது குறித்துக் கேட்டபோது, ``ஒவ்வொரு பாடப் புத்தகத்தையும் தயாரிக்கும்போதும் அதைக் குறுந்தகடு வடிவிலும் வழங்குவது உண்டு. முதல் பருவத் தேர்வுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டவுடன் அடுத்த பருவத் தேர்வுக்கான பாடப் புத்தகங்களின் குறுந்தகடுகள் தயாரிக்கப்படும் என்றும், 3, 4, 5 மற்றும் 8 வகுப்புகளுக்குரிய பாடத்திட்டங்களில் சிறுபான்மைப் பாடங்களின் குறுந்தகட்டை அடுத்த கல்வியாண்டில் (2020-21) வழங்க இயலும் என்றும் தெரிவித்திருந்தோம். இதைச் செய்தியாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, அடுத்த கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டம் என்று செய்தியை வெளியிட்டுள்ளனர். இதுவே மாறி 10, 12-ம் வகுப்புகளுக்குப் பாடத்திட்டங்களில் மாற்றமில்லை என்று செய்தி பரவியிருக்கிறது’’ என்று தெளிவுபடுத்தினர்.

ஆக,  இந்த ஆண்டு 12, 10, 8, 5, 4 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்கள் வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது பள்ளிக் கல்வித்துறை.