Published:Updated:

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?
பிரீமியம் ஸ்டோரி
ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

ஜூன் மாதம் வந்தாலே பெற்றோர்கள் பதைபதைத்துப்போய்விடுகிறார்கள். நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் ஏழைகளின் நிலைமை படுமோசம். ஏற்கெனவே இவர்கள் பள்ளிக்குக் கட்டணம் கட்டுவதற்குள் படாதபாடுபட்டுவிடுகிறார்கள். அது போதாது என்று இப்போது இன்னொன்றும் சேர்ந்துகொண்டது. அதுதான் ‘நீட்’ கட்டணம். பள்ளிக் கட்டணத்துடன் நீட் தேர்வுக்கான கட்டணத்துக்காக நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படியாக மத்திய அரசின் கல்விக் கொள்கை, தனியார் கல்வி நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைக்கு வசதியாகப் போய்விட்டது.

`நீட் தேர்வுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்’ என்ற பெயரில், தெருவுக்குத் தெரு முளைத் திருக்கும் கோச்சிங் சென்டர்கள், லட்சக் கணக்கில் பணத்தைக் கறக்கும் வியாபார நிறுவனங்களாக மாறியிருக்கின்றன. ஆனால், பயிற்சிபெற்று தகுதிபெறும் மாணவர் களுக்குக்கூட, மருத்துவம் படிக்க சீட் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை. உதாரணத்துக்கு மதுரை, திருச்சி, சேலம், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இதற்கான கட்டணங்களை விசாரித்தோம்.

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

மதுரையில் 50,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு லட்சம் ரூபாய் வரை பயிற்சிக்கான கட்டணமாக வசூலிக்கின்றனர். மதுரையில் தனியார் கோச்சிங் சென்டர்கள் மட்டுமன்றி, தேசத் தலைவரின் பெயரிலுள்ள பள்ளி, ஓய்வுபெற்ற மத்திய அரசு அலுவலர்கள் நடத்தும் பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளிகள் அனைத்தும் நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. இதில் மாணவர்கள் கண்டிப்பாக சேர வேண்டும். இல்லையெனில், பள்ளியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஏற்கெனவே, பள்ளியில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, இந்தப் பயிற்சிக்குத் தனியாக 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டுக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சியில் உள்ள நீட் பயிற்சி மையங்களுக்கு பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை என்று பல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் வருகின்றனர். இவர்களிடம் முழுநேரப் பயிற்சி, வார இறுதி நாள்களில் பயிற்சி என 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோச்சிங் சென்டர்கள் 1,30,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் மற்றும் கோச்சிங் சென்டர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நீட் பயிற்சி வகுப்பு கள் நடைபெறுகின்றன. இங்கு 60,000 ரூபாயில் தொடங்கி 1,25,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளிக் கட்டணத்துடன் நீட் பயிற்சிக்கும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. திருநெல்வேலியில் ஒரு சில பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக் கான பயிற்சி அளித்து 40,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். மேற்கண்டவை எல்லாம் சில உதாரணங்களே... தமிழகம் முழுவதுமே நிலைமை இதுதான்!

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

இவர்கள், திரும்பும் இடங்களில் எல்லாம் பேனர்கள் வைத்தும் தினசரி நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தும் மாணவர்களைக் கவர்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் இந்த நீட் தேர்வு மையங்களுக்கென அரசு எந்தவித விதிமுறைகளையும் முறைப்படுத்தவில்லை. இதனால், இந்த மையங்களில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளோ, திறமையான ஆசிரியர்களோ இல்லை.

2019-ம் ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,23,078 பேரில், 21,000 பேர் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். மீதம் உள்ள சுமார் ஒரு லட்சம் பேர் தனியார் நீட் கோச்சிங் சென்டர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். சராசரியாக ஒரு மாணவருக்கு நீட் பயிற்சிக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அப்படியென்றால், ஒரு லட்சம் மாணவர் களுக்கு நீட் பயிற்சி என்ற பெயரில் எத்தனை கோடி ரூபாய் வசூலாகிறது என்பதை நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள்.

இந்த நீட் வியாபாரம், தமிழகத்தில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய்க்குமேல் நடக்கிறது. அப்படியென்றால், இந்திய அளவில் இதன் வியாபாரம் என்ன அளவில் இருக்கும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீட் பயிற்சி என்ற பெயரில் நடக்கும் இந்தப் பெரும் வியாபாரத்துக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாதது, அவர் களுடைய ஆசியில்தான் இது ஏகபோகமாக நடக்கிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``மேல்நிலைக் கல்வியைப் பலவீனப்படுத்திவிட்டு, `கோச்சிங் சென்டர் வந்தாலே போதும். நாங்கள்  பார்த்துக் கொள்கிறோம்’ என்ற அளவுக்கு இன்றைக்கு நீட் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதனால் 11, 12-ம் வகுப்புகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவதுடன், நீட் தேர்விலும் மதிப்பெண்கள் குறைந்து, பிள்ளை களை இரண்டாம்கட்ட சிக்கலில் விட்டுவிடுகின்றனர். இந்த கோச்சிங் சென்டர்களை ஏன் அரசு அனுமதிக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,000 மருத்துவ இடங்களுக்கு, எத்தனை லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பார்கள்? ஒரு வேளை அப்படிப் பணத்தைக் கொட்டிப் படிக்கும் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண் கள் பெற்றுத் தகுதிபெற்றால், மருத்துவம் படிக்க சீட் கிடைத்துவிடுமா? இது ஏற்றுக்கொள்ள முடியாத சுரண்டல் வியாபாரம்.

தனியார் பள்ளிக்கூடங்கள் எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், `நாங்க போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும்’ எனச் சொல்லியே பள்ளிக் கூடங்களை நடத்துகின்றன. ‘இத்தனை மாணவர்கள் எங்கள் பள்ளியில் இருக்கிறார்கள்’ என ஒரு சில பள்ளிகள், கோச்சிங் சென்டர்களுடன் டீல் பேசுகிறார்கள். நீட் கோச்சிங் என்பது, கல்வியியல் செயல்பாட்டை முற்றிலும் அழித்து முழுக்க வியாபாரமாக மாற்றி வருகிறது. அரசு இதில் தலையிட்டு நீட் கோச்சிங் சென்டர்களுக்கென வரைமுறையை வகுத்து, கண்காணிக்க வேண்டும்” என்றார்.

ஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை! - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு?

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசினோம். ``இந்தியா முழுக்க, நீட் தேர்வுக்குத் தனியார் கோச்சிங் சென்டர்கள்தான் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் அரசு சார்பில், இலவச நீட் பயிற்சியை மாணவர்களுக்குக் கொடுக்கிறோம். தனியார் நீட் கோச்சிங் சென்டர்கள், ஓரளவுக்கு நியாயமான கட்டணங்களை வாங்கினால் பரவாயில்லை. ஆனால், இதை கமர்ஷியல் பிசினஸ்போல் நினைத்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்குகின்றனர்.

ஒரு சில பள்ளிகள் மனிதாபிமானமே இல்லாமல், அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடமே பயிற்சிக்காக எக்கச்சக்கமான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இது சரியானதல்ல. இந்த கோச்சிங் சென்டர்களின் கட்டணம், உள் கட்டமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்துவது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்துவருகிறோம். இதுபற்றி மூத்த அமைச்சர்கள் சிலர், முதலமைச்சருடன் பேச இருக்கிறோம். விரைவில் இதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

கந்து வட்டி கடன் கழுத்தை நெரிப்பதற்குள் சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள்!

- நவீன் இளங்கோவன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ரமேஷ் கந்தசாமி

பாஸாகலாம்... சீட் இல்லை!

2017
-18-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 216 அரசு மருத்துவக் கல்லூரிகள், 247 தனியார் மருத்துவக் கல்லூரிகள், இரண்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 465 கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இதில் மொத்தம் 66,771 எம்.பி.பி.எஸ் இடங்களும் 27,148 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுக்கச் சுமார் 14 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், தேர்வில் தகுதிபெற்றவர்களோ அதில் பாதி்  பேருக்கும் குறைவுதான்.

தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1,23,078. இதில் தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை 59,785. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,600 இடங்கள் என மொத்தம் 6,850 இடங்களுக்கு 59,785 பேர் தகுதிபெற்றிருக்கின்றனர். இவர்களில் 52,935 பேருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கப் போவதில்லை. இருந்தும் நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism