Published:Updated:

வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?

வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?
வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?

தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரும் மற்றும் வெளிவராத பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகள் பற்றிய தெளிவைப் பள்ளிப்பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த மத்திய மாநில அளவில் பாடத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் சமபால் ஈர்ப்பினால் 17 வயதான இரண்டு சிறுமிகள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. பாலியல் குறித்த கல்வி ஏன் பள்ளிகளில் அவசியம் என்ற கேள்விக்கு இப்படியான சம்பவங்களே விடைகளாக வரிசையில் நிற்கின்றன. இப்படியான குழப்பங்களில் இருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுப்பது எப்படி என்பது குறித்து வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசகரும், `இறைவி’ பெண்கள் அமைப்பின் நிறுவனருமான காயத்ரி ஸ்ரீகாந்திடம் பேசினோம்.

``பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. அதைத்தான் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கும் காலம் என்று சொல்வதுண்டு. வளரிளம் பருவத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும். நண்பர்களின் அழுத்தம் (Peer pressure), திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் செக்ஸ் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரைப் பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். அந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு இலைமறைகாயாகவே நம் சமூகம் கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?

திருக்கோவிலூர் சம்பவம், நமக்கு உணர்த்துவது என்ன ?

கட்டுப்பாடற்ற இணையதள வசதியால் கிடைக்கும் பல காணொலிகள் பாலியலை அறிந்துகொள்ள வைக்கிறது. இது எப்படி இருக்கும் என்ற ஆர்வ மிகுதியாலும், உடன் இருக்கும் சம பாலினத்தவரோடு அல்லது எதிர் பாலினத்தவரோடு தன் பாலியல் தேவைகளை தீர்த்துக்கொள்ள முயலும் செயல் காலப்போக்கில் அவர்களைவிட்டுப் பிரிந்து வாழ முடியாத சூழலையும் ஏற்படுத்தும். யாருக்கும் பிரச்னையின்றி சுயஇன்பம் காணும் பழக்கமும் இன்றைய வளரிளம் பருவ பிள்ளைகளை ஆட்கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நடன அசைவுகள், காதல் பாடல்கள், கதாநாயகன், கதாநாயகியின் நெருக்கமான காட்சிகள், வில்லன் வன்புணர்வு செய்யும் காட்சிகள் போன்றவை வளருகின்ற இளம் பதின் பருவத்தினரின் எண்ணத்தில் ஆழ்ந்து பதிந்துவிடுகிறது.

இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள். இன்றைய நிலையில் திருமணம் ஆனவர்களுக்குக்கூட பாலியல் குறித்த விழிப்புணர்வுகள் இல்லை. சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப்படுவதால்தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

பெற்றோர்களின் பங்கு என்ன?

பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமாகப் புரிய வைக்க வேண்டும்.

தவறான உடலுறவு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை தகுந்த வயதில் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணத்தில் மூடநம்பிக்கைகளை வளர்க்காமல் அறிவியல் சார்ந்த கருத்துகளை பதின் பருவத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த பாலியல் கல்வி குறித்த யூடியூப் காணொலிகளைப் பார்த்துவிட்டு பிள்ளைகளுக்குச் செய்திகளாய் சொல்லுங்கள்.

பிரச்னைகளின் எதார்த்த பாங்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி கேள்விக்குறியாக்குகிறது என்பதைப் புரிய வையுங்கள்.

பாலியல் சார்ந்து ஆர்வக்கோளாறில் இவர்கள் செய்யும் செயல்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனம் திறந்து பேசி அவர்களின் பொறுப்புணர்வை தெரியப்படுத்துங்கள்.

வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?

ஆசிரியர்களின் பங்கு:

குழந்தைகளுக்கு இரண்டாவது வீடாக இருக்கும் பள்ளிகளில் உங்களின் பொறுப்பு அளப்பரியது.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிய அடிப்படை அறிவைப் பகிருங்கள்.

தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயல் நடைபெறும்போது அதை எப்படி மறுக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்

பிறப்புறுப்புத் தூய்மை, பிறப்புறுப்பை ஏன் மற்றவர்கள் தொடுதல் கூடாது போன்றவற்றுடன் தன் உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தன் வளரிளம் பருவத்தை ஆரோக்கியமாகக் கொண்டாடச் செய்யுங்கள்.

அறிவியல் ஆசிரியர்கள் ஆண் பெண் இனப்பெருக்கம் குறித்த அறிவியல் பார்வையை தவிர்க்காமல் சரியான முறையில் கற்பிக்க வேண்டும்.

தவறான எண்ணங்களோடு தன்னை யார் அணுகினாலும் சாமர்த்தியமாக அவர்களைக் கையாளுவது குறித்துக் கலந்துரையாடல் செய்ய முன்வாருங்கள்.

வளரிளம் பருவ குழப்பங்கள்; நாம் செய்ய வேண்டியது என்ன?

தன்னை நிர்பந்தித்து பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்தான் தண்டனைக்குரியவர். துன்புறுத்தலுக்கு ஆளானவர் ஒரு போதும் பயப்படத் தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்குதல் அவசியம்.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாகப் பலவிதமான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும் என்ற அறிவியல் உண்மையை வெளிப்படையாகப் பேசுங்கள்.

பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. ஆண்களுக்கும் இதேபோன்று ஆணுறுப்பு குறித்த சந்தேகங்கள் எழும். இதையும் டிவி-க்களில் வரும் சித்த வைத்திய தாத்தாக்களிடம் தெரிந்துகொள்ளவிடாமல், அறிவியல் உண்மையைக் கூறுங்கள்.

மத்திய மாநில அரசாங்கங்கள் செய்ய வேண்டியது:

தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவரும் மற்றும் வெளிவராத பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகள் பற்றிய தெளிவைப் பள்ளிப்பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த மத்திய மாநில அளவில் பாடத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

1-5 வகுப்பு வரை உடல் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்துக் கற்பிக்க வேண்டும்.

6-8 வகுப்பு வரை பூப்படைதல், உடலில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்கள் பற்றிய புரிதலையும் உடல் சார்ந்து மாணவர்களுக்கு விளக்குவதாகவும் இருக்க வேண்டும்

9-12 வாழ்க்கைக் கல்வியுடன், சமூக பாலின வேறுபாடுகளைக் களைதல், போதை பழக்கத்தின் விளைவுகள், நண்பர்கள் அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் எதிர்பாலின ஈர்ப்பு குறித்து புரிதலை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கல்லூரிப் பருவ மாணவர்களுக்குத் தவறான உடலுறவைத் தவிர்த்தல், போதைப் பொருள்களை தவிர்க்கும் வழிகள், சுய மதிப்பீட்டையும் தன்னம்பிக்கையும் அதிகரித்து சமூகம் சார்ந்த சிந்தனையையும் பொறுப்புணர்வையும் வளர்த்து ஆரோக்கியமான குடும்பமும் சமுதாயமும் அமையவும், மாணவர்கள் நல்ல குடிமகனாக திகழவும் வழிவகை செய்ய வேண்டும்.

பள்ளிகளில் தனியாக ஒரு மனநல ஆலோசகர் (Counsellor) தனியாகவோ அல்லது ஏதேனும் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் பயிற்சி பெற்ற ஆசிரியரை ஆலோசகராக நியமிக்கலாம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு