Published:Updated:

`கொரோனாவால் 363 மில்லியன் மாணவர்கள் பள்ளி செல்லவில்லை!’ - யுனெஸ்கோ அதிர்ச்சித் தகவல்

யுனெஸ்கோவின் வீடியோ கான்பரன்சிங் உயர்கல்வி கூட்டம்
யுனெஸ்கோவின் வீடியோ கான்பரன்சிங் உயர்கல்வி கூட்டம்

`கொரோனா பாதிப்பின் எதிரொலியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது உலகளவிலான கல்வித்துறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்'.

`கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக, உலகளவில் 363 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை' என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி பாதிப்பைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி  செல்லாதவர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி செல்லாதவர்கள்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகளவில் கொரோனா தாக்கத்தால் இதுவரை 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பு ஒரு லட்சத்தையும் தாண்டியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோய் தாக்கத்தின் எதிரொலியாக சர்வதேச அளவில் பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உலகளலாவிய உயர்கல்விக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளது. இதில், 24 கல்வி அமைச்சர்கள் மற்றும் 15 துணை அமைச்சர்கள் உட்பட 73 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 57.8 மில்லியன் உயர்கல்வி மாணவர்கள் உட்பட 363 மில்லியன் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளது யுனெஸ்கோ.

இது தொடர்பாகப் பேசிய யுனெஸ்கோ தலைவர் ஆட்ரி அசௌலே (Audrey Azoulay), ``கொரோனா பாதிப்பின் எதிரொலியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது உலகளவிலான கல்வித்துறைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல். இதன் வேகம் எந்த வகையிலும் கல்வியைச் சீர்குலைத்துவிடக் கூடாது. இது தொடர்பாக அவசரகால நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவர்களின் கல்வி பாதிப்படைவதைக் கருத்தில் கொண்டு, திறந்தவெளி கல்வி முறையை உருவாக்குமாறும், குறிப்பாகத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா
கொரோனா

அதோடு, இந்தக் கூட்டத்தில் யுனெஸ்கோ பல்வேறு நாடுகளுடன் இணைந்து, `அவசரகால பணிக் குழுவை’ உருவாக்கியுள்ளது. இந்தக் குழு பள்ளிகள் மூடப்பட்ட நாடுகளில் தொழில்நுட்பத்தைக் கொண்டு கல்வி கற்பித்தலை ஊக்குவிக்கும். திறந்தவெளிப் பள்ளி மற்றும் ஆன்லைன் முன்மாதிரி பள்ளிகளை உருவாக்கவும் வழிவைகை செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு