Published:Updated:

``எனது கோரிக்கையை நிறைவேற்றினால் மகிழ்ச்சி!"- சிகை அலங்கார நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் கடிதம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியொன்றின் தலைமையாசிரியர், மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுமாறு அப்பகுதியில் உள்ள சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் சாதிய அடையாளங்களுடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்வது, குறிப்பிட்ட நிறங்களில் உடை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்களிடம் சாதிச் சண்டைகள் நடப்பதும் அடிக்கடி அரங்கேறுகிறது. சில தினங்களுக்கு முன்பு, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் திருக்குறள் எழுதும் தண்டனை கொடுத்தார்கள்.

`பாவம், அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க!' - பள்ளிக் கல்வித்துறை அறிவித்து திரும்பப் பெற்ற 6 விஷயங்கள்!
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் சாதிய உணர்வுகள் மேலோங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.
சமூக ஆர்வலர்கள்

நல் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய கல்வி நிலையங்களிலேயே மாணவர்கள் சாதி வன்மத்துடன் செயல்படுவது கல்வியாளர்களைக் கவலையடைய வைத்திருக்கிறது.

பள்ளி மாணவர்கள் பலர் பாக்ஸ் கட்டிங், வி கட்டிங், ஸ்டைல் கட்டிங் உள்ளிட்ட வகைகளில் தலைமுடியை அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள். பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் சில அலங்காரத்துடன் பள்ளி மாணவர்கள் வருவது ஆசிரியர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாகப் பெற்றோரிடம் பேசியும் ஆசிரியர்களுக்கு முழு பலனும் கிடைக்கவில்லை.

Vikatan

அதனால் நெல்லை மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரான சீனிவாசன், அந்தப் பகுதியில் உள்ள சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பியிருக்கிறார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் விண்ணப்பம்’ என்ற பெயரில் தொடங்கும் அந்தக் கடிதத்தில், ’’மாணவர்களுக்கு ஒழுக்கத்தை மேம்படுத்துவது ஆசிரியர்களை மட்டும் சார்ந்த விஷயமல்ல. இதில் நம் சமூகத்துக்கும் தொடர்பு உள்ளது. அதில், சிகை அலங்கார நிபுணர்களாகிய நீங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றீர்கள். உங்களின் செயல்பாடே மாணவர்களின் அகத்தையும், புறத்தையும் அழகுறச் செய்கின்றது. உங்களுக்கு எம் ஆசிரியர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

தலைமை ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்
தலைமை ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்

ஓர் சிறு கோரிக்கை - பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல் கோடு போடுதல், BOX CUTTING, ONE SIDE, V CUT, SPIKE போன்றவற்றைத் தவிர்த்து பள்ளி சூழலுக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள், ஒற்றுமையோடு ஒன்றுபட்டு புதிய தேசத்தை உருவாக்குவோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் சீனிவாசனின் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அவருடைய இந்தக் கருத்தை வரவேற்றுள்ளனர். இது தொடர்பாகத் தலைமை ஆசிரியரான சீனிவாசனிடம் கேட்டதற்கு, ‘’நான் என் பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என விரும்புபவன். இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் இந்த அரசுப் பள்ளி, கடந்த மூன்று வருடங்களாக 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது.

மாணவர்களின் நல் ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தற்போது மாணவர்களிடம் முடி திருத்துவது தொடர்பாக ஸ்டைல் என்கிற பெயரில் புதிய மோகம் ஏற்பட்டுள்ளது. அது சமூகச் சிக்கலுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையில் சிகை அலங்கார நிபுணர்களுக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றினால் மகிழ்வேன்’’ என்று முடித்துக்கொண்டார்.