முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி வேண்டி கடந்த இரண்டு வருடங்களாகப் போராடிவருகிறார் கடலூர் மாவட்டம், கோண்டூரைச் சேர்ந்த திருநங்கை ரஷிதா சரத்குமார். இது தொடர்பாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மனு ஒன்றை அவர் அளித்திருக்கிறார்.

இளங்கலை வேதியியல் பட்டப் படிப்பை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், முதுகலை வேதியியல் பட்டப் படிப்பை புனித வளானர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் ரஷிதா சரத்குமார் படித்திருக்கிறார். இவர், இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் அவர், முனைவர் பட்டம் மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார். காரணம், அவரின் பாலினம்.
இது குறித்து நம்மிடம் அவர் வேதனையுடன் பேசினார். “முதுநிலைப் பட்டப்படிப்பு வரைக்கும் ஆண் என்ற பாலினப் பிரிவுலதான் படிச்சேன். திருநங்கையாக மாறுனதுல இருந்து நிறைய பிரச்னைகள். கடந்த ஆண்டே முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புக்காக விண்ணப்பிச்சேன். அப்போ, ஏன் திருநங்கையாக மாறுனீங்கனு நிறைய பேர் கேட்டாங்க. திருநங்கையா இருக்குறதால, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான வழிகாட்டியாக பேராசிரியர்கள் கிடைப்பது சிரமம்னு சொன்னாங்க. குறிப்பா, பல்கலைக்கழக சார்புத்துறையில அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு.

நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டையும் முடிச்சேன். ஆனாலும், எந்த ரெஸ்பான்ஸும் வரலை. அதுக்கப்புறம் நான் இளங்கலை, முதுகலை படித்த கல்லூரிகளிலும் முனைவர் பட்டத்தை மேற்கொள்ள முயன்றேன். அங்கேயும் நிராகரிச்சுட்டாங்க. இதனால, மனதளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன்.
திருநங்கையா இருக்குறதாலேயே எனக்கு இந்தப் பிரச்னை. அதனால, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நேரடியா பார்த்து மனு கொடுத்தன். மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்குறேன்னு துணைவேந்தர் ராம கதிரேசன் உறுதியளிச்சிருக்கார். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட என்னைப் போன்ற திருநங்கைகள், படிச்சு முன்னேற்றணும்னு விரும்புறோம். முனைவர் பட்டத்தை முடிச்சுட்டு கல்லூரிப் பேராசிரியராக வேண்டும் என்பது என் கனவு” என்று கண்கலங்கப் பேசி முடித்தார் ரஷிதா சரத்குமார்.

ரஷிதா சரத்குமார் உயர் கல்வி பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள், “ரஷிதா சரத்குமார் முனைவர் பட்டம் மேற்கொள்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் திருநங்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.