Published:Updated:

`இன்ஜினீயரிங் படிப்புகளில் ஆர்வம் குறைகிறதா?' - AISHE 2018-19 உணர்த்தும் உண்மை

தேசிய அளவில் உயர்கல்வி குறித்த ஆய்வு முடிவுகளான All India survey of higher education survey 2018-19 (AISHE 2018-19) வெளியிடப்பட்டிருக்கின்றன.

Students
Students ( Pixabay )

முதல்முறையாக மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, மாநில அரசுகள் உள்ளிட்டவையிடமிருந்து தகவல்களைச் சேகரித்து மிக விவரமான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

Students
Students

நாடு முழுவதும் 962 பல்கலைக்கழகங்கள், 38,179 கல்லூரிகள், 9,190 ஸ்டேண்ட் அலோன் கல்விநிறுவனங்கள் ஆகியவை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டேண்ட் அலோன் கல்வி நிறுவனங்கள் என்பவை டிப்ளோமா, பாராமெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளை வழங்குபவை. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சியை ஜி.இ.ஆர் (Gross enrollment Ratio) எனப்படும் அலகை வைத்தே உலக அளவில் பார்க்கிறார்கள். உயர்கல்வியில் ஜி.இ.ஆர் என்பது ஒரு நாட்டின் 18 முதல் 23 வயது வரை உள்ளவர்களின் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதோடு, அவர்களில் எத்தனை பேர் உயர்கல்வி பயிலுகிறார்கள் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. நமது நாட்டின் ஜி.இ.ஆர் என்பது 2014-2015ம் ஆண்டு கணக்கின்படி 24.3 சதவிகிதமாகவும் கடந்த 2017-18 ஆய்வில் 25.8 ஆக இருந்தது. இது தற்போது 26.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. முந்தைய ஆண்டைவிட 0.5 சதவிகிதம் உயர்வு கண்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்தில் இந்த விகிதம் தேசிய அளவை ஒப்பிடுகையில் எப்போதும் அதிகமாகவே இருக்கும். தமிழகத்தின் ஜி.இ.ஆர் விகிதம் 49 ஆகும். அதேபோல், பட்டியலின/பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் ஏறக்குறைய 4 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

Students
Students
Pixabay

தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக இளங்கலை, முதுகலை, ஆய்வு, முனைவர் பட்டப்படிப்புகள் என உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 3,74,00,000. இதில், இளங்கலை படிப்புகளைப் பயில்வோரின் எண்ணிக்கை 2,98,00,000. இளங்கலை பயில்வோரில் 51 சதவிகிதம் பேர் ஆண்கள், 49 சதவிகிதம் பேர் பெண்கள். தேசிய அளவில் அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் 3,443 கல்லூரிகளுடன் தமிழகம் 6வது இடம் வகிக்கிறது. அதேபோல், ஒரு லட்சம் பேருக்கு எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன என்ற விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடுகையில், அகில இந்தியாவில் இந்த விகிதம் 28 கல்லூரிகள் என்ற நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 35.

``பறையும் கரகமும்தான் என் துயரத்தைப் போக்கியது!” - நாட்டுப்புறக் கலை கற்பிக்கும் கல்லூரி மாணவர்

மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் துறைகளைப் பொறுத்தவரை முதுகலைப் படிப்புகளில், எம்.பி.ஏ (MBA), எம்.காம் (M.Com), எம்.எஸ்ஸி (M.Sc) உள்ளிட்ட படிப்புகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இளங்கலைப் படிப்புகளைப் பொறுத்தவரை இன்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவருகிறது. பி.இ (B.E), பி.டெக் (B.Tech) இரண்டு படிப்புகளையும் சேர்த்து தேசிய அளவில் கடந்த 2014-15ம் ஆண்டு 42.5 லட்சம் மாணவர்கள் பயின்று வந்தநிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 37.7 லட்சமாகச் சரிந்திருக்கிறது. இன்ஜினீயரிங் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்திருப்பதை இதன்மூலம் அறியலாம். அதேபோல், கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2014-15 ஆண்டுகளில் 98.6 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 2018-19ம் ஆண்டு 91.9 லட்சமாகக் குறைந்திருக்கிறது.

Students
Students
Pixabay

அதேபோல், இளங்கலை படிப்புகளில் சில பிரிவுகளில் சேர்வதற்கு மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாகக் கடந்த 2014-15ம் ஆண்டுகளில் பி.எட் பிரிவில் படித்தவர்களின் எண்ணிக்கை 6.5 லட்சமாக இருந்தநிலையில், அது, 2018-19ல் 11.7 லட்சமாக அதிகரித்திருக்கிறது. மேலும், நர்சிங் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2014-15ல் 1.7 லட்சமாக இருந்த எண்ணிக்கை இந்த ஆய்வில் 2.67 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

என்ன காரணம்?

இதுகுறித்து கல்வியாளர் `ஆனந்தம்' செல்வக்குமாரிடம் பேசினோம். ``இன்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு முடிவில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதைக் கடந்த 3 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம். அதேபோல், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வமும் மாணவர்களிடையே குறைந்திருக்கிறது. கடந்த 4, 5 ஆண்டுகளில் 7 லட்சம் என்ற அளவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் குறைந்திருக்கிறது.

`Anandam' Selvakumar
`Anandam' Selvakumar

இன்ஜினீயரிங் படிப்புகளைப் பொறுத்தவரை, அவற்றைப் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிரம்மை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்கள் தொழில்துறையோடு கைகோத்து, அந்தத் துறை எதிர்பார்க்கும் மாற்றங்களையும் நாம் இன்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இன்ஜினீயரிங் படிப்புகளில் மட்டும்தான் மாணவர்களின் ஆர்வம் குறைந்திருக்கிறது என்றால் கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்காதே? குறிப்பிட்ட துறையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள், அதற்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

`இனி ஆன்லைன் மூலமே விடைத்தாள் திருத்தம்!' -அமெரிக்கக் கல்வி நிறுவனங்களோடு கைகோக்கும் அண்ணா பல்கலை

ஜி.இ.ஆர் விகிதம் அதிகரித்திருக்கிறதே.. அப்படியென்றால் தேசிய அளவில் உயர்கல்வி மிகப்பெரிய அளவிலே வளர்ந்திருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பலாம். இந்தக் கேள்வியை நாம் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் 7,000 கல்லூரிகள் இருக்கின்றன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 3,500தான். ஆனால், உ.பியைவிட தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இதனால்தான், ஒரு நாட்டின் கல்வித் தரத்தை ஜி.இ.ஆர் விகிதம் அடிப்படையிலேயே கணக்கிடப்படக் கூடாது. எத்தனை லட்சம் பேர் படித்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் நாம் கல்வித் தரத்தைக் கணக்கிட முடியாது.

Graduation Cap
Graduation Cap
Pixabay

சமீபத்தில் நாம் கேட்ட செய்திகள் இரண்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் பல்கலைக்கழக மானியக்குழுவில் (UGC) பியூனாகப் பணியாற்றுவது மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் துப்புரவுப் பணியாளர் பணிக்கு பொறியியல், முதுகலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பித்தார்கள் என்ற செய்திகள்தான் அவை. அந்தப் பதவிக்கு 8ம் வகுப்புதான் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு

ஜி.இ.ஆர் விகிதத்தை மட்டுமே வைத்து கல்வித் தரத்தை மதிப்பிடக்கூடாது. குறிப்பிட்ட துறை எதிர்பார்க்கும் தகுதிகளுடன் மாணவர்கள் வெளியில் வருகிறார்களா? குறிப்பாக அவர்களால், தங்கள் துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறதா? ஆய்வுகளை மேற்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு பாடத்திட்டங்கள் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

Graduation
Graduation
Pixabay

இதையெல்லாம் தாண்டி, அவர்களின் வாழ்வுக்குத் தேவையான கல்வியை நமது கல்வி நிறுவனங்கள் பயிற்றுவிக்கின்றனவா என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் மனப்பாடம் செய்து அவற்றை தேர்வில் எழுதி வெற்றிபெறும் கல்வியாக இருந்தால், அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு நிச்சயம் உதவாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.