Published:Updated:

``எப்படியும் டாக்டராகிடுவேன்'னு அனிதா எழுதுன கடிதம் பத்திரமா இருக்கு!'' - சகோதரர் மணிரத்னம்

anitha
anitha

அனிதா நினைவு தினக் கட்டுரை...

"கிராமப்புற மாணவர்களுக்கு என்று இல்ல; ஏழை எளிய மாணவர்களுமே நீட் தேர்வு எழுதறது ரொம்ப கஷ்டம். எங்களுக்கு அதுக்கு தயாராவதற்கு வாய்ப்பும் இல்ல; வசதியுமில்ல. ப்ளஸ் டூ எங்கிருந்தாவது படிச்சிருவோம். நீட் தேர்வுக்கு எங்க ஊர்ல இருக்கிற ஏழை எளிய மக்கள் யாருமே அப்ளை பண்ணவே இல்லை. ஒண்ணு ரெண்டு எழுதினவங்களும் பாஸ் பண்ணல. அவங்க டேலன்ட்டான பசங்க. அவங்களாலும் பாஸ் பண்ண முடியல. வாய்ப்பு வசதியில்லாதவங்க எங்களுக்குக் கிடைச்சதை வெச்சி மேல வர்றதுக்கு பார்க்கிறோம். நீங்க புதுசு புதுசா அறிவிக்கிறது எங்களுக்குக் கஷ்டமா இருக்கு." - அனிதா
anitha
anitha

அனிதா தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் பேசியது இது. அதுவும் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுவதற்காக நம் நாட்டின் தலைநகர் புது டெல்லிக்குச் சென்றபோது வழங்கிய பேட்டியில் கூறியது. ஆம்! தம் சூழலை அல்லது தம்மைப் போன்றவர்களின் சமூகச் சூழலை இந்திய அரசின் உச்ச அதிகாரம் இருக்கும் இடத்திற்கே சென்று விளக்கியவர் அனிதா. சிறுவயது முதல் மனத்தில் ஏந்திய மிக மிக நியாயமான மருத்துவக் கனவை உலகின் கண்களின் முன் படையலிட்டவர். எங்கேனும் ஏதேனும் ஒரு வெளிச்சம் வந்து அந்தக் கனவை நிஜத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடாதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்தவர். ஆனால், எல்லாமும் கைவிட, மீளவே முடியாத இருட்டுக்குள் தன்னையும் தன் கனவையும் புதைத்துக்கொள்ளத்தான் முடிந்தது அனிதாவால். கல்வி அறிவு எந்த மாநிலத்தில் அதிகம் எனக் கணக்கெடுத்து பெருமை பேசும் இந்தச் சூழலில்தான், ஏழை ஒருவர் மருத்துவராக முடியாமல் தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படிக்க வேண்டியிருக்கிறது.

தன்னையும் தன் மருத்துவக் கனவையும் அந்தத் திறக்க முடியாத கதவுக்கு இரையாக அவர் அளித்து இன்றோடு இரண்டு ஆண்டுகளாயிற்று.
anitha
anitha

12-ம் வகுப்பு வரையில் தனக்குக் கிடைத்த கல்வியில் அடுத்த நிலைக்குப் போராடி, மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு நீட் எனும் அவரால் திறக்க முடியாத கதவுகள் வரும் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார். தன்னையும் தன் மருத்துவக் கனவையும் அந்தத் திறக்க முடியாத கதவுக்கு இரையாக அவர் அளித்து இன்றோடு இரண்டு ஆண்டுகளாயிற்று. ஒடுக்கப்பட்ட பின்னணியில் முட்டிமோதி முன்னுக்கு வர முயன்றவரின் இறுதிசுவாசம் நின்று இரண்டு ஆண்டுகளாயிற்று. நீட் தேர்வுக்கு எதிரான அடையாளமாக அனிதா மாறியும் இரண்டு ஆண்டுகளாயிற்று.

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த சண்முகம் - ஆனந்தி தம்பதிக்கு ஐந்து பிள்ளை. வீட்டின் ஒரே பெண் குழந்தை; அதுவும் கடைக்குட்டி செல்லமாக வளர்ந்த அனிதாவை இழந்திருப்பது அவரின் குடும்பத்தினருக்கு இன்னும் பெருஞ்சோகம். ஆனாலும், அனிதாவை தம் உறவின் இழப்பாக மட்டுமே கருதாமல், கல்வி விழிப்புணர்வின் குறியீடாக மாற்றுவதற்காக அனிதா பெயரில் நூலகம் அமைத்து பலருக்கும் வழிகாட்டி வருகின்றனர். அந்நூலகத்தை நடத்திவரும் அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்திடம் பேசினோம்.

anitha and manirathnam
anitha and manirathnam

"அனிதாவைப் `பாப்பா'னுதான் கூப்பிடுவோம். அவளுக்குச் சின்ன வயசிலேருந்தே படிப்பு, படிப்புதான். விளையாடக்கூட அதிகம் போகமாட்டா. அவளோட சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டதால, எப்படியாவது டாக்டராகணும்னு ஆசைப்பட்டா. எல்லாக் குழந்தைகளும் ஆசைப்படற மாதிரி நினைக்கலாம். ஆனா, அவ அதுக்காக சின்சியராகப் படிச்சா. பத்தாம் வகுப்புல 478 மார்க் வாங்கினா. அதிகமா மார்க் வாங்கினா ஊர்க்காரங்க சொல்லும் ஆலோசனை 'டாக்டருக்குப் படி' என்பதுதான். இப்படி ஊரே அவ டாக்டராகணும்னு ஆசைப்பட்டுச்சு. அதை நிறைவேத்தணும்னுதான் கஷ்டப்பட்டு படிச்சா.

'எப்படியும் டாக்டராகிடுவேன்'னு சொல்லியிருந்தா. இப்பக்கூட அந்தக் கடிதத்தைப் பத்திரமா வெச்சிருக்கேன்
மணிரத்னம்
anitha
anitha

எனக்கும் பாப்பாவுக்கும் ஒரு பழக்கம் இருந்துச்சு. நேர்ல பேச முடியாத மாதிரியான விஷயங்களை கடிதத்துல எழுதி அனுப்புவோம். என்னைப் பத்தி, நான் பின்பற்றும் கொள்கைகளைப் பற்றியெல்லாம் அவ கருத்தை கடிதமா எழுதியிருக்கா. அப்படித்தான் அவ ப்ளஸ் டூ படிக்கும்போது எனக்கு எழுதுன கடிதத்துல, 'எப்படியும் டாக்டராகிடுவேன்'னு சொல்லியிருந்தா. இப்பக்கூட அந்தக் கடிதத்தைப் பத்திரமா வெச்சிருக்கேன். அவ அவ்வளவு உறுதியா இருந்ததைப் பார்த்து, ப்ளஸ் டூ எக்ஸாமில் 1100 மார்க் வரைக்கும் எடுப்பான்னு நினைச்சேன். ஆனா, ரிசல்ட் வந்தப்ப, 1176 மார்க்கைப் பார்த்ததும் ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. ஆனா, உடனே நீட் எக்ஸாம் பற்றி நினைவு வந்ததும் ரொம்ப நேரம் சந்தோஷப்பட முடியல. ஏன்னா, பாப்பா எடுத்த மார்க்குக்கு நல்ல மெடிக்கல் காலேஜ்லேயே சீட் கிடைக்கும். ஆனா, நீட் எக்ஸாம் உண்டா, இல்லையான்னு குழப்பத்துல இருந்ததால் என்ன நடக்கும்னே தெரியல. அதனால, அவ கிட்ட, நீட் எக்ஸாம் பாஸ் பண்ணினாதான் முழு சந்தோஷப்பட முடியும்னு ஒருவழியா தேற்றி வெச்சிருந்தேன்.

அவ மனசுல டாக்டராகணும்ங்கிற விருப்பம் ரொம்ப ஆழமா பதிஞ்சிருந்திருக்கு. ஆனா, அதை நாங்க முழுசா புரிஞ்சிக்கலன்னு அவ தற்கொலை செஞ்சுகிட்டப்பதான் தெரிஞ்சுது.
மணிரத்னம்
anitha
anitha

அனிதா ப்ளஸ் டூ படிக்கும்போதே நீட் கோச்சிங் சேரச் சொல்லி சிலர் சொன்னாங்க. அதுக்கு நிறைய பணம் கட்டணும். பிறகு, அதுக்கும் சேர்த்துபடிக்கணும். இரண்டுக்கும் சேர்த்து படிக்கிறது கஷ்டம். வேணாம்னு சொல்லிட்டா. அந்தளவுக்கு தன்னை மட்டும் பார்க்காம, எங்க சூழ்நிலையையும் பார்த்துதான் முடிவெடுப்பா. இவ்வளவு மார்க் எடுத்தும் டாக்டராக முடியலைங்கிற வருத்தம் அவளுக்கு ரொம்பவே இருந்துச்சு. அதனாலதான் நீதிமன்றம் வரைக்கும் துணிச்சலா போனா. எல்லா முயற்சியும் எடுத்த பின்பும், எதுவும் நடக்கலன்னு ஆனதும் வேற படிப்பைப் படிக்க வைக்கலாம்னு முடிவுக்கு வந்தோம். ஆனா, அவ மனசுல டாக்டராகணும்ங்கிற விருப்பம் ரொம்ப ஆழமா பதிஞ்சிருந்திருக்கு. ஆனா, அதை நாங்க முழுசா புரிஞ்சிக்கலன்னு அவ தற்கொலை செஞ்சுகிட்டப்பதான் தெரிஞ்சுது." என்றவரின் குரல் தழு தழுக்கிறது.

"எங்க அம்மாவைப் பாத்துகிற மாதிரி அனிதாவைப் பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டோம். ஆனா, அது முடியாம போச்சு. கல்விங்கிறது மத்திய பட்டியல்ல இருக்கிற வரைக்கும் அனிதாக்களோடு கனவுகளை யாரும் கண்டுக்க மாட்டாங்க. அவங்கள பொறுத்தவரைக்கும் இந்த நாட்டுல உள்ள எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஒத்துக்கிடுச்சு. தமிழ்நாட்டைத் தவிர. அதனால மெஜாரிட்டி ஆதரவு இருக்கு. நம்மள கண்டுக்க மாட்டாங்க. ஒவ்வொரு மாநிலத்துக்கு தனிப் பிரச்னைகள் இருக்கிறதைப் போலவே, மக்களுக்கான விருப்பங்களும் இருக்கு. அதனால கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தா மட்டும்தான் நீட் தேர்வு நடைமுறையில மாற்றம் வரலாம்." என்கிறார் தீர்மானமாக.

anitha
anitha

அனிதாவின் நினைவுநாளை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று, குழுமூர் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகளை நடவிருப்பதாக மணிரத்னம் கூறுகிறார். கல்வி மட்டுமே எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்தெறியும் ஆயுதம் என, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு படித்து வரும் அனிதாக்களின் கனவுகளை இந்தச் சமூகமும் அரசும் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அனிதாவைத் தொடர்ந்து இன்னும் சில உயிர்கள் நீட் தேர்வை முன்னிட்டு பலியாகியுள்ளன. இனியும் இம்மாதிரியான கொடுமை நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டியது ஆள்வோரின் கடமை.

அடுத்த கட்டுரைக்கு