Published:Updated:

`எதுக்குமே டைம் தரமாட்டோம்' - அடாவடி அண்ணா பல்கலைக்கழகம்; வேதனையில் மாணவர்கள்; நடந்தது என்ன?

அண்ணா பல்கலைக்கழகம் | Anna University - chennai

தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கும், முடிவுகள் வருவதற்கும் கால அவகாசமே தராமல், அதையும் அரியராகச் சேர்த்து எழுத வைத்து மாணவர்களைத் தவிக்கவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

`எதுக்குமே டைம் தரமாட்டோம்' - அடாவடி அண்ணா பல்கலைக்கழகம்; வேதனையில் மாணவர்கள்; நடந்தது என்ன?

தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கும், முடிவுகள் வருவதற்கும் கால அவகாசமே தராமல், அதையும் அரியராகச் சேர்த்து எழுத வைத்து மாணவர்களைத் தவிக்கவைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

Published:Updated:
அண்ணா பல்கலைக்கழகம் | Anna University - chennai

இந்தியப் பிரதமரே நேரில் வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அளவிற்கு முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள், முதல் பருவத்தேர்வு முடிவில் (கடந்த ஜூலை மாதம் வெளியான தேர்வு முடிவுகள்) 38 சதவிகிதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது 100-க்கு 62 பேர் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்திலாவது தோல்வி அடைந்திருந்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உருவான சூழலே இந்த விளைவுகளுக்கான காரணம் என்ற கருத்துகளும் எழுந்தன.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்
Representational Image

இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தின் அண்மைச் செயல்பாடுகள்தான் பல்வேறு மாணவர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. 'சர்ச்சை எங்களுக்கென்ன புதிதா?' என்பதுபோல மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.

"ஜூலை மாதம் வெளியான தேர்வு முடிவிற்குப் பிறகு, தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வுத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசமே தராமல், அந்தத் தாள்களையும் அரியராகச் சேர்த்து எழுத வைத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்" என்ற தகவலைக் கேள்விப்பட்டு விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடையே பேசிய பெயர் சொல்ல விரும்பாத மாணவர்கள் மற்றும் விவரமறிந்த பேராசிரியர்கள் சிலர், "அண்ணா பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு தவிர்த்துப் பிற மாணவர்களுக்கு போனமுறை ஆன்லைன் (online) தேர்வு நடைபெற்றதால் பெரும்பாலான மாணவர்கள் அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். பொறியியல் முதலாம் ஆண்டு மற்றும் எம்.பி.ஏ/ எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு கடந்த நவம்பர் / டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அதை, நேரடி எழுத்துத் தேர்வாக (offline) அம்மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்தப் பருவத்தேர்வின் முடிவுகள்தான் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி வெளியாகியிருந்தது. இதில்தான், 100-க்கு 62 மாணவர்கள் ஏதேனும் ஒரு படத்திலாவது தோல்வியுற்றிருந்தனர்.

தேர்வு முடிவுகள் வெளியீடு...
தேர்வு முடிவுகள் வெளியீடு...
மாதிரிப் படம்

பொதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வு முடிவுகள் வெளியானதும்... தனக்கான மதிப்பெண்ணில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள் நகல்களைக் கட்டணம் செலுத்திப் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அவ்வாறு விண்ணப்பித்து விடைத்தாள் நகல்களைப் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர், `மறு மதிப்பீடு' செய்வதற்குக் கட்டணம் செலுத்தி மீண்டும் விண்ணப்பிப்பார்கள். பின் அந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும். அதில் சில மாணவர்களுக்கு மதிப்பெண் மாறியிருக்கும், சிலர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் அல்லது 'மாற்றம் ஏதுமில்லை' என முடிவுகள் வெளியாகும்.

இந்த முறை ஜூலை 1-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 6-ம் தேதி வரை விடைத்தாள் நகல்களைப் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதிலும் பல மாணவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாகவே 2-வது பருவத்தேர்வு ஜூலை 18-ம் தேதி தொடங்கும் என அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம். அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுவிட்டது. மாணவர்கள் விண்ணப்பித்திருந்த விடைத்தாள் நகல்கள் 16, 17-ம் தேதி போலத்தான் அந்தந்த உறுப்பு கல்லூரிகளுக்கே வந்த நிலையில், 18-ம் தேதி இரண்டாம் பருவத்தேர்வே தொடங்கிவிட்டது.

முதல் பருவத்தேர்வின் விடைத்தாள் நகல்களை வாங்கிப் பார்த்த மாணவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட பாடத்தையும் அரியராகச் சேர்த்து எழுதும்படி பணித்துவிட்டது அண்ணா பல்கலைக்கழகம். "விருப்பம் உள்ளவர்கள் மறுமதிப்பீட்டிற்கும் கட்டணம் செலுத்துங்கள், அதே பாடத்திற்கு அரியர் கட்டணத்தையும் செலுத்துங்கள்" என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு முடிவு வெளியாகும்போது சில மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ள நிலையில், அதற்கான கால அவகாசமே தராமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதோடு, அந்தப் பாடத்தை அரியராக எழுத வைத்துவிட்டது. இதனால் மாணவர்களின் டிஸ்டிங்ஷன் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

எந்த ஒரு வேலையையும் முறையான திட்டமிடலுடன் அண்ணா பல்கலைக்கழகம் செய்ய வேண்டும். நீண்ட நாள்களாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிமுறையை திடீரென மாற்றியமைக்கக் கூடாது. கொரோனாப் பெருந்தொற்று சமயத்தில் ஏற்பட்ட விடுமுறை நாள்களையெல்லாம் காரணம் காட்டி, விரைவாகப் பருவத் தேர்வை நடத்தி முடிப்பது மட்டுமே ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இருக்கக்கூடாது. மாணவர்களுக்கு சரியான கால இடைவெளியில் பாடத்தைப் பயிற்றுவித்துத் தேர்வை நடத்த வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஒருபோதும் விளையாடக்கூடாது" என்றனர் ஆதங்கமாக.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த விவகாரம் தொடர்பாக கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம். "மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இப்போது உள்ள சூழலில், மாணவர்களின் சேர்க்கை விகிதமும், வேலை வாய்ப்பும் மிகக்குறைவாக இருக்கின்றன. கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், உலக அளவில்தான் நாம் பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனநிலையே பெரும்பாலான ஆசிரியர்களிடம் இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. அதன் எதிர்வினைகள்தான் இவை. இப்போது மாணவர்கள் உள்ள இடத்தில் அவர்களுடைய பேராசிரியர்களை வைத்துப் பார்க்க வேண்டும், அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்று. அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அப்படியொரு விஷயத்தை மாணவர்களிடையே திணிக்கக்கூடாது. மாணவர்கள் தங்களுக்கான பிரச்னையை உயர்மட்ட அதிகாரிகள் வரை மேல்முறையீடு செய்வதற்கு ஒரு டிஜிட்டல் தளம் கட்டாயம் வேண்டும். உடன் புகார் தெரிவிக்கும் மாணவர்களின் விவரங்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பெரும்பாலான மாணவர்கள் பயத்தால் வெளியில் சொல்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே சொல்கிறார்கள், அதுவும் கடை நிலையோடு முடிந்துவிடுகிறது.

அதேபோல மாணவர்களுடைய புகார்கள் ஆவணமாக மாறும் போதுதான் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து நடக்கக் காரணம் என்ன என்பதை எளிதில் கண்டறிய முடியும். ஆகவே, இப்படியான ஒரு முறையை அரசு ஏற்படுத்தினால் இம்மாதிரியான பிரச்னைகள் வராது, மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதை உடனே அரசு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. பருவத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே பலமுறை சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியான பிரச்னைகள் தொடர்ந்து எழும்போது அதற்கு என்னதான் தீர்வு; இதுதான் தொடர்ந்து நடைபெறப் போகிறதா; எனவே, இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வுசெய்து சரி செய்ய வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம். " என்றார் அவர்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

இதுகுறித்து விளக்கம் கேட்க அண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டோம். "சார் மீட்டிங் போயிருக்காரு. நான் வேற செக்‌ஷன் ஆளு. லெட்டர் கொடுக்க இங்கே வந்திருக்கேன். எனக்கு எதுவும் தெரியாது" என்றார் அழைப்பை ஏற்ற நபர். பின், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமாரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டோம். "புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம். விவரங்களை அனுப்புங்கள், எக்ஸாமினேஷன் கண்ட்ரோலரைக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார். நாமும் விவரங்களை வாட்ஸப் மூலம் அனுப்பி வைத்தோம். அண்ணா பல்கலைக்கழக எக்ஸாமினேஷன் கண்ட்ரோலர் சக்திவேலிடம் பதிலைப் பெற்று நமக்கு அனுப்பி வைத்தார். அதில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடந்த ஆன்லைன் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்பது தவறு. 10% பேர் தேர்ச்சி பெறவில்லை.

எழுத்துத் தேர்வு எழுதியிருந்ததில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், இளநிலை மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் பயின்றவர்கள் என்பதாலும், அவர்கள் முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வினை எழுதுவதாலும் தேர்வு முடிவுகள் குறைவாக உள்ளன. எனினும், மாணவர்கள் வரும் பருவத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டங்களைப் பெறுவார்கள். மேலும், கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக முதலாம் ஆண்டில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக எழுத்துத்தேர்வு (offline) நடத்தப்பட்டது. மாணவர்களின் தேர்வு முடிவுகள் தரம் சார்ந்த நிர்ணய அமைப்பு (relative grading system) மூலம் வெளியிட வேண்டி இருந்தமையால் அவற்றை வெளியிடக் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஜூலை மாதம் முதல் நாள் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு விடைத்தாளின் நகல் பெறுவதற்கு நான்கு நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும், சில கல்லூரிகளில் பயின்ற மாணவர்களின் தகுதிச் சான்று (approval) காலதாமதமாகப் பெறப்பட்டதால், மாணவர்களுக்கு விடைத்தாளின் நகல் பெறும் நேரம் குறைந்தது. எனினும், விடைத்தாளின் நகலைப் பெற விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில், அடுத்த பருவத்தேர்வுகள் (இரண்டாம் பருவம்) ஆரம்பித்ததால் மறுமதிப்பீடு கேட்ட மாணவர்களின் வேண்டுகோள் தாமதமானது. எனவே, அவர்கள் தோல்வியுற்ற பாடங்களின் தேர்வுகளை எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பின், அம்மதிப்பீட்டில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க சரியான கால அவகாசம் அளிக்காமல், இரண்டாம் பருவத்தேர்வு தொடங்கும் நேரத்தில் விண்ணப்பிக்க வைத்து, அதன் முடிவுகள் வருவதற்குள் அந்தப் பாடத்தை அரியராக எழுதவைத்து மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதே தவறு எனும்போது... மறு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் கட்டணம் திருப்பித் தரப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் இதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள்..?