Published:Updated:

`ஜீரோ கல்வியாண்டு' முறையை ஏற்றுக்கொள்வீர்களா... உங்கள் கருத்து என்ன? #AvalVikatanPoll

School Students
School Students ( Photo: Vikatan / Balasubramanian.C )

கல்வியமைச்சர் பொதுத்தேர்வு நடக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஜீரோ கல்வியாண்டு என்கிற பேச்சை எதற்காக சமூகத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கொரோனா பயம் காரணமாக இன்னமும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஒருபக்கம் 2020-21 கல்வியாண்டை பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்ததாகத் தகவல் உலவிக்கொண்டிருந்த நேரத்தில், பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இரண்டில் எது நடக்கும் என்ற தெளிவில்லாத நிலையில், இதுதொடர்பாகத் தமிழ்நாட்டின் கமிஷனர் ஆஃப் ஸ்கூல் எஜுகேஷன் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் பேசியபோது, ``பொதுத்தேர்வு நடைபெறுமா அல்லது பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா என்பதை இன்னும் சில தினங்களில் கல்வியமைச்சர் அறிவிப்பார்’’ என்கிறார். கல்வியமைச்சர் செங்கோட்டையனிடம் செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும் பேச முடியவில்லை.

கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சர்

பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன, இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ள வேண்டிய சாதக, பாதகங்கள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

``ஜீரோ கல்வியாண்டு என்று அரசாங்கம் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கல்வியமைச்சர் பொதுத்தேர்வு நடக்கும் என்று அறிவித்திருக்கிறார். ஜீரோ கல்வியாண்டு என்ற பேச்சை எதற்காக சமூகத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே ஜீரோ கல்வியாண்டு என்று அறிவித்தார்களென்றால், தமிழ்நாட்டில் இருக்கிற சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவர்களின் நிலை என்ன? ஜீரோ கல்வியாண்டு என்றால், அந்தக் கல்வியாண்டில் கல்வி தொடர்பான எந்தச் செயல்பாடும் இல்லையென்று அர்த்தம். ஆனால், தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக் கட்டணம் வாங்கியது, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களைக் கொடுத்தது, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தியதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

ஒருவேளை ஜீரோ கல்வியாண்டு என்று அறிவிக்கப்பட்டால், 2020-2021 கல்வியாண்டில் ஒரு மாணவன் என்ன வகுப்பு படிக்கிறானோ அதே வகுப்பைத்தான் 2021-2022-ம் கல்வியாண்டிலும் படிப்பான். அப்படியென்றால், இந்தக் கல்வியாண்டில் பெற்றோரிடம் வாங்கிய கல்விக் கட்டணத்தை அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணமாக பள்ளிக்கூடங்கள் எடுத்துக் கொள்ளுமா?

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

கொரோனா பரவல் காரணமாகத்தான் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பொது இடங்களுக்கு பெரியவர்களும் குழந்தைகளும் கும்பல் கும்பலாகத்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள். மெரினா கடற்கரையைக்கூடத் திறந்துவிட்டுவிட்டார்கள். இங்கெல்லாம் வராத கொரோனா தொற்று, பள்ளிக்கூடங்களில் மட்டும் வருமா என்பதைப் பற்றி பொது சுகாதாரத்துறைதான் பதிலளிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஜீரோ கல்வியாண்டு என்பதை மக்கள் மத்தியில் உலவவிட்டு, மக்களின் கருத்தைத் தெரிந்துகொள்ளப் பார்க்கிறது அரசு, அவ்வளவுதான்’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு