Published:Updated:

` பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான் மகிழ்ச்சி!' - 20 ஆண்டுகளாக குழந்தைகளைத் தேடிச் செல்லும் பள்ளி

மும்பையில் சாலையோரம் வசித்துவரும் குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச்சென்று கல்வி கற்பித்து வருகிறார் பீனா லஷ்கரி.

Beena Lashkari
Beena Lashkari

மாற்றங்கள் நேர வேண்டுமெனில் அது தனி மனிதனிடமிருந்தே தொடங்க வேண்டும் என நமக்கெல்லாம் உணர்த்திச் சென்ற மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினம் இன்று. ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குமான மாற்றங்களை முன்னெடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிற மனிதர்கள் அரிது. பல குழந்தைகளின் வாழ்வில் அப்படியானதொரு மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவர்தான் மும்பையைச் சேர்ந்த பீனா லஷ்கரி.

Beena Lashkari
Beena Lashkari

கல்வி சென்று சேராத தெருவோரக் குழந்தைகளுக்கு நடமாடும் பள்ளிக்கூடங்களின் வழியாகக் கல்வியறிவைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பீனா. மும்பையின் சாலையோரப் பகுதிகளில் வசிக்கும் மனிதர்களின் தினசரி வாழ்வு அவ்வளவு எளிதானதல்ல. அன்றாடப் பணத் தேவைக்காகக் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் பெற்றோர்களால், தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான சூழலில் வளர வைப்பதிலோ அவர்களை பள்ளிக்கு அனுப்புவதிலோ கவனம் செலுத்த முடிவதில்லை. கல்வி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதன் விளைவாக நிறைய குழந்தைகளின் பயணம் திசைமாறியிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற முடிவெடுத்து, அதில் சாதித்துக் காட்டி பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் பீனா லஷ்கரி.

`அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்தேன்...ஆனால்?!’ - நீதிமன்றத்தை நாடிய 6 வயது மாணவியின் தந்தை

``இந்தியாவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்விகூட கிடைப்பதில்லை. பல குழந்தைகளின் பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப நினைத்தாலும் பொருளாதாரநிலை அன்றாட வாழ்வுக்காகக் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் அவலத்தில் அக்குழந்தைகளைக் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறது. குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன? பள்ளி, குழந்தைகளிடம் செல்லலாம்தானே! அதுமட்டுமல்லாமல் கல்வி பெறுவது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. 1998-ல் சிறு தொடக்கமாக ஒரு பேருந்தைக் கொண்டு நடமாடும் பள்ளிக்கூடத்தைச் செயல்படுத்தத் தொடங்கினோம். தற்போது எங்களிடம் 10 பேருந்துகள் உள்ளன. இவற்றின் வழியாக ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர்கள் இருக்குமிடத்துக்கே நேரடியாகச் சென்று கற்பித்து வருகிறோம்.

Beena Lashkari
Beena Lashkari

நாங்கள் மனித மாண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் முதலில் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறோம். அதற்குப் பின்புதான் எழுத, படிக்கச் சொல்லித் தருகிறோம். மேலும், மொழிக்கல்வி மற்றும் கணிதத்தையும் போதிக்கிறோம். மிகவும் சவாலாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் எங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைத் தருகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால், மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை தருவதில் இருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். என்னைப் போன்ற சாதாரணமான பெண்ணால் இது சாத்தியம் என்றால் எல்லோராலும் இதுபோன்ற செயல்கள் சாத்தியமே" என்கிறார் பீனா லஷ்கரி.

இவரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2013-ல் இவருக்கு ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருது அளித்து கெளரவப்படுத்தியுள்ளது.