Published:Updated:

பள்ளிக்கூடத்தின் மீது தேசத் துரோக வழக்கு! - சி.ஏ.ஏ எதிர்ப்பு நாடக அரங்கேற்றம் காரணமா?

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ ( Aishwarya G )

பள்ளிக்கூடத்தில் அண்மையில் நிகழ்ந்த விழா ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். நாடகத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

கர்நாடக மாநிலம் பிதார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது அந்த மாநிலக் காவல்துறை. கர்நாடக மாநிலம் பிதார் பகுதியில் உள்ளது ஷாகின் ஆலம் கல்வி நிறுவனங்கள். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தின் பள்ளிக்கூடத்தில் அண்மையில் நிகழ்ந்த விழா ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். நாடகத்தின் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

Anti CAA Protests
Anti CAA Protests
Representational image

நாடகம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இருந்ததாகவும் அதில் நடித்த மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வசனங்களைப் பேசியதாகவும் அதற்குப் பார்வையாளர்களில் இருந்த சில மாணவிகள் மோடிக்கு எதிராகக் குரலெழுப்பியதாகவும் நீலேஷ் ரக்‌ஷயளா என்பவர் பிதார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் தற்போது பள்ளிக்கூடத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பிதார் காவல்துறை.

இது குறித்துக் கூறும் பள்ளி நிர்வாகம், "நிகழ்வு நடந்து முடிந்தபிறகு, இரண்டு மூன்று நாள்களாகவே காவல்துறை எங்களது பள்ளியை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் பள்ளிக்கும் காவலர்கள் வந்தார்கள். பிள்ளைகளை விசாரணை செய்தார்கள். பிள்ளைகளைத் தேசத் துரோகிகள் போல் கேள்வி கேட்டார்கள்" என்று குற்றம்சாட்டுகிறது.

சி.ஏ.ஏ.
சி.ஏ.ஏ.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 504, 505(2), 124(A) மற்றும் 153 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் பள்ளிக்கூடத்தின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்துக் கூறும் பிதார் காவல்துறை, ``அந்தப் பள்ளியின் குழந்தைகளை சட்டத்தின் முறைப்படியே கேள்வி கேட்டோம். நாங்கள் எந்தப் பிள்ளைகளையும் துன்புறுத்தவில்லை. தவறான செய்தியைப் பள்ளி நிர்வாகம் பரப்புகிறது" என்று விளக்கமளித்தார்.

துன்புறுத்தவில்லை என்று பிதார் காவல்துறைக் கூறினாலும் சீருடை அணிந்தக் காவலர்கள் சிலர் அந்தப் பள்ளிக்கூடத்தில் சிறுவயதுப் பிள்ளைகளைக் கேள்வி எழுப்பும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு