Published:Updated:

``இப்போ நான் ஜீரோ... உசுப்பேத்துனவங்க ஹீரோ!'' - கண்ணீர் வடிக்கும் முன்னாள் `ரூட் தல’

அப்பா மாற்றுத்திறனாளி. கூலி வேலை செய்த என் தாயாரின் தயவினால்தான், நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது, அதை நான் உணரவில்லை.

முன்னாள் ரூட் தல
முன்னாள் ரூட் தல

சென்னையில் `பஸ் டே’ என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் அட்டூழியம் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. `நீ பெரியவனா... நான் பெரியவனா' என்று பேருந்தில் தொடங்கும் சண்டை, வெட்டுக்குத்தில் போய் முடிகிறது. சிலசமயத்தில், அரிவாளுடன் சாலைகளில் மாணவர்கள் ஓடுவதைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது.

பஸ் டே கொண்டாட்டம்
பஸ் டே கொண்டாட்டம்

சமீபத்தில் சென்னையில் பேருந்துக்குள் நுழைந்து, மற்றொரு `ரூட் தல'யை வெட்டிய சம்பவமும் அரங்கேறியது. மோதலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாணவர்களின் அட்டூழியம் அதிகரித்ததால், சென்னையில் `ரூட் தலை'களைக் கண்டறித்து, `தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என்று அவர்களிடம் போலீஸார் எழுத்துமூலம் உறுதிமொழி வாங்கினர்.

வயது வேகத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் உண்டு. பேருந்தைச் சேதப்படுத்திய வழக்கில் சிக்கினால், பல ஆண்டுகள் வழக்கு நடந்து கொண்டிருக்கும். இதுபோன்ற விஷயங்கள்`ரூட் தல’ என்ற பெயரில் செயல்படும் மாணவர்களுக்கு இப்போது தெரியாது. படிப்பை முடித்துவிட்டு ஒருபுறம் வேலை தேடிக்கொண்டே மறுபுறம் கோர்ட்டு, கேஸ் என்று அலையும்போதுதான் குற்றத்தின் விபரீதம் புரியும்.

பஸ் டே கொண்டாட்டம்
பஸ் டே கொண்டாட்டம்

தற்போது, போலீஸார் அட்டூழியம் செய்யும் மாணவர்களைத் திருத்த வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் `ரூட் தலை'களின் தற்போதைய வாழ்க்கை தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் முன்னாள் `ரூட் தல'யின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீர் கேன் சுமந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவர், தன் கண்ணீர் கதையை வீடியோவில் பரிதாபமாகக் கூறியுள்ளார்.

``பச்சையப்பன் கல்லூரியில்தான் நானும் படித்தேன். அம்பத்தூர்- மந்தவெளி செல்லும் 41டி பேருந்தில் என் ராஜ்யம்தான். அந்தப் பேருந்துக்கு நான்தான் ரூட் தல. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அப்போது அதுதான் கெத்து என்று நினைப்பேன். டிரைவர், கண்டக்டர் சொல்வதைக் கேட்க மாட்டோம்.

மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் எங்களிடம் மோதினால், அவர்களை அடித்து துவைத்து விடுவோம். என் அப்பா மாற்றுத்திறனாளி. கூலி வேலை செய்த தாயாரின் தயவினால்தான் நான் கல்லூரியில் படிக்கச் சேர்ந்தேன். அப்போது, அதை நான் உணரவில்லை. ஒருமுறை மற்ற மாணவர்களைத் தாக்கிய வழக்கில் போலீஸ் என்னைக் கைது செய்தது.

சிறையில் இருந்தபோது, என்னைச் சுற்றி இருந்தவர்களில் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. பெற்றோர்கள் மட்டுமே உதவினர். ஹீரோவாக வலம் வந்த எனக்கு உண்மை நிலவரம் புரிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தபிறகும் வழக்கு விடாமல் துரத்தியது. இதற்கிடையே, எனக்கு போலீஸ் வேலை கிடைத்தது. ஆனால், வழக்கு விசாரணையில் இருப்பதால், அந்த வேலையில் சேரமுடியவில்லை.

என்னை உசுப்பேத்தியவர்கள் யாரும் நான் கஷ்டப்பட்டபோது உதவிக்கு வரவில்லை. என்னை பூஜ்யமாக்கிவிட்டு அவர்கள் ஹீரோவாக இருக்கிறார்கள். இப்போது, தண்ணீர் கேன் போட்டு பிழைப்பை நடத்திவருகிறேன். நிச்சயமாக... இதை நான் அறிவுரையாகச் சொல்லவில்லை. `ரூட் தல'யாக செயல்பட்டு உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்''என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சென்னையில்தான் `பஸ் டே' என்ற பெயரில் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறுகின்றன. கேரளாவில் `பஸ் டே' அன்று டெப்போவுக்குச் சென்று, தங்களை தினமும் கல்லூரிக்கு சுமந்து செல்லும் பேருந்தை தூய்மைப்படுத்தி, டிரைவர், கண்டக்டர்களுக்கு மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.