Published:Updated:

`கலாம், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர்தான் எடுத்துக்காட்டு!' - திருச்சி சுட்டி விகடன் `இன்ஃபோ 200'

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

தமிழகம் முழுவதும் சுட்டி விகடன் நடத்திவரும் சுட்டி விகடன் `இன்ஃபோ 200’ எனும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுவின் 14 வது நிகழ்ச்சி நேற்று காலை திருச்சியில் நடைபெற்றது.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்

சுட்டி விகடன் வெளியிடும் ‘இன்ஃபோ 200’ இணைப்பு இதழ்களை மாணவர்களுக்கு வழங்கி நடத்தப்படும், போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வுகளை சுட்டிவிகடன் பிரமாண்டமாக நடத்திவருகிறது.

அரங்கம் நிறைந்த சுட்டிகள்
அரங்கம் நிறைந்த சுட்டிகள்

அந்த வகையில், சேலம், விருதுநகர், கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களைத் தொடர்ந்து திருச்சியில், திருச்சி மாவட்ட சிறப்புகள் குறித்து விளக்கும் இணைப்பிதழ்கள் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 118 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளிகளில் இணைப்பிதழைப் படித்து 13,000 மாணவர்கள் ஓ.எம்.ஆர் (OMR SHEET) முறையில் தேர்வு எழுதினர். அந்த மாணவர்களில், வெற்றிபெற்ற 1,400 மாணவர்களைக் கௌரவித்து பரிசளிப்பு விழா நேற்று காலை திருச்சி செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்தோடு காலை 7 மணியிலிருந்தே நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கை நோக்கிப் படையெடுத்ததால், அரங்கம் நிரம்பி வழிந்தது.

சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினர்கள்

சுட்டிவிகடன் முதன்மை பொறுப்பாசிரியர் கே.கணேசன், விகடன் குழுமம் விற்பனை பிரிவின் துறைத் தலைவர் சுந்தர் தியாகராஜன், சுட்டி ஸ்டார் திட்ட முதன்மை பயிற்சியாளர் ஹெலிக்ஸ் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்களான திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மருதநாயகம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

கலைக்காவிரி கல்லூரி மாணவியின் கலை நிகழ்ச்சி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பரலோகம் மற்றும் தாரிணி ஆகியோர் கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் பேசிய வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், “ஒவ்வொரு மாணவனும் நல்ல கல்வி பெறுவது மட்டுமல்லாமல், அவர் சார்ந்த மாவட்ட வரலாறு மற்றும் மண்ணின் பெருமை குறித்த தகவல்களை தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்களுக்கு பொது அறிவு மற்றும் வாசிப்பு பழக்கம் மிக மிக முக்கியமானது. தன்னம்பிக்கையுடைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இதற்கு எடுத்துக்காட்டுதான் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சுந்தர் பிச்சை போன்றவர்கள்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்

மாணவர்கள் கல்வியை மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் நல்ல மனிதராக உயர்ந்து நிற்க முடியும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களைப் பாராட்டுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என முடித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் சிலர், தங்களுக்கு தங்கள் மாவட்டங்களின் தகவல்களை கற்றுக்கொள்ள வழிவகுத்ததுடன், பிரமாண்டமான நிகழ்ச்சியில் தங்களை மேடையேற்றி கௌரவித்ததற்காக தாங்கள் எடுத்து வந்த பரிசுகளை சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுத்து கௌரவப்படுத்தினர். மாணவர்களின் மனங்களை சுட்டி விகடன் ‘இன்ஃபோ 200’ கொள்ளையடித்ததை இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர முடிந்தது.