Published:Updated:

`கல்லூரியில் ஒருநாள் விரிவுரையாளரான துப்புரவுத் தொழிலாளர் மல்லிகா!' - மாணவர்கள் நெகிழ்ச்சி

அந்த வகுப்பிலிருந்த மாணவர்கள் பெரும் அமைதியுடன் மல்லிகாவின் வகுப்பைக் கவனித்தனர்

மல்லிகா
மல்லிகா

கல்லூரியின் துப்புரவுத் தொழிலாளர் மல்லிகாவை அழைத்து வந்து தன்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையாளராக அறிமுகப்படுத்தி வகுப்பெடுக்க வைத்துள்ளார் லயோலா கல்லூரி பேராசிரியர் அருள் சுரேஷ்.

வணிகவியல் மாணவர்களுக்கு ``மனிதவள மேம்பாட்டு நடைமுறை" (HR Practice) என்றொரு வகுப்பு நடக்கும். தொழிலாளர்களின் பணி மற்றும் அனுபவங்கள் குறித்து நடத்தப்படும் அந்த வகுப்பில், ஒரு தொழிலாளியே தன்னுடைய அனுபவத்தை மாணவர்களிடம் விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய அருள் சுரேஷ், துப்புரவுப் பணியாற்றும் மல்லிகாவை அழைத்து வந்து விரிவுரை வழங்க வைத்துள்ளார்.

மல்லிகாவுடன் பேராசிரியர் அருள் சுரேஷ்
மல்லிகாவுடன் பேராசிரியர் அருள் சுரேஷ்

மாணவர்களிடம் விரிவுரையாற்றத் துவங்கிய மல்லிகா,``எல்லா வேலைலயும் அந்த வேலைக்கான கடமையோட சேர்ந்து சிரமமும் இருக்கும். ஆனா, எங்க வேலைல மட்டும்தான் சிரமமும் மனவலியும் சேர்ந்து இருக்கும். பாத்ரூமை சுத்தம் செய்றதுக்கு முன்னாடி ஆசிட் ஊத்தி அரை மணி நேரம் காத்திருக்கணும். இல்லாட்டி அந்த நெடி தலைக்கேறி மயக்கம் வந்துரும். சொந்த வேலை வந்தாக்கூட வேலைய பாதியில விட்டுட்டுப் போக முடியாது. ஓய்வெடுக்கவும் முடியாது. எல்லா மனுஷங்களைப் போலதான் நாங்களும்... ஆனா மத்தவங்களுக்குக் கிடைக்கிற மரியாதையும் அங்கீகாரமும் எங்களுக்குக் கிடைக்கறதில்ல. எங்களை மாதிரி துப்புரவுத் தொழிலாளிங்க ரொம்ப பேரு நோயினால் பாதிக்கப்பட்டு கொஞ்ச வயசுல செத்துருவாங்க. பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யுறப்போ ரொம்ப பேரு விஷவாயு தாக்கி செத்துப்போயிட்டதா கேள்விப்படறப்பலாம் மனசு கெடந்து தவிக்கும்" என மாணவர்களிடையே தன் வேலை குறித்து உரையாடிய மல்லிகா 5-ம் வகுப்புவரை படித்தவர்.

இதுகுறித்து பேராசிரியர் அருள் சுரேஷிடம் பேசினோம். ``பொதுவாகவே இதுபோன்ற ஹெச்.ஆர்.எம் வகுப்புகளில் பேசுவதற்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த முதலாளிகளை அல்லது உயர் அதிகாரிகளை அழைப்பதுதான் வழக்கம். ஆனால், அவர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டுக்கொடுக்காமலும் உயர்த்தியும்தான் பேசுவார்கள். தொழிலாளர்களின் நிலை குறித்தான முழுமையான தகவல்களை அவர்களிடம் எதிர்பார்ப்பது கடினம்.

மல்லிகா
மல்லிகா

நேரடியாக ஒரு துப்புரவுத் தொழிலாளரையே அழைத்து வந்து விரிவுரை வழங்க வைப்பதன் மூலம் மாணவர்களுக்கு அவர்களைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் ஏற்படும். தங்களுடைய கற்றலுக்கு அது பெரிதும் கைகொடுக்கும் என நம்பினேன். அதுபோலவே மாணவர்கள் மத்தியில் இது புதிய அனுபவத்தையும் அவர்களைப் பற்றிய புதிய சிந்தனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியதை நேரடியாக உணர முடிந்தது" என்றார். அந்த வகுப்பிலிருந்த மாணவர்கள் பெரும் அமைதியுடன் மல்லிகாவின் வகுப்பைக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.