Published:Updated:

கோவை: `கரன்ட் வசதியே இல்ல... அப்புறம் எங்க ஆன்லைன்?' - கலங்கும் பழங்குடி மாணவர்கள்

பழங்குடி குழந்தைகள்
பழங்குடி குழந்தைகள்

மின்சாரமே இல்லாத கோவை பழங்குடி கிராமங்களில் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போனும் தொலைக்காட்சியும் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவும், அதற்காகப் போடப்பட்ட ஊரடங்கும் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. அதில் இருந்து மீள்வதற்கு அனைத்துத் துறைகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக, கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில் வகுப்பு எடுத்து வருகின்றனர். தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்
பேருந்துக்கு 8 கி.மீ பயணம்; 95 சதவிகித மதிப்பெண்! - கேரளாவில் சாதித்த தமிழக மாணவி

ஆனால், மின்சாரமே இல்லாத கோவை பழங்குடி கிராமங்களில் உள்ள குழந்தைகள் ஸ்மார்ட்போனும் தொலைக்காட்சியும் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவடடம், பொள்ளாச்சி ஆழியாறு அருகே அன்பு நகர் மற்றும் எல்லப்ப காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் மலசர் மற்றும் எரவாளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள். இவர்கள் அனைவரும் ஆழியாறு அணை கட்டப்படும்போது, தங்களது விளைநிலத்தை அப்போதைய முதல்வர் காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க அரசுக்கு கொடுத்துள்ளனர்.

பழங்குடி கிராமம்
பழங்குடி கிராமம்

ஆனால், அவர்கள் குடியிருக்க உரிய நிலத்தை அரசு ஒதுக்கிக் கொடுக்காததால் பொதுப்பணித்துறை நிலத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களிலேயே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்குச் சென்றுவிட்டன. இதனிடையே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 13-ம் தேதி முதல் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். அதேபோல, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லேப் டாப்பில் ஆகஸ்ட் மாதம் வரையான பாடத்தை பென் டிரைவில் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடி குழந்தைகள்
பழங்குடி குழந்தைகள்

இந்நிலையில் ஆழியாறு அன்பு நகர் மற்றும் எல்லப்ப நகரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழியாறு அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் லேப்டாப், போன் போன்ற எந்த வசதியும் இல்லாததால் விளையாடிக்கொண்டிருகின்றனர்.

அன்புநகரைச் சேர்ந்த பிரவீன், ``நான் 9-வது முடிஞ்சு, 10-ம் கிளாஸ் போறேன். அப்பா, அம்மா காட்டு வேலைக்கு போறாங்க. ஆன்லைன், டி.வி மூலமா படிங்கனு சொல்றாங்க. இங்க அந்த வசதி எல்லாம் இல்ல. ஸ்கூல் நடந்துட்டு இருந்தப்பவே, மெழுகுவத்தி வெளிச்சத்துலதான் படிச்சுட்டு இருந்தோம். நாங்க படிக்கணும். அதுக்கு அரசு உதவி பண்ணனும்” என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, ``எந்த வசதியும் இல்லாததால நாங்க எல்லாம் படிக்க முடியாம, காட்டு வேலைக்கு போய்ட்டு இருக்கோம். எங்க பசங்களும் சகோதரர்களும் நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்னு நினைச்சோம். ஆனா, இப்போ அதுக்கும் வழியில்லாம போகிடுச்சு. எப்படியாச்சு எங்க குழந்தைங்க படிக்க அரசு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

நீலகிரி: காப்பி நாற்று உற்பத்தி! - பொது முடக்கத்தில் அசத்தும் பழங்குடி இனப் பெண்கள்

10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும் அருண்குமார், “ஸ்மார்ட்போன், டி.வி-க்கு எல்லாம் இங்க வழி இல்ல. ஸ்கூல்ல வந்து ஜெராக்ஸ் எடுத்து படிங்கனு சொல்றாங்க. எங்க ஏரியால கரன்டே இல்ல. அப்படியே புஸ்தகத்தை ஜெராக்ஸ் எடுத்தாலும், பாடத்த யார் சொல்லி கொடுப்பாங்க? அரசுதான் எப்படியாச்சு எங்களுக்கு பாடம் எடுக்கணும்” என்றார்.

அருண்குமார்
அருண்குமார்

அன்புநகர் மற்றும் எல்லப்ப காலனியில் மட்டுமல்ல பொள்ளாச்சி மற்றும் வால்பாறை அருகே, ஆனைமலை புலிகள் காப்பக சுற்று வட்டாரங்களில் உள்ள அனைத்து பழங்குடி குடியிருப்புகளிலும் கிட்டத்தட்ட இதேநிலைதான் நிலவுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பூச்சிக் கொட்டாம்பாறை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீதேவி, தமிழகத்தில் படிக்க முடியாமல், கேரளாவுக்கு சென்று படித்து 10-ம் வகுப்புத் தேர்வில் 95 சதவிகிதம் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். உண்மையில், சராசரி மனிதர்களைப் போல, பழங்குடிகளாலும் கல்வியில் சாதனை படிக்க முடியும் என்பதற்கு ஶ்ரீதேவி ஓர் உதாரணம். அதேநேரத்தில், சராசரி குழந்தைகளுக்குக் கிடைக்கும் அடிப்படை வசதிகள்கூட பழங்குடி குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.

பழங்குடி கிராமம்
பழங்குடி கிராமம்

எனவே, அரசாங்கம் பழங்குடி மக்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``அங்கு மின்சாரம் கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதேபோல, பழங்குடி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியரை நியமித்து, வகுப்பு எடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு