Published:Updated:

54 பணியிடங்களுக்கு ரூ.45 லட்சம் பேரம்?! - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bharathidasan University
bharathidasan University

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத், கடந்த 28-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், 29.8.2019 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகப் பிரதான கட்டடத்தில் உள்ள கலை அரங்கத்தில் சிறப்பு ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ராஜகோபால் கலந்து கொள்ளவிருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `கூட்டத்தில் கலந்துகொள்ளும் பல்கலைக்கழகத் துறைத்தலைவர்கள், முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம் அவர் ஆலோசனை செய்யவிருக்கிறார். இதனால் பல்கலைக்கழகப் பேராசிரியர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அழகான ஆடை அணிந்து வர வேண்டும்' எனவும் தெரியப்படுத்தியிருந்தார்.

circular
circular

இந்தச் சுற்றறிக்கை, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி தனக்குத் தெரியாமல் நடப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

ஆளுநர் செயலரின் ஆய்வு குறித்து பல்கலைக்கழகப் ஆசிரியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் பாண்டியனிடம் பேசினோம். ” இது மரபை மீறிய செயல். இப்படியான நடைமுறைகள் இதுவரை இருந்தது இல்லை. ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். இது கௌரவ பதவியே தவிர, அவரால் பல்கலைக்கழக விவகாரங்களில் நேரடியாக தலையிட முடியாது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், இது அடையாள பதவிதான். ஆளுநரே பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது என்கிறபோது, ஆளுநரின் செயலாளர், எப்படி பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியும். அதுவும் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் நேரடியாக ஆலோசனை செய்கிறாராம்.

54 பணியிடங்களுக்கு ரூ.45 லட்சம் பேரம்?! - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

சுற்றறிக்கையில் இந்தக் கூட்டம் எதற்காக நடக்கிறது என்றுகூட குறிப்பிடவில்லை. இப்போது, புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் என்கிறார்கள். கூட்டத்துக்கான காரணம் சொல்லாமல், ரகசியமாக நடத்துவதுதான் அவசியம் என்ன... பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மணிசங்கர், ஆளுநர் அலுவலக அதிகாரிகளின் துணையுடன் செய்யும் சட்ட விரோதமான செயலாகவே இதனை நினைக்கத் தோன்றுகிறது.

கடந்த ஜூலை மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட 54 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு 2000 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், ஆளுநர் அலுவலகம், தங்களுக்குச் சாதகமான நபர்களைத் தேர்வு செய்ய, ரகசியக் கூட்டம் நடத்துவதாகச் சந்தேகப்பட வேண்டியுள்ளது" என்றார்.

இது குறித்து பல்கலைக்கழகப் பணியாளர்களிடம் கேட்ட போது, ``பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும், தற்காலிகப் பணியாளர்கள் 64 பேரை நிரந்தரமாக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அதேபோல் 54 பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விவகாரங்களில் பணம் பார்ப்பதற்கான வேலைகளில் சிலர் இறங்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பதவியைப் பொறுத்து, இடஒதுக்கீடு அடிப்படையில் 25 லட்சம் முதல் 45 லட்சம் வரை பேரம் நடக்கிறது” எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

பேராசிரியர்கள் தேர்வு, தற்காலிக பணியாளர்கள் தேர்வு ஆகியவற்றில் ஆளுநர் அலுவலக தலையீடு இருப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
துணைவேந்தர் மணிசங்கர்

இந்நிலையில் மாலை 6 மணிக்கு நடப்பதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக் கூட்டம் தொடர்பான சுற்றறிக்கை தனக்குத் தெரியாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டு விட்டதாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ராஜகோபால் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆய்வு சர்ச்சை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கரிடம் பேசினோம்.

`` பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆளுநர் என்கிற முறையில் அவர்களுக்கான பணியை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதில் மரபு மீறல் எங்கே வந்தது. ஆளுநரின் கூடுதல் முதன்மை செயலாளர் திருச்சிக்கு வேறொரு நிகழ்ச்சிக்காக வருவதாகக் கூறியிருந்தார். அவருக்கு நேரமிருந்தால் பல்கலைக்கழகம் வருவதாக சொல்லியிருந்ததாலும், அவர் தெரிவித்த நேரம் மாலை நேரம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பல்கலைகழக பணியாளர்களை உஷார் படுத்தும்விதமாக சுற்றறிக்கை வெளியிட்டோம்.

அதை இந்தளவுக்குப் பெரிதாக்குவார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதன் பின்னணி குறித்து தெரியவில்லை. பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேர்வு, தற்காலிக பணியாளர்கள் தேர்வு ஆகியவற்றில் ஆளுநர் அலுவலக தலையீடு இருப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பல்கலைக்கழகத்துக்கு எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். அந்தவகையில், திருச்சிக்கு வரப் போகும் ஆளுநரின் கூடுதல் முதன்மை செயலாளரை அழைத்தோமே தவிர மற்ற எந்தவித காரணங்களும் இல்லை. நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்"என்றார் உறுதியாக.