Published:Updated:

ப்ளஸ் டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட், சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கனவாகும் உயர்கல்வி, கருணைகாட்டுமா அரசு?

தனலட்சுமி
தனலட்சுமி

விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசினர் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் தனலட்சுமி. ஆனால், சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பை தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

``எங்க ஜனங்ககிட்ட காசு பணம் கிடையாது. 100 ரூபாய் சம்பாதிக்க மணிக்கணக்குல கூலி வேலை செய்யணும். மூணு வேளை சாப்பாடு கிடைச்சா அதுதான் எங்களுக்கு நிறைவான நாளு. இந்த நிலைமை எங்க தலைமுறையிலயாவது மாறணும். அதுக்கு எங்ககிட்ட இருக்க ஒரே நம்பிக்கை படிப்பு மட்டும்தான். புறக்கணிப்புகள், கேலி, கிண்டல்கள்னு எத்தனையோ தடைகளைத் தாண்டிவந்துட்டேன். இப்போ சாதிச் சான்றிதழ் என் படிப்புக்கு தடையா இருக்கு. 10 வருஷமா போராடிட்டு இருக்கேன். படிப்புக்காக இன்னும் எத்தனை வருஷம் போராடவும் தயார்" - தனலட்சுமியின் வார்த்தைகளில் அவ்வளவு உறுதி.

குடும்பத்துடன் தனலட்சுமி
குடும்பத்துடன் தனலட்சுமி

விழுப்புரம் மாவட்டம், பரங்கினி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 / 500-க்கு மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றவர். ப்ளஸ் டூ பொதுத்தேர்விலும் 354/600 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசினர் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். சாதிச்சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பைத் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ள நிலையில், சாதிச்சான்றிதழ் பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் தனலட்சுமியிடம் பேசினோம்.

``அம்மா, அப்பா ரெண்டு பேரும் கூலி வேலை செய்றாங்க. கூடப்பிறந்தவங்க ரெண்டு அக்காங்க. நல்லா படிப்பாங்க. குடும்ப சூழ்நிலை. நல்ல மார்க் எடுத்தும், சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் படிக்க வைக்க முடியல. ப்ளஸ்டூவுக்குப் பிறகு கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டோம். எனக்கு காலேஜ் போய் படிக்கணுங்கிறது கனவு. ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வீட்டுல சொல்லிட்டே இருப்பேன். எங்க குடிசையில புத்தகம் வைக்க கூட இடம் கிடையாது. மழை வந்தா புத்தகம் முழுக்க நனைச்சு போயிரும்னு துணியை வெச்சு மூட்டை கட்டி, குடை பிடிச்சுட்டு உட்கார்ந்திருப்பேன்.

இருளர் குடியிருப்பு மக்கள்
இருளர் குடியிருப்பு மக்கள்

பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தேன். என் ஜாதி பெயரை சொல்லி கிண்டல் பண்ணவங்ககூட கைகொடுத்து பாராட்டுனாங்க. சாதிச்சான்றிதழ் இருந்தாதான் அடுத்து படிக்க முடியும்... ஆனா, வாங்க முடியலே... மத்தவங்களைவிட நாங்க 25 வருஷம் பின்தங்கி இருக்கோம். எந்த அடிப்படை வசதியும் இல்லாம, முன்னேறி வர்ற மக்களை கைதூக்கிவிட, சலுகைகள் கொடுத்து உதவுங்கனுதான் சொல்றோம். இடஒதுக்கீடு வேணாம்னு போராடுறவங்க எங்க வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பாருங்க..." கண்ணீர் கசிய அமைதியாகிறார் தனலட்சுமி.

``ப்ளஸ் டூ தொடக்கத்துலிருந்தே, அடுத்த வருஷம் காலேஜ் சேர்த்து விடணும்னு வீட்டில் சொல்லிட்டே இருப்பேன். நல்ல மார்க் எடுத்தாதான் என் ஆசையை எல்லாரும் காது கொடுத்து கேட்பாங்கனு தெரியும். அதுக்காக ராப்பகலா படிச்சேன். பன்னிரண்டாம் வகுப்புலயும் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் நான்தான்.

எங்க குடியிருப்பிலிருந்து இதுவரை யாருமே காலேஜ் போனது இல்ல. அதுனால எங்க வீட்டுலயும். ``காலேஜ் படிப்பெல்லாம் படிச்சு என்ன பண்ணப்போறே"னுதான் கேட்டாங்க. சாப்பிடாம கெடந்து, அழுது அடம்பிடிச்சுதான் சம்மதிக்க வெச்சேன். நான் அழுத அழுகையில, ``மூணுவேளை சாப்பாடு இல்லைனாலும், உன்ன நான் படிக்க வைக்கிறேன்"னு அப்பா சொன்னாங்க. ஆனா, இப்போ அந்த ஆசை கனவா போயிருமோன்னு பயமா இருக்கு.

எனக்கு B.Sc மேத்ஸ் படிக்கணும்னு ஆசை. பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்ததும் சில காலேஜ்களுக்கு அப்ளிகேஷன் வாங்குனேன். சாதிச்சான்றிதழ் இருந்தா ஃபீஸ் கம்மியா இருக்கும். அரசாங்கம் கொடுக்குற சலுகைகள் கிடைக்கும். கட்டணமே இல்லாம படிக்கிற மாதிரி அரசாங்க காலேஜ்லகூட சீட் கிடைக்கும்னு சொன்னாங்க. ஆனா, என்கிட்ட சாதிச்சான்றிதழ் இல்ல. பெத்தவங்களுக்கு என்ன படிக்க வைக்குற அளவு வசதி இருந்தா, சாதியும் வேணாம், சான்றிதழும் வேணாம்னு போகலாம். விடிஞ்சு எந்திரிச்சா சோத்துக்கு வழிதேடுற, நிலைமையில இருக்கும்போது, அரசாங்கத்தை நம்புறதைவிட வேற வழிதெரியல.

தனலட்சுமி
தனலட்சுமி

10 வருஷமா சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிட்டு இருக்கேன். எங்கெங்கோ மனு கொடுத்தாச்சு. விடிவு பொறந்தபாடில்ல. அதுக்கு காரணம், எஸ்.டினு சொல்லி நிறைய பேர் சான்றிதழ் வாங்கி அரசோட சலுகைகளை அனுபவிக்கிறாங்க. அதனால் உண்மையான பழங்குடி மக்கள்கூட சாதிச்சான்றிதழ் கிடைக்க பலவருஷம் போராட வேண்டியிருக்கு. அரசாங்கத்திலிருந்து சில முறை வந்து விசாரணை பண்ணிட்டும் போனாங்க. இன்னும் சான்றிதழ் கிடைச்ச பாடில்ல. அரசாங்கம் கொடுக்குற சலுகைகளை எங்களோட உரிமையாகத்தான் பார்க்கிறேன். உரிமைக்காகப் போராடுறதில் என்ன தப்பு இருக்கு" என்ற தனலட்சுமி, வருவாய் அலுவலருக்கு எழுதிய கடிதத்தின் நகலை காட்டியபடியே பேச ஆரம்பிக்கிறார்.

``எங்க தாத்தா சாதிச்சான்றிதழில் `இந்து இருளர்’னு இருக்கு. ஆனா, எனக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கல. இப்போ இறுதி முயற்சியா பேராசிரியர் கல்யாணி அய்யா வழிகாட்டுதலோட வருவாய் அலுவலருக்கு, `நான் இந்து இருளர்தான்’னு உறுதி செய்யக்கூடிய 14 ஆதாரங்களை இணைச்சு கடிதம் அனுப்பிருக்கேன். விடிவு காலம் பொறக்குதான்னு பார்ப்போம்.

``குழந்தைகளுக்குப் பழைய சாப்பாடுகூட கொடுக்க முடியாம தவிக்கிறோம்!”-கவலையில் இருளர் மக்கள்

படிக்கணும்னு மனசு முழுக்க கனவும், ஆசையும் நிறைய இருக்கு. நான் படிக்கிறது என் தலைமுறைக்கான மாற்றமா நிச்சயம் இருக்கும். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வெச்சு காத்திருக்கிறேன். மாற்றம் நிகழும்" - புன்னகை சிந்தி விடைபெறுகிறார் தனலட்சுமி.

இது தொடர்பாக இருளர் பழங்குடி மக்களுக்கு உதவி புரியும் சமூக ஆர்வலர் ராஜேஷிடம் பேசினோம். ``தனலட்சுமி இவ்ளோ மார்க் எடுத்துருப்பதே அந்தக் குடியிருப்புக்கான வெளிச்சம்தான். தனலட்சுமி காலேஜ் போயிருச்சுனா நிச்சயமா நிறைய பிள்ளைகளின் கல்விக்கான ஆரம்பமாக இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா, 'ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் எடுத்த அந்தப் புள்ளையே இப்ப பாத்திரம்தான் தேய்க்குதுனு நீ படிச்சு என்ன பண்ணபோறேன்'ங்கிற கேள்வியை நிச்சயமாக எல்லாப் பிள்ளைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லா முயற்சிகளும் எடுத்துருக்கோம். தனலட்சுமிக்கு உதவக்கூடிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கு" என்கிறார் ராஜேஷ்.

அடுத்த கட்டுரைக்கு