Published:Updated:

`அடம்பிடிங்க... ஆர்ப்பாட்டம் செய்யுங்க!'- இன்ஃபோ புக் 200 நிகழ்வில் சுட்டிகளுக்கு எஸ்.பி அட்வைஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல் இன்ஃபோ 200 வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்க்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

மாணவர்கள், அவர்கள் வாழும் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக `ஊரைத் தெரிஞ்சுகிட்டோம் இன்ஃபோ புக் 200' என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து வருகிறது சுட்டி விகடன். பள்ளிகளில் கொடுக்கப்படும் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகளைத் தயாரித்து, பள்ளிகளில் ஒரு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தைப் பற்றிய தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவப்படுத்தும் விழா, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர், ''மாணவர்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களைத் தாண்டி, செய்தித்தாள்கள், புத்தகங்கள் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். அதன் மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் இடத்தைப் பற்றிய தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுக்கான குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு, அதை நோக்கிப் பயணப்பட வேண்டும். அறிவு ஒன்றுதான் மிகப்பெரிய சொத்து. எனவே, அறிவை வளர்த்துக்கொள்ளத் திட்டமிடுங்கள்.

தமிழ் மொழியுடன் இன்னும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த வயதில் ஆர்வமுடன் ஈடுபட்டாலே வாழ்வில் சிறந்த இடத்தை அடையலாம்'' என்றார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அப்போது ஆட்சியருடன் மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

தொடர்ந்து பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தனி அலுவலர் கிருஷ்ணன், ''மதிப்பெண் மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது. படிப்பு என்பதே பாடப்புத்தகத்துடன் வாழ்க்கையை, சமூகத்தைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. இன்றைக்குக் கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநில மாணவர்கள் அனைத்து அரசுத்துறை தேர்வுகளிலும் வெற்றி பெறுகிறார்கள். காரணம் அவர்கள் மதிப்பெண்ணை முன்வைத்துப் படிப்பதில்லை. மாறாகப் பொது அறிவையும் உலக அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். தமிழக மாணவர்களும் அப்படி பாடத்துடன் சேர்த்து அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேசும்போது, ''மாணவர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. முன்பு இருந்ததைவிட தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும், சாலை விபத்து இல்லாத மாவட்டமாகத் திண்டுக்கல் மாற வேண்டும். மாணவர்கள் நினைத்தால் இது சாத்தியமாகும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

எஸ்.பி. சக்திவேல்
எஸ்.பி. சக்திவேல்

எதற்கெல்லாமோ பெற்றோரிடம் அடம்பிடிக்கிறீர்கள். இனி மேலும் ஒரு விஷயத்துக்காக அடம் பிடியுங்கள். அப்பா, அம்மா அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றால், கட்டாயம் ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்ல வேண்டும் எனச் சொல்லுங்கள். அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றால் அடம்பிடியுங்கள். அழுது, ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் கவனமாகச் செய்யுங்கள். உங்களுக்கு அப்பா அம்மா முக்கியம் தானே? அவர்களைத் தாண்டி வேறு என்ன உங்களுக்கு முக்கியமாக இருந்துவிடப் போகிறது.

எஸ்.பி.சக்திவேல்
எஸ்.பி.சக்திவேல்

அவர்களது அன்பு உங்களுக்கு எப்போதும் தேவையென்றால் ஹெல்மெட் இல்லாமல் வெளியே விடாதீர்கள். இதைத் தொடர்ந்து வலியுறுத்துங்கள். நிச்சயம் அவர்களும் ஹெல்மெட் பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதை மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கடைப்பிடித்தால், சாலை விபத்தில் மரணம் இல்லாத மாவட்டமாகத் திண்டுக்கல்லை உருவாக்க முடியும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு