சினிமா
Published:Updated:

‘இல்லம் தேடி கல்வி’ சர்ச்சைகள் சரியா?

இல்லம் தேடி கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லம் தேடி கல்வி

ஆறுமாத காலத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு தன்னார்வலர் வாரத்துக்கு 6 மணி நேரத்தை மையத்துக்கு ஒதுக்கவேண்டும்

இரண்டாண்டுகள் விலகியிருந்த பிள்ளைகள் மீண்டும் உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதேநேரம், 22 சதவிகித மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றிருப்பதாகத் தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. இவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவும், வகுப்பறைச் செயல்பாடே இல்லாமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தி கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காகவும் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஆரம்பத்திலேயே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

‘போதிய அளவுக்கு ஆசிரியர்களை நியமித்து குழந்தைகளை ஈர்க்கும் வகையில், பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய அரசு, ரூ.200 கோடியை தற்காலிகத் திட்டத்துக்கு செலவிடுவது வீண்’ என்று சிலர் குரலெழுப்புகிறார்கள். ‘மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம் என்ற தமிழக அரசு, படிப்படியாக மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது’ என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. ‘மதச் சார்புள்ள தொண்டு நிறுவனங்கள் இதில் ஊடுருவும் வாய்ப்புமிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள்.

 ‘இல்லம் தேடி கல்வி’ சர்ச்சைகள் சரியா?

இந்தச் சூழலில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் 92,297 குடியிருப்புகளில் இருந்து சுமார் 34,05,856 மாணவர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கிறார்கள். இந்தக் குடியிருப்புகள் அனைத்திலும் ‘இல்லம் தேடி கல்வி’ செயல்படும். 31.10.21 நிலவரப்படி https://illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 1.28 லட்சம் பேர் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் பெண்கள். பகுதிவாரியாகப் பிரித்து அந்தந்த வரம்புக்குள் வரும் பள்ளிகளுக்கு தன்னார்வலர் பட்டியல் அனுப்பப்படும்.

ஆறுமாத காலத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு தன்னார்வலர் வாரத்துக்கு 6 மணி நேரத்தை மையத்துக்கு ஒதுக்கவேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர். திண்ணை, சமுதாயக்கூடம், மொட்டை மாடி என பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானிக்கும் இடத்தில் மையம் செயல்படும். இந்தத் திட்டத்தை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் (சமக்ர சிக்ஷா) முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், எய்டு இந்தியா, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரசார அமைப்பு, அருணோதயா, பூமி, அகரம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும் பேராசிரியர் மாடசாமி, ராமானுஜம், காளீஸ்வரன், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், முத்துநிலவன், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி உள்ளிட்டோரும் இந்த திட்டத்தில் முக்கியப் பங்களிப்பு செய்கிறார்கள்.

 ‘இல்லம் தேடி கல்வி’ சர்ச்சைகள் சரியா?

“இரண்டாண்டுகளில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் மாற்றுச்சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். இதில் 2.50 லட்சம் குழந்தைகள் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். பள்ளிக்கு வராமல் இருந்த 1.50 லட்சம் குழந்தைகளை அடையாளம் கண்டு ஆசிரியர்கள் பள்ளியில் இணைத்துவிட்டார்கள். மீதமிருக்கும் 1 லட்சம் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்தக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டுவரவேண்டும். மேலும் இடைநிற்றல் அதிகரிக்காதவாறு செய்ய வேண்டும்.

கொரோனாவால் இதுவரை நம் தலைமுறை சந்தித்திராத பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறோம். குழந்தைகள் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலை பள்ளிக்கூடங்களால் மட்டுமே மாற்றமுடியாது. சமூகமே ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்போதிருக்கும் பெரிய சவாலே, பிள்ளைகளை முழுமையாக பள்ளிக்குக் கொண்டு செல்வதுதான். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் இல்லம் தேடி கல்வி திட்டம்...” என்கிறார் அகரம் பவுண்டேஷன் செயலாளர் ஜெய.

இந்தத் திட்டத்தை ‘இரண்டாவது அறிவொளி இயக்கம்’ என்கிறார் கல்வியாளரும் அறிவொளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவருமான ச.மாடசாமி.

“தெருக்களில் கல்வி மையங்களை உருவாக்கிய அறிவொளி இயக்கம் மிகப்பெரும் விளைவுகளையெல்லாம் உருவாக்கியது. விருதுநகரில் ஞானதேசிகன் ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு அறிவொளி மையத்தை நடத்தினார். அவர் பணிமாற்றம் செய்யப்பட்டபோது, அவரிடம் படித்த பெண்கள் ஒரு குத்துவிளக்கைப் பரிசாகத் தந்தார்கள். அதைப் பெற்றுக்கொண்டு அவர் கேவிக்கேவி அழுதார். ஷீலா ராணி சுங்கத் அப்போது புதுக்கோட்டை ஆட்சியர். அவரைச் சந்திக்கச் சென்றேன். நரிக்குறவர் பகுதியில் ஒரு இல்லத்தில் அறிவொளி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். சிவகங்கை ஆட்சியராக இருந்த குத்சியா காந்தி, ‘நான் இறந்தால் என் கல்லறையில் அறிவொளித் தொண்டர் என்று எழுதவேண்டும்’ என்று சொன்னார். இப்படி அதிகாரிகளின் முகங்களை எல்லாம் மாற்றியது அறிவொளி. காரணம், சமூகமும் கல்வியும் சந்தித்துக்கொண்டது. பள்ளிக் கல்வியை சமூகத்தில் இருந்து பிரிக்கவே கூடாது. ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் குறித்து முற்போக்காளர்களுக்கே பல அச்சம் கலந்த சந்தேகங்கள் இருக்கின்றன. அது தேவையற்ற அச்சம் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் மூலம் கல்வி மீண்டும் வீதிக்கு வருகிறது. பள்ளிக்கூடத்தின் விதிகள் அங்கே இருக்காது. ஆசிரியர்களின் கண்டிப்பான குரல் ஒலிக்காது. பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பார்கள். நினைத்ததைப் பேசுவார்கள். குழந்தைகளை சக்தி மிக்கவர்களாக இதுமாற்றும். குழந்தைகளின் இன்னொரு முகம் தெரியும். உரையாடல் நடக்கும். இங்கிருந்து குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது அவர்களின் இயல்பே மாறியிருக்கும்” என்கிறார் மாடசாமி.

இத்திட்டம் தொடர்பான அச்சங்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்க மாநில திட்ட இயக்குநர் சுதன் முன் வைத்து விளக்கம் கேட்டேன்.

மாடசாமி
மாடசாமி
சுதன்
சுதன்
ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

“இந்தத் திட்டத்தால் எந்த விதத்திலும் பள்ளிக்கல்விச்சூழல் பாதிக்கப்படாது. நம் பள்ளிக்கல்வியின் அடிப்படை மிகவும் வலுவானது. தற்போதைய பேரிடர் சூழலில் பள்ளியிலிருந்து விலகியிருந்த பிள்ளைகளை மீட்டு மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட குறுகிய காலத் திட்டம் இது. இது குழந்தைகளின் பன்முகத் திறனை வெளிக்கொண்டுவந்து பள்ளிச்சூழலையே மாற்றும்.

இந்தத் திட்டத்தின் செயல்திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கின்றன. மக்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். உள்ளூர் நபர்கள் மட்டுமே தன்னார்வலர்களாக செயல்படமுடியும். பள்ளி மேலாண்மைக் குழுவும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும்தான் அவர்களை இறுதி செய்வார்கள். எல்லா நிலையிலும், கண்காணிக்க, திட்டமிட, செயல்திட்டங்களை வகுக்க குழுக்கள் இருக்கின்றன. அதனால் தவறு நடக்கவோ, தவறான நபர்கள் ஊடுருவவோ வாய்ப்பேயில்லை.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் முதல் செயல்திட்டமே, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரை நேரில் சந்தித்து இந்தத் திட்டத்தைப் பற்றி பேசவேண்டும் என்பதுதான். பெற்றோர் அனுமதியில்லாமல் இந்தத் திட்டத்தில் எதுவும் நடக்காது. அதன்மூலம் பள்ளி மேலாண்மைக்குழு இயல்பாகவே செயல்படும்” என்கிறார் சுதன்.

காந்தி அமைதி விருது பெற்ற நைஜீரிய ஜனாதிபதி ஜூலியஸ் நைரேரே, ஒரு எழுத்தறிவு மையத்தை நடத்தி வந்தார். ‘பள்ளிகள் இருக்கும்போது ஒரு ஜனாதிபதி, எழுத்தறிவு மையம் நடத்துவது தேசத்தை அவமதிப்பதாகாதா’ என்று சிலர் விமர்சித்தார்கள். “வகுப்பறையில் கல்வியளிப்பது ஸ்டவ்வில் தீப்பற்றுவதுமாதிரி. வீதியில் கல்வி தருவது காடு தீப்பிடிப்பது போல... அவ்வளவு அனல் எழும்பும்’ என்றார் அவர்.நல்லது நடந்தால் நல்லது!