Published:Updated:

ஆடை திணிப்பா, சமத்துவத்தின் அச்சாரமா?!

கேரள மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேரள மாணவர்கள்

ஆண்கள் பேன்ட், சர்ட் போட்டுட்டு வெளிய வந்திட்டம்னா நைட்டு வரைக்கும் உடையைப் பத்திக் கவலைப்படுறது கிடையாது.

கேரளத்தில் மாணவர்களைப் போன்று மாணவிகளும் பேன்ட், சர்ட் சீருடை அணியும் `ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபாம்' திட்டத்தைப் பள்ளியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது ஆடைச் சுதந்திரம், சமத்துவம், சமநீதி எனப் பல தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘ஆண், பெண் சமத்துவத்தை சாத்தியப்படுத்தும் விதமாகவும், காலமாற்றத்தின் முன்னோடியாக கேரளம் தடம்பதிக்கும் விதமாகவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" எனக்கூறி, கோழிக்கோடு பாலுச்சேரி அரசு மேனிலைப் பள்ளியில் இதை அறிமுகம் செய்து வைத்தார் கேரள உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து. மற்ற அரசுப் பள்ளிகளிலும் இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது பினராயி விஜயன் அரசு. பாலுச்சேரி அரசுப்பள்ளி மாணவிகளும் இந்தச் சீருடை தங்களுக்கு வசதியாக இருப்பதாக மீடியாக்களிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் ‘உடையை மாற்றினால் ஆண், பெண் சமத்துவம் பிறக்குமா?' எனக் கேள்வி எழுப்பியபடியே சமத்துவச் சீருடைக்கு எதிரான குரல்களும் எழுகின்றன.

ஆடை திணிப்பா, சமத்துவத்தின் அச்சாரமா?!

‘‘சமத்துவம் ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாகுபாடு, குடும்பத்திலும் பாகுபாடு எனச் சமூகத்தில் எல்லா நிலையிலும் இந்தப் பிரச்னை உள்ளது. அரசியலிலும் பாகுபாடு உள்ளது. கேரளத்தில் பெண் முதலமைச்சர் வந்ததே இல்லை என்பது அதற்கு உதாரணம். இப்படி இருக்கும்போது சீருடையில் மட்டும் சமத்துவம் கொண்டுவரவேண்டும் எனக்கூறுவது தேவையில்லாதது. நாம் எதற்காக ஆண்களைப்போல ஆகவேண்டும்? ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள். பெண்ணின் தரத்தை ஆண் என்ற அளவுகோலை வைத்துத் தீர்மானிக்கக்கூடாது. ஆண்கள் அணியும் பேன்ட், ஷர்ட்டைப் பெண்கள் அணிய வேண்டும் என நிர்பந்திப்பது ஆடைச் சுதந்திரத்தின் மீதான திணிப்பாகும். ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றியல்ல, சமநீதியைப்பற்றிதான் இப்போது பேசவேண்டும்’’ என வாதிடுகிறார் ஹரித கேரளம் (பசுமைக் கேரளம்) அமைப்பின் நிர்வாகி ஆயிஷா பானு.

அதே சமயம் பெண்ணிய ஆர்வலர் சுல்ஃபத் டீச்சரோ, ‘‘பேன்ட், ஷர்ட் ஆண்களுக்கானது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பிறக்கும்போது யாரும் உடையுடன் பிறப்பதில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த உடை என்பதை சமூகம்தான் பிரித்து வைத்திருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒருகாலத்தில் வேட்டி கட்டிய பாரம்பர்யமும் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட பாரம்பர்யத்தை மாற்றி சமூக ரீதியாக உடையை நம்மீது திணித்தார்கள். அந்தத் திணிப்பில் ஆண்கள் வேகமாக பேன்ட், ஷர்ட்டைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் சற்று தாமதமாகத் தேர்ந்தெடுத்தனர். முஸ்லிம் அமைப்புகள்தான் ஜெண்டர் நியூட்ரல் யூனிஃபாமை எதிர்க்கின்றன. ஆனால் அவர்கள் பெண்களிடம் பர்தா போன்ற ஆடைகளைத் திணிக்கிறார்கள். இது முரண்பாடாக இருக்கிறது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும், ஷூ போடவும் முயன்றபோது, அவர்கள் ஆணாக முயல்கிறார்கள் என விமர்சித்தார்கள். கேரளத்தில் பல தொழிற்பயிற்சிக் கல்லூரிகளில் பெண்களுக்கு பேன்ட், ஷர்ட் உண்டு. தன்னைப்போலதான் தன்னுடன் இருப்பவர்களும் என்ற எண்ணத்தை சமத்துவச் சீருடை ஏற்படுத்தும். சமநீதிக்கான முதல்படிதான் யூனிஃபாம். சின்ன வயதிலேயே சமத்துவ நீதி போதிக்க வேண்டும். இதற்கு ஸ்கூலில் இருந்துதான் தீர்வு காணவேண்டும்’’ என்கிறார்.

குளச்சல் யூசப் - ஆர்.பிந்து
குளச்சல் யூசப் - ஆர்.பிந்து

சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் குளச்சல் யூசப், சமத்துவச் சீருடையை வரவேற்றதுடன் தமிழகத்திலும் அதை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரிடம் பேசினோம். ‘‘ஆண்கள் பேன்ட், சர்ட் போட்டுட்டு வெளிய வந்திட்டம்னா நைட்டு வரைக்கும் உடையைப் பத்திக் கவலைப்படுறது கிடையாது. ஆனா, பெண்கள் எப்பவுமே உடையில் கவனம் செலுத்திக்கிட்டே இருக்கணும். பேன்ட் சட்டை போடும்போது ஆண்களைப்போல ஃப்ரீயா எல்லாம் செய்யமுடியுது. இது வசதி கருதிய மாற்றம்தானே தவிர வெறும் சமத்துவம் மட்டுமல்ல. இதுக்குள்ள ஜெண்டர் ஈக்குவாலிட்டு வருதுன்னா, அது ரெண்டாவது பட்சம்தான். காலா காலமாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டே இருக்கும்.

நான் வேட்டி உடுத்துறேன். இது தமிழ் கலாசாரம். தமிழ்நாட்டு முஸ்லிமா இருக்கிற நான் உடுக்கிற வேட்டியை, வடநாட்டு முஸ்லிம்கள் உடுக்கமாட்டாங்க. ஒரே மதத்துக்குள்ளாலே கலாசாரம் மாறுபடுது. நாம கலாசாரப் பன்மைத்துவம் உள்ள நாட்டுல வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். கேரளத்தில நடக்கிறதை ஆண், பெண் சமத்துவமா மட்டும் நான் பார்க்கல. முக்கியமா நான் பார்க்கிறது அது பெண்களுக்கான வசதி. எவ்வளவு தொழிற்சாலைகளில பெண்களுக்கு பேன்ட், சர்ட் யூனிஃபாமா கொடுத்திருக்கிறாங்க. காலத்தின் தேவைகள் கருதி மாற்றக்கூடியதை, மதத்துக்குள்ளால தூங்கிட்டிருக்கிறவங்கதான் எதிர்க்கிறாங்க’’ என்றார்.

ஆரோக்கியமான விவாதம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.