Published:Updated:

எக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்... என்னங்க சார் உங்க திட்டம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்...
எக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்...

கொரோனாத் தொற்றின் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவருகிறது உலகம்.

பிரீமியம் ஸ்டோரி

ந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக மாணவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக் கிறார்கள். தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்திருந்த பலரும், கொரோனா கால பொருளாதார நெருக்கடியால் கட்டணம் கட்ட முடியாமல் தவித்தனர். அவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

இப்படி அரசுப் பள்ளிகளில் அதிகம் பேர் சேர்ந்திருப்பதை சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு, அந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி பெறுவதற்கு இந்தக் கல்வியாண்டில் என்ன செய்திருக்கிறது?

கொரோனாத் தொற்றின் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவருகிறது உலகம். தெருக்களிலும் அலுவலகங்களிலும் புத்தியல்பு திரும்பத் தொடங்கியிருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளாவும் புதுச்சேரியும் ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முடிவுசெய்துள்ளன. புதுச்சேரியில் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

எக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்...
என்னங்க சார் உங்க திட்டம்?

தமிழகத்தில் பள்ளித்திறப்பு குறித்து இன்னும் தெளிவாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் எனப் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில், இந்தக் கல்வியாண்டு முழுவதும் கல்விச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருக்கிறார்கள் அரசுப்பள்ளி மாணவர்கள். போதாக்குறைக்கு இப்போது ‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் இல்லை’ என்றும் ‘தனியார் பள்ளிகள் விரும்பினால் தேர்வு நடத்திக்கொள்ளலாம்’ என்றும் அறிவித்திருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

கடந்த கல்வியாண்டின் இறுதியில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்ததால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. ப்ளஸ் 1 பொதுத்தேர்விலும் ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய கல்வியாண்டு தொடங்கியதும் தனியார் பள்ளிகள் படிப்படியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. மாதத் தேர்வுகளும் காலாண்டுத் தேர்வும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன. பள்ளிகளைத் திறக்காமலேயே தமிழக அரசு காலாண்டு விடுமுறை அறிவித்த காமெடியும் இடையில் நடந்தது.

பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இறுதியில் ஒரு தொலைக்காட்சி தொடங்கியதோடு கடமையை முடித்துக்கொண்டது அரசு. உரையாடல் வாய்ப்புகளோ, தொழில்நுட்ப ரசனையோ இல்லாமல் இருண்மையாகப் பாடங்கள் நடத்தப்படுவதால் கல்வித் தொலைக்காட்சி மாணவர்களை ஈர்க்கவேயில்லை.

தனியார் பள்ளிகள் தலையெடுத்தபிறகு தமிழகக் கல்விச்சூழல் பெருமளவு பாகுபட்டுக் கிடக்கிறது. ஆனாலும் 65 சதவிகித மாணவர்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். ‘`வேலையிழப்பு, ஊரடங்கு, நோய்த்தொற்று பாதிப்பு எனப் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள குழந்தைகளை மேலும் பாதிக்கும் வகையிலும், பாகுபடுத்தும் வகையிலும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்’’ என்ற குற்றச்சாட்டை ஆட்சியாளர்கள்மீது வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

அருமைநாதன்
அருமைநாதன்

எந்தப் பேரிடராயினும் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அக்கறையுள்ள நல்லரசு, குழந்தைகளை முன்னிறுத்தியே திட்டங்களை உருவாக்கும். ‘பள்ளிகளைத் திறந்தால் கொரோனாத் தொற்று பரவக்கூடும்’ என்ற அச்சத்தில் எல்லோரும் இருப்பது உண்மைதான். ஆனால், கொரோனாத் தாக்கம் தீவிரமாகிய நேரத்தில் மாணவர்களின் மனநிலையை மாற்றவோ, தடையில்லாமல் கற்பிக்கவோ எந்தத் திட்டத்தையும் அரசு உருவாக்கவில்லை. பாடத்திட்டக் குறைப்பு போன்ற பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுக்களில் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளர்களையெல்லாம் நியமித்த அரசு, அரசுப்பள்ளி ஆசிரியர்களை இணைக்கவில்லை. முதல்வர் ஒரு பக்கம், அமைச்சர் ஒரு பக்கம், அதிகாரிகள் ஒரு பக்கமென மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டுக் குழப்பியதைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை.

‘`கல்வி சார்ந்த விஷயங்களில் அமைச்சருக்கு சரியான புரிதல் இல்லை. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏழு மாதங்களாக வகுப்பறைகளை விட்டு விலகியிருக்கிறார்கள். அவர்களின் மனநிலை, உடல்நிலை பற்றி எந்த விதமான ஆய்வுகளையும் அரசு செய்யவில்லை. மிகவும் காலம்தாழ்ந்து அறிவிக்கப்பட்ட உலர் சத்துணவுப் பொருள்கள் கூட பெரும்பாலா னோருக்குப் கிடைக்க வில்லை. நிறைய பெற்றோருக்கு வேலை போயிருக்கிறது. புலம்பெயர் தொழி லாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். இவர்களின் பிள்ளை களின் எதிர்காலம் என்னாகும், இவர்களில் எத்தனை பேர் மீண்டும் பள்ளிக்கு வருவார்கள் என்று தெரியவில்லை’’ என வருந்துகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் கொத்துக்கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் சூழல் வந்துவிட்டதா என்று யாருக்கும் தெளிவில்லை. அரசு மாறி மாறி நாள்குறிக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பொது சுகாதாரத் துறை என உரிய நிபுணர்களிடம் அறிக்கைகள் பெற்று ‘இதுதான் நிலை, இந்த நேரத்தில்தான் திறப்போம்’ என்று தெளிவாகச் சொல்லி, இடைப்பட்ட நாள்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தால் போதும். ஆனால், கல்வி அமைச்சரும் முதல்வரும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிடுகிறார்களே தவிர, சுகாதாரத்துறை மூலம் எந்த ஆய்வும் நடக்கவில்லை.

ஒரே கிராமத்தில், ஒரே தெருவில், ஒரே வகுப்பு படிக்கும் சில பிள்ளைகள் பாடப்புத்தகங்களில் பாதியை முடித்துவிட்டு பயிற்சித் தேர்வுகளையும் எழுதும் நிலையில், சில பிள்ளைகள் இன்னும் பாடப்புத்தகங்களையே தொடாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாகுபாடு? இது எவ்வளவு பெரிய உளவியல் சிக்கலை உருவாக்கும்? ஒருவேளை, இந்தக் கல்வியாண்டு முழுவதுமே பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் மாணவர்களின் நிலை என்ன? புத்தகங் களைப் படிக்காமல், தேர்வே எழுதாமல் பிள்ளைகள் அடுத்த வகுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டால், ஆன்லைன் வகுப்பில் நாள்களைத் தொலைத்துத் தேர்வு களில் தேய்ந்த தனியார் பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு என்ன பதில்?

சென்னையில் மட்டும் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கிறார்கள். தமிழகமெங்கும் பத்தாயிரத்துக்கும் மேல் இருக்கும். பெற்றோர் அருகில் உள்ள மார்க்கெட்டிலோ, தெருவிலோ வேலை செய்ய, இரவில் கடைகள் மூடப்பட்டதும் அவற்றின் வாசலில் தூங்கி எழுபவர்கள் இவர்கள். அருகிலிருக்கும் பள்ளிகளில் படித்தவர்கள். பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தக் குழந்தைகள் கல்வியை முற்றிலும் இழந்திருக்கிறார்கள். இந்தக் குழந்தைளுக்கு வீடும் இல்லை. டிவியும் இல்லை. செல்போனும் இல்லை. இவர்களைப் பற்றி அமைச்சர் அறிந்திருப்பாரா என்றும் தெரியவில்லை.

‘`இந்தக் குழந்தைகள் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்பவர்கள். பெற்றோரால் சொல்லிக்கொடுக்க முடியாது. இவர்களைப் பற்றி அரசு சிறிதும் கவலைப்படவில்லை. தற்போது இந்தக் குழந்தைகளில் பலர் குழந்தைத்தொழிலாளர்கள் ஆகிவிட்டார்கள். இவர்களை மீட்டு மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவது சவாலான வேலை. இவர்களது எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாகவும் கவலையாகவும் இருக்கிறது’’ என்கிறார், இவர்களின் கல்விநிலை குறித்து ஆய்வு செய்துவரும் நகர்ப்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகி வெனிசா பீட்டர்.

ஆங்காங்கே சில ஆசிரியர்கள் தன்னார்வத்தில் வாட்ஸப் குரூப் தொடங்கியும், மாணவர்கள் வசிக்கும் தெருக்களுக்கே சென்றும் வகுப்பெடுக்கிறார்கள். அந்த ஆசிரியர்களை உற்சாகப்படுத்தவும் அரசு தவறிவிட்டது.

‘‘முதலில் ‘ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது’ என்றார்கள். பிறகு ‘தனியார் பள்ளிகளில் நடத்தலாம்’ என்றார்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு
அதிக அளவு மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள்மீது துளியளவும் கரிசனம் காட்டவில்லை.

பணமிருப்பவர்களுக்கே கல்வி என்ற நிலையை அரசு உருவாக்கிவிட்டது. அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதாக முடிவெடுத்தால், எல்லாப் பள்ளிகளுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதே முறை. ஆனால், இங்கேயும் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி பாகுபாட்டை முன்னிறுத்துகிறார்கள். டிவி, லேப்டாப்பெல்லாம் கொடுக்கிற அரசால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூவாயிரம் செலவில் ஒரு டேப்லெட் கொடுக்க முடியாதா? பள்ளிக்கல்விக்கென பட்ஜெட்டில் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு துளிதான் இந்தச் செலவு. ஆனால் அரசு செய்யவில்லை. அரசுப் பள்ளியை நம்பிய குழந்தைகளின் எதிர்காலத்தைத் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்கு பலியாக்கிவிட்டது தமிழக அரசு’’ என்கிறார், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமைநாதன்.

அரசியலமைப்பின் பிரிவு 14, ‘யாருக்கும் சமத்துவம் மறுக்கப்படக்கூடாது’ என்கிறது. பிரிவு 21, ‘தனி மனிதரின் வாழ்வுரிமை எந்தச்சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது’ என்கிறது. தமிழக அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனாப் பேரிடரின் கொடும் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு புத்தியல்புக்குத் திரும்பும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். குழப்பமிக்க அறிவிப்புகளால் மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை விதைக்கக்கூடாது!

வினிஷா பீட்டர்
வினிஷா பீட்டர்

உதவிபெறும் பள்ளிகளுக்கு உதவவில்லை!

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. ‘`அரசு உதவி பெற்றாலும் அவை தனியார் பள்ளிகள்தான்’’ என்றார் முதல்வர். ஆனால், ‘`அரசுப் பள்ளிகளைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு ரத்து’’ என்கிறார் கல்வி அமைச்சர். கல்வி விஷயத்தில் இந்த அடிப்படை முரண்பாட்டைக்கூட முதல்வரும், கல்வி அமைச்சரும் தீர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் சோகம்.

கேள்விகள் ஏராளம்... பதில் கிடையாது!

அரையாண்டுத் தேர்வு ரத்து விஷயத்தில் ஏன் தனியார் பள்ளிகளுக்கு விலக்கு? இது பாகுபாட்டை உருவாக்காதா? கடந்த ஏழு மாதங்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றலிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பது சரியா? கல்வித் தொலைக்காட்சியால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? அதைப் பார்க்கும் மாணவர்களின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா? பள்ளி தொடர்பாக முடிவெடுக்கும்போது ஏன் ஆசிரியர்களைக் கலந்தாலோசிப்பதில்லை? கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தேர்ச்சிபெறச் செய்ய காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் அரையாண்டுத் தேர்வு எழுதி, அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதாவிட்டால் எப்படி தேர்ச்சியைத் தீர்மானிக்கப்போகிறீர்கள்? பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும்? பொதுசுகாதாரத்துறை ஏன் இதுபற்றி ஆய்வு செய்யவில்லை? அரசுப் பள்ளி மாணவர்களின் தற்போதைய நிலை பற்றி ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறீர்களா?

இப்படி நிறைய கேள்விகளோடு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொண்டேன். கேள்விகள் குறித்துக் கேட்டறிந்த உதவியாளர், தலைமைச் செயலகத்தில் அமைச்சரைச் சந்திக்க வருமாறு அழைத்தார். அமைச்சரின் அறையில் சுமார் மூன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, ‘’தற்போதைக்கு எதுவும் பேசமுடியாது’’ என்பதை மட்டுமே பதிலாகத் தந்தார் செங்கோட்டையன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு