
தலையங்கம்
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வந்திருக்கின்றன. இது முழுமையானதல்ல. முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்திருக்கிறது. அதிலும், சமீபத்தில் பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களின் ஊரகப்பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
`அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். கிராமங்கள் தமக்கான தேவையைத் தாங்களே நிறைவுசெய்துகொள்ளும் ஆற்றல்பெற வேண்டும்’ என்பது காந்தியடிகளின் கனவு. இதனடிப்படையில் உருவான பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் மூலம்தான், பழைய உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீடு எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதன்மூலம், மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. நடந்துமுடிந்துள்ள தேர்தலில் ஆங்காங்கே சிறுசிறு மோதல்கள், எதிர்ப்புகள், அதிருப்திகள் இருந்தபோதும் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் ரியா என்ற திருநங்கை, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவுத் தொழிலாளராகப் பணிபுரிந்த சரஸ்வதி, தேர்தலில் போட்டியிட்டு அந்தப் பஞ்சாயத்தின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.என். தொட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றிபெற்றுள்ளார். இப்படிப் பல நம்பிக்கைகளை இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்களித்துள்ளன.
தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால் அரசியல் கட்சிகளைத் தாண்டிப் பல காரணிகள் இருக்கின்றன என்றபோதும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வைவிட தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளுங்கட்சி தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. அதை ஆக்கபூர்வமாக அந்தக் கட்சி செய்துமுடிப்பதில்தான் இருக்கிறது அக்கட்சியின் எதிர்கால வெற்றிகள்!
இதற்கு நடுவே, வழக்கம்போல குதிரை பேரங்கள் ஆரம்பமாகியிருப்பது வேதனையைக் கூட்டுகிறது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவரை கவுன்சிலர்கள்தாம் தேர்வு செய்யவேண்டும். அதனால், அவர்களுக்கு லட்சங்களை அள்ளிக்கொடுப்பது, பணியாவிட்டால் கடத்திச் செல்வது எனக் கீழ்த்தரமான சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இதையெல்லாம் தடுக்கவேண்டிய ஜனநாயகக் கடமை அனைத்துக் கட்சிகளுக்குமே இருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இது பதவி நாற்காலி என்பதைவிடவும், ‘மக்களுக்குப் பணியாற்றக் கிடைத்த ஜனநாயக வாய்ப்பு, நம் தோள்களின்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கையான பொறுப்பு’ என்பதை உணர்வதுதான் முக்கியம். அதை உணர்ந்து செயல்படும்போதுதான் உண்மையான உள்ளாட்சி மலரும்!