சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்னைகளில் மத்திய அரசும் தமிழக ஆளுநரும் நடந்துகொள்ளும் விதம் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும்வகையில் உள்ளது.

மருத்துவப் படிப்புக்காக மாநிலங்களால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும், பொருளாதார அடிப்படையில் முற்பட்ட சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்று அறிவித்தது. இதை எதிர்த்துத் தமிழகத்தின் பல கட்சிகளும் தொடுத்த வழக்கில் `மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்' என்று ஜூலை 27-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் `சாப்ட்வேர் தயாராக இல்லை' என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி `நடப்பு ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது' என்று கைவிரித்துள்ளது மத்திய அரசு.

`மத்திய அரசு கொண்டுவந்துள்ள முற்பட்டோருக்குப் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு' எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும்போதே, அதைப் பொருட்படுத்தாமல் நடைமுறைப்படுத்தும் மத்திய அரசு, `பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகும் தட்டிக்கழிப்பது என்ன நியாயம்? ‘அனைத்து மக்களையும் சமமாக நடத்துகிறோம்' என்று நிரூபிக்க வேண்டியது அரசின் கடமையல்லவா?

`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்

அதேபோல் `மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்குவதில் விருப்பமில்லை' என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நெடுங்காலமாகவே மருத்துவம் பயில்பவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் கிராமப்புறங்களிலும் பணிபுரிந்தால் அவர்களுக்கு மேற்படிப்பில் முன்னுரிமை இருந்தது. இதனாலேயே ஆரம்பசுகாதார நிலையம் முதல் கிராமப்புற அரசு மருத்துவமனைகள் வரை ஏழை மக்களுக்கு மருத்துவச்சேவை கிடைக்கிறது. இப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டால், மருத்துவம் படிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் காட்டாத நிலை உருவாகி, சுகாதாரக் கட்டமைப்பே சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்னொருபுறம் `நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டு மசோதா'வைத் தமிழக அரசு அனுப்பி ஒருமாதம் கடந்தும் ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, `முடிவெடுக்க ஆளுநருக்கு ஒருமாத அவகாசம் போதாதா?' என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. ஆனால் இன்னும் ஆளுநரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.

கடந்த ஆண்டு 14,929 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 6,692 என்ற அளவில் குறைந்துள்ளதைக் கவலையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சுட்டிக்காட்டியுள்ளது. குளறுபடிகளுக்குப் பிறகு வந்துள்ள நீட் தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்துள்ளது. தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கவும் இனிவரும் ஆண்டுகளிலாவது நீட் தேர்வெழுதும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் ஆளுநர் உடனடியாக ‘அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா’வுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். மத்திய அரசு சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நடப்பாண்டிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்க முன்வர வேண்டும்.