Published:Updated:

"அரசுப் பள்ளிகளை நூலகமாக்குவது வெறும் கண் துடைப்புதான்!" கல்வியாளர் ஆதங்கம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்பதை காரணம் காட்டி, நூலகம் அமைக்கும் அரசின் முடிவு சரியானதுதானா?

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

'மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், அரசுப் பள்ளியை நூலகமாக்கப்படுகிறது' என்பதை அறிவிக்கும் அரசாணை சமீபத்தில் பரவலாக பகிரப்பட்டது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்திலுள்ள குளத்தூர் மற்றும் ஆவுடையார் கோவில் வட்டத்திலுள்ள சின்னபட்டமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால், அந்தப் பள்ளிக் கட்டடங்களில் நூலகம் அமைக்கப்படும் என்றும், காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நூலகம் திறந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு பணிபுரிய தற்காலிகப் பணியாளரை நியமிப்பதற்கான கல்வித்தகுதியும் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய நூலகங்களுக்கு 500 புத்தகங்கள் வழங்கப்பட்டு, அவை மாதந்தோறும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் என்றும் சொல்கிறது அந்த அரசாணை.

அரசாணை
அரசாணை
அரசாணை
அரசாணை

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு என்பதை காரணம் காட்டி, நூலகம் அமைக்கும் அரசின் முடிவு சரியானதுதானா என்று பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

"அரசுப் பள்ளிகளை மூடுதல் என்று சொன்னபோது, அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால், பள்ளிகளை இணைக்கிறோம் என்றார்கள். அப்படி இணைத்தாலும் தொடக்கக் கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருக்குமே என்று கேள்வி எழுப்பப்பட்டதும், 'அதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடுசெய்வோம்' என்றனர். எல்லாமே பதில்களாகவே இருக்கு; ஆக்கபூர்வமான செயல்கள் இல்லை.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப்பாதுக்காப்பு இயக்கம்
ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப்பாதுக்காப்பு இயக்கம்

ஓர் அரசு, எந்தக் காரணத்தைக்கொண்டும் பள்ளிகளை மூடவே கூடாது என்பதே நம் கருத்து. ஒருவேளை மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால், அதை எப்படிச் சரிசெய்வது என்பதைத்தான் அரசு ஆலோசிக்க வேண்டும்; அவற்றைச் சரிசெய்து பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும். ஒரு பள்ளியில் மாணவர் ஏன் சேரவில்லை என்பதை அந்தப் பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எல்லோரிடமும் உரையாடி, உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, குறைகள் களையப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவை முறையாகச் செயல்படவைக்க வேண்டும். அந்தக் குழுவோடு அரசு அதிகாரிகள் பேசினாலே பெரும்பாலான பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.

சில பள்ளிகளில் நான்கு, ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்தாலும் ஓராசிரியர் பள்ளியாக நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டு, அங்கு புதிய மாணவர் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். தேவைப்பட்டால், அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியை வேண்டுமானால் மூடச்செய்யலாம். ஏனென்றால், உலகம் முழுவதும் நடைமுறையிலிருந்துபார்க்கும்போது, கல்வியை அரசுதான் தர வேண்டும். அப்போதுதான் எல்லாருக்கும் கல்வி கிடைக்கும்.

கேரளாவில், அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றார்கள். அவர்களில் பலரும் தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வந்தவர்கள்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி

ஆங்கில மொழி கற்றல்மீது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய மோகம் இருக்கிறது. அதனால்தான், அரசுப் பள்ளியைத் தவிர்த்து, தனியார் பள்ளியை நாடுகிறார்கள் எனச் சொல்லப்படுவது முழு உண்மையல்ல. இதை நம் அண்டை மாநிலமான கேரளாவிடமிருந்தே உணர்ந்துகொள்ள முடியும். அங்கும் இப்படியான நிலை வந்தபோது, எந்தெந்தக் காரணங்களால், மக்கள் தனியார் பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவற்றையெல்லாம், குறிப்பிட்ட பகுதிக்கு ஓர் அரசுப் பள்ளிக்குச் செய்துதந்தார்கள். ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், வகுப்பறை வசதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ததும், அங்கு அட்மிஷனுக்கு மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றார்கள். அவர்களில் பலரும் தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வந்தவர்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் 5,00,000-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். 5,00,000 மாணவர்கள் படித்துவந்த தனியார் பள்ளிகளை அரசு மூடவில்லை. ஆனால், அங்கு படித்தவர்களை அரசுப் பள்ளியை நோக்கி வர வைத்துவிட்டது அல்லவா? இவற்றையெல்லாம் தமிழக அரசும் செய்திருக்க வேண்டும்தானே... அதற்கு முன் பள்ளிகளை நூலகமாக்க முடிவெடுப்பது சரியானதல்ல.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
அரசின் இந்த முடிவுக்கு, பெற்றோர்களும் ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் உடனே எதிர்த்து குரல்கொடுக்க வேண்டும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி

இப்போது இருக்கும் நூலகங்களுக்கே பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது. நூலகங்களுக்கு மக்கள் செல்வதும் குறைந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளை நூலகமாக்கினால், இந்தக் காரணங்களைச் சொல்லியே அவற்றை மூடும் முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதை வைத்துப்பார்க்கும்போது, அரசுப் பள்ளிகளை நூலகமாக்குவது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். பள்ளிகளை நேரடியாக மூடுவதற்குப் பதில் இப்படிச் சுற்றிவளைத்து மூடுகிறார்கள்.

ஸ்கைபில் ஆங்கிலப் பயிற்சி, கணினியில் கணிதம்... அசத்தும் கோனேரி குப்பம் அரசுப்பள்ளி மாணவர்கள்!

அரசின் இந்த முடிவுக்கு, பெற்றோர்களும் ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் உடனே எதிர்த்து குரல்கொடுக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றுவதும், அதை வளர்த்தெடுப்பதும் சமூகக் கடமையாகப் பொதுமக்கள் நினைக்க வேண்டும். இல்லையெனில், அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கல்வியே பெரும் கனவாகிவிடும்" என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார் ஜெ.கிருஷ்ணமூர்த்தி.