Published:Updated:

பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையைச் சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்! - ஈரோடு அதிர்ச்சி

ஈரோடு பள்ளி மாணவர்கள்

ஈரோடு முள்ளம்பட்டியைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையைச் சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்! - ஈரோடு அதிர்ச்சி

ஈரோடு முள்ளம்பட்டியைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

Published:Updated:
ஈரோடு பள்ளி மாணவர்கள்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில்தான் பேனாவைப் பிடிக்கும் பிஞ்சுகள் கழிவறையைச் சுத்தம் செய்ய துடைப்பத்தைப் பிடிக்கின்றன. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அந்த வீடியோவில் இரண்டு குழந்தைகள் பள்ளிக் கழிவறையைச் சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வீடியோ எடுத்த நபர், ``நீங்க ஏன் பாத்ரூம் கழுவுறீங்க?" எனக் கேட்கவும், அந்தக் குழந்தைகள் ``யார் முதலில் பள்ளிக்கு வருகிறார்களோ அவர்கள்தான் பாத்ரூமைக் கழுவ வேண்டும்" என்றனர். மேலும், ``யார் உங்களை இப்படி செய்ய சொன்னது?" எனக் கேட்டதற்கு ``எங்க டீச்சர்தான்" என்று பதில் கூறியிருந்தனர். இதேபோல மற்ற மாணவர்களும் தொடர்ச்சியாகக் கூறியிருந்தனர்.

கழிவறை
கழிவறை

இந்தச் சம்பவம் தொடர்பாக, முள்ளம்பட்டி ஊராட்சிப் பிரதிநிதி ஒருவரிடம் பேசினோம். ``இது ஒன்றும் புதிதில்லை; பல நாள்களாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்தான்! சமீபத்தில் எங்கள் ஊரில் கல்லூரி மாணவர்கள் NSS Camp போட்டிருந்தார்கள். அவர்களுக்கு அது புதிதாகப் பட்டதால் அதை வீடியோ எடுத்திருக்கின்றனர். கிராமத்திலுள்ள பெரும்பாலானோருக்கு இந்தச் செய்தி தெரியும்" என்று கூறி அதிரவைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் தொடர்ந்தவர், ``அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். அந்தப் பள்ளியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் படிக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல பயப்படுகின்றனர்" என்றார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இது தொடர்பாக அந்த கிராம மக்களிடம் சிலரிடம் பேசினோம். ``நாங்க டீச்சர்களிடம் சொன்னோம், `எங்க குழந்தைகளை இதைச் செய்யச் சொல்லாதீங்க; இதற்கு ஒரு ஆள் போட்டுக்கோங்க’னு... ஆனா அவங்க செய்யலை. பொதுமக்களால ஒண்ணும் செய்ய முடியலை. தொடர்ந்து நடக்குற இந்தச் சம்பவத்துக்கு எழுத்து மூலமாகவோ, புகைப்படம் மூலமாகவோகூட எங்களுக்கு எந்தச் சாட்சியும் இல்லை! பாதிக்கப்படுறது பட்டியலினச் சமுதாயம் என்கிறதால இதை யாரும் பெருசா கண்டுக்கலை" என்றார் ஒருவர்.

சாதி
சாதி

மற்றொருவர், ``டீச்சர்களுக்கு பெருசா தண்டனை கொடுக்கலைனாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் அவர்களை பணியிட மாற்றம் செஞ்சாக்கூட அவங்களுக்கு பயம் இருக்கும்! ஆனா அது நடக்கலை. தொடர்ந்து இந்த ஆசிரியர்களே பள்ளிக்கூடத்துல இருந்தா, மாணவர்களுக்கு பய உணர்வுதான் வரும்! ஆசிரியர்களுக்குப் பழிவாங்கும் மனோபாவம்கூட ஏற்படலாம்! இதற்கு ஏதாச்சும் அரசாங்கம் வழிசெய்யணும்!" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி மாணவர்கள் கழிவறையைச் சுத்தம் செய்வது குறித்து கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு வந்த தகவல்கள், இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரனை நடத்தியுள்ளதாகவும், நாம் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகளை அப்படிச் செய்யவைத்ததாக ஆசிரியர்கள் தெரிவித்ததாகவும் தெரிவிக்கின்றன.

மனுகொடுக்கும் மக்கள்
மனுகொடுக்கும் மக்கள்

இந்த நிலையில், முள்ளம்பட்டி ஊரைச் சேர்ந்த மக்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism